முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழ் சினிமாவின் பிரபல பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்

வியாழக்கிழமை, 2 மே 2024      சினிமா
Uma-Raman 2024-05-02

Source: provided

சென்னை : தமிழ் சினிமாவின் பிரபல பின்னணி பாடகி உமா ரமணன், 69 உடல் நலக்குறைவால் சென்னையில் காலமானார். திரை உலகில் பின்னணி பாடகிகளில் இவரது குரல் வித்தியாசமானதாகவும், தனித்தன்மை வாய்ந்ததாகவும் கருதப்பட்டது. இதற்காக இவருக்கு அதிகமான வாய்ப்புகளை இளையராஜா வழங்கினார்.

சென்னை அடையாறு பகுதியில் வசித்து வந்த உமா ரமணன் கடந்த சில மாதங்களாக உடல்நலப் பிரச்னையால் அவதிப்பட்டு அதற்கான சிகிச்சை எடுத்து வந்தார். இந்நிலையில் அவரது இல்லத்திலேயே நேற்று முன்தினம் இரவு (மே 1) காலமானார். இசைக்கலைஞர் ஏவி ரமணனின் இசை குழுவில் பாடி வந்த உமா பின்னர் ரமணனையே காதலித்து திருமணம் செய்து கொண்டார். 1978ல் கிருஷ்ணலீலை படத்தில் இடம் பெற்ற மோகனக்கண்ணன் என்ற பாடல் மூலம் சினிமாவில் பாடகியாக அறிமுகமானார்.

பின்னர் நிழல்கள் படத்தில் பூங்கதவே தாழ் திறவாய் பாடல் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமான உமா, தொடர்ந்து இளையராஜா இசையில் பல சூப்பர் ஹிட் பாடல்களை பாடி உள்ளார். எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா, வித்யாசாகர் உள்ளிட்ட வெகு சில இசையமைப்பாளர்களிடம் பணியாற்றினாலும் பெரும்பாலும் இளையராஜா இசையில் தான் அதிக பாடல்கள் பாடி உள்ளார். அவரது இசையில் மட்டும் கிட்டத்தட்ட 100 பாடல்களை பாடி உள்ளார்.

கடந்த 50 ஆண்டுகளில் சினிமா தவிர்த்து கணவர் ரமணன் உடன் இணைந்து 6 ஆயிரம் மேடை கச்சேரிகளில் பாடல்கள் பாடி உள்ளார். இவரது கணவர் ஏவி ரமணனும் இசை துறையை சார்ந்தவர் தான். அவரது இசையில் வெளியான நீரோட்டம்' படத்திலும் கணவர் உடன் இணைந்து பாடல்கள் பாடி உள்ளார். ரமணனும் பாடல்கள் பாடி உள்ளார். நிறைய படங்களில் குணச்சித்ர வேடங்களிலும் நடித்துள்ளார். சினிமா, தங்களது இசைக் குழு தவிர்த்து வேறு பொது வெளியில் உமா ரமணன் பெரியளவில் வர மாட்டார். எந்த ஒரு சமூகவலைதளங்களிலும் அவர் இல்லை. ஊடகம் உள்ளிட்ட எந்த ஒரு தளத்திலும் அவர் பேட்டி கொடுத்தது இல்லை.

உமா ரமணனின் மறைவு இசை ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அவரது இறுதிச்சடங்கு நேற்று (மே 2) மாலை நடைபெற்றது. உமா ரமணனின் மறைவுக்கு இசை ரசிகர்கள், திரைப்பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து