முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆந்திர மாநிலத்தில் 25 பேர் கொண்ட புதிய அமைச்சரவை பதவியேற்பு: நடிகை ரோஜா அமைச்சரானார்

திங்கட்கிழமை, 11 ஏப்ரல் 2022      இந்தியா
Roja 2022-04-08

ஆந்திர மாநிலத்தில் 25 பேர் கொண்ட புதிய அமைச்சரவை நேற்று பதவியேற்றுக் கொண்டது. புதிய அமைச்சரவையில் நடிகை ரோஜா இடம்பெற்றுள்ளார்.

ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. அந்த கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி முதல்வராக இருக்கிறார். 2019 சட்டசபை தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியை பிடித்தபோதே இரண்டரை ஆண்டுகளில் அமைச்சரவை மாற்றியமைக்கப்படும். புதியவர்களுக்கு அமைச்சரவையில் வாய்ப்பளிக்கப்படும் என்று ஜெகன்மோகன் ரெட்டி கூறினார். அதன்படி இரண்டரை ஆண்டுகள் கடந்த டிசம்பர் மாதம் நிறைவடைந்தாலும், கொரோனா தொற்று காரணமாக அமைச்சரவை மாற்றம் ஒத்திவைக்கப்பட்டது.

கடந்த வாரம் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் அமைச்சரவையை மாற்றியமைக்க முடிவு செய்யப்பட்டது. உடனடியாக கவர்னர் பிஸ்வா பூ‌ஷன் அரிச்சந்திரனுடன் ஜெகன்மோகன் ரெட்டி ஆலோசனை நடத்தினார். இதைத் தொடர்ந்து அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த 24 பேரும் அவர்களின் பதவியை கடந்த வியாழக்கிழமை ராஜினாமா செய்தனர். இன்று புதிய அமைச்சரவை பதவியேற்கும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி புதிய அமைச்சரவை தொடர்பாக தாடப்பள்ளியில் உள்ள முகாம் அலுவலகத்தில் அரசு ஆலோசகர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகளுடன் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி நேற்று முன்தினம் ஆலோசனை நடத்தினார். அதைத் தொடர்ந்து 25 அமைச்சர்கள் கொண்ட பட்டியல் கவர்னருக்கு நேற்று முன்தினம் மதியம் அனுப்பி வைக்கப்பட்டது.

இதில் ஏற்கனவே பதவியில் இருந்த 11 பேருக்கு மீண்டும் அமைச்சரவையில் இடம் கிடைத்துள்ளது. 14 பேர் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இதில் நகரி தொகுதி எம்.எல்.ஏ.வான நடிகை ரோஜாவுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. நகரியில் தொண்டர்கள் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டியின் சிலை அருகிலும் நகரியில் உள்ள ரோஜாவின் வீட்டின் அருகிலும் கட்சி அலுவலகத்தின் முன்னும் பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாடினார்கள்.

புதிய அமைச்சரவை நேற்று பதவியேற்றது. தலைமைச் செயலகத்தை ஒட்டியுள்ள காலி மைதானத்தில் பதவியேற்பு விழா நடந்தது.புதிய அமைச்சர்களுக்கு கவர்னர் பிஸ்வா பூ‌ஷன் அரிச்சந்திரன் பதவி பிரமாணம் செய்து வைத்தார். புதிய அமைச்சரவையில் கடந்த முறை போலவே 5 துணை முதல்வர்கள் உள்ளனர். காப்பு சமுதாயம், பட்டியலினத்தவர், பழங்குடியினர், முஸ்லிம் சமூகத்தை சேர்ந்த ஒருவர் துணை முதல்வராக இருப்பார்கள் என்று கூறப்படுகிறது.

ரோஜாவின் அரசியல் பயணம்

நடிகை ரோஜா திருப்பதி அருகே பிறந்தவர். பின்னர் அவரது குடும்பம் ஐதராபாத் சென்றது. அங்கே கல்லூரி படிப்பை முடித்தார். 1991ல் தெலுங்கில் ராஜேந்திர பிரசாத்துடன் நடித்தார். தமிழில், ஆர்.கே. செல்வமணி இயக்கத்தில் செம்பருத்தி படத்தில் அறிமுகமானார். ஆர்.கே.செல்வமணியை 2002ல் காதல் திருமணம் செய்தார். இந்த தம்பதிக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாள மொழிகளில் பல வெற்றி படங்களில் நடித்தவர்.

1999ம் ஆண்டு தெலுங்கு தேசம் கட்சியில் சேர்ந்தார். அப்போது போட்டியிட்டு 2004-ல் நகரியிலும், 2009-ல் சந்திரகிரியில் தோல்வியடைந்தார். அதன்பின்னர் 2009-ம் ஆண்டு ஒய்.எஸ்.ஆர். காங்கிரசில் இணைந்தார். தமிழக-ஆந்திர எல்லையில் உள்ள நகரி தொகுதியில் போட்டியிட்டு 2 முறை எம்.எல்.ஏ. ஆனார். 2019-ல் ஜெகன்மோகன் ரெட்டி முதல்வரானபோது ரோஜாவுக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அவருக்கு ஆந்திர மாநில தொழிற்சாலைகள் உட்கட்டமைப்பு பிரிவு தலைவர் என்று முக்கியப்பதவி கொடுக்கப்பட்டது. இப்போது அமைச்சர் ஆகியுள்ளார்.

மீண்டும் அமைச்சரானவர்கள்:

போட்சா சத்திய நாராயணா, புகனா ராஜேந்திரநாத், அடிமுலாவூர் சுரேஷ், பேடிரெட்டி ராமச்சந்திரரெட்டி, சிடிரி அப்பாலா ராஜூ, டெனிட்டி வனிதா, நாராயணசாமி, அமத்பாஷா ஷேக் பேப்பாரி, குமனூர் ஜெயராம், பினிப்பி விஷ்வரூபு, செல்லுப் போயினா ஸ்ரீனிவாசா வேணுகோபால கிருஷ்ணா.

புதிய அமைச்சர்கள்

குடிதேவா அமர்நாத், புடிமிட்டியாலா நாயுடு, டேடிசெட்டி ராஜா, ராஜன்னா டோராபீடிகா, தர்மனா பிரசாதராவ், ஜோகிரமேஷ், அம்பட்டி ராம்பாபு, மெருகு நாகர்ஜூனா, விட்டாலா ரஜினி, கோட்டு சத்தியநாராயணா, கருமுனி வெங்கடா நாகேஸ்வரராவ், நடிகை ரோஜா, காகனி கோவர்த்தன ரெட்டி, உசாரி சரண் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து