முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முல்லை பெரியாறு அணை விவகாரம்: தமிழக உரிமைகளை நிலைநாட்ட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஓ.பி.எஸ்.

செவ்வாய்க்கிழமை, 15 பெப்ரவரி 2022      அரசியல்
Image Unavailable

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழகத்தின் உரிமைகளை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, 

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழகத்தின் உரிமைகள் பறிபோய்க் கொண்டிருக்கின்றன. தி.மு.க. அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற ஆறு மாத காலத்திற்குள்ளாகவே, கேரள நீர்ப்பாசனத் துறை அமைச்சர், கேரள வருவாய்த் துறை அமைச்சர் மற்றும் இடுக்கி மாவட்ட கலெக்டர் ஆகியோர் முன்னிலையில் முதன்முறையாக முல்லைப் பெரியாறு அணையிலிருந்து கேரளாவுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டதன் மூலம் தமிழகத்தின் உரிமை கேரளாவிடம் அடகு வைக்கப்பட்டு விட்டது. இதுகுறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று தமிழக முதல்வரிடம் நான் கோரிக்கை விடுத்தும் சரியான விளக்கம் ஏதும் அரசு சார்பில் அளிக்கப்படவில்லை. 

இதனைத் தொடர்ந்து, முல்லைப் பெரியாறு அணையின் ஒட்டுமொத்தப் பாதுகாப்பு மற்றும் அதனுடைய கட்டமைப்புகள் திருப்திகரமாக இருப்பதாக தெரிவித்து விட்டு, அணையின் பாதுகாப்பினை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று அணைப் பகுதிகளில் வலுப்படுத்தும் பணிகளை மேற்கொள்ள ஒத்துழைக்காத கேரள அரசுக்கு ஆதரவாக சுப்ரீம் கோர்ட்டில் மத்திய நீர்வள ஆணையம் மனுத் தாக்கல் செய்திருக்கிறது. இதன்மூலம் வலுவான வாதங்கள் தமிழக அரசு சார்பில் வைக்கப்படவில்லையோ என்ற சந்தேகம் முல்லைப் பெரியாறு விவசாயிகளிடையே ஏற்பட்டுள்ளது. 

அந்தப் பகுதியில் கேரள அமைச்சர்களும், அதிகாரிகளும் வந்து தண்ணீர் திறந்து விடுவதும், அணையை ஆய்வு செய்வதும், மதகுகளின் கதவுகளை மேற்பார்வையிடுவதும், இதனை தமிழக அரசு கண்டும் காணாமல் வேடிக்கைப் பார்ப்பதும் கடும் கண்டனத்திற்குரியது. முல்லைப் பெரியாறு அணையின் ஒரே உரிமையாளர் தமிழகம் தான் என்பது நிலைநிறுத்தப்பட வேண்டும் என்பதும் விவசாயிகளின் கருத்தாக இருக்கிறது.

எனவே, தமிழக முதல்வர் முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழகத்தின் உரிமைகளை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அ.தி.மு.க. சார்பில் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் ஓ.பி.எஸ். தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து