முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சித்திரை திருவிழாவின் முத்திரை பதிக்கும் நிகழ்ச்சி: மதுரை மீனாட்சிக்கு இன்று திருக்கல்யாணம்

புதன்கிழமை, 13 ஏப்ரல் 2022      ஆன்மிகம்
 1

Source: provided

மதுரை: சித்திரைப் பெருவிழாவின் பிரதான நிகழ்வான மதுரையின் அரசி மீனாட்சிக்கும் - சுந்தரேசுவரருக்குமான திருக்கல்யாணம் இன்று காலை வெகு விமரிசையாக நடைபெறுகிறது. நாளை தேரோட்டம் நடைபெறுகிறது. 2 ஆண்டுகளுக்கு பிறகு திருவிழா நடப்பதால் அதனை காண லட்சக்கணக்கான மக்கள் திரள்வார்கள்.  இதையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 5-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அதன் தொடர்ச்சியாக தினமும் காலை, மாலை வேளைகளில் கற்பக விருட்சம், சிம்மம், தங்க சப்பரம், பூதம், அன்னம், கைலாச பர்வதம், காமதேனு, தங்கப்பல்லக்கு, தங்க குதிரை, தங்க ரிஷபம், நந்திகேசுவரர், யாளி, வெள்ளி சிம்மாசனம் உள்ளிட்ட வாகனங்களில் அம்மன் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். 

மதுரையை சித்திரை முதல் ஆவணி மாதம் வரை 4 மாதங்கள் மீனாட்சியும், ஆவணி முதல் சித்திரை மாதம் வரை 8 மாதங்கள் சுந்தரேசுவரரும் ஆட்சி செய்வதாக நம்பிக்கை. அதனடிப்படையில், மதுரையின் அரசியாக மீனாட்சிக்கு முடிசூட்டும் பட்டாபிஷேக விழா நேற்று முன்தினம் 12-ம் தேதி இரவு கோலாகலமாக நடைபெற்றது. பட்டாபிஷேகம் முடிந்த மறுநாள், மீனாட்சி அம்மனின் திக்கு விஜய லீலை நேற்று இரவு நடைபெற்றது. வடக்கு மாசி வீதி, கீழ மாசி வீதி சந்திப்பில் உள்ள லாலா ஶ்ரீ ரெங்க சத்திரம் திருக்கண் மண்டபத்தில் அம்மன் அஷ்ட திக்குபாலர்களை எதிர்த்து வெற்றி பெற்ற லீலை நடைபெற்றது. 

இதன் பின்னர், சித்திரைப் பெருவிழாவின் பிரதான நிகழ்வுகளில் ஒன்றான மீனாட்சி - சுந்தரேசுவரர் திருக்கல்யாண நிகழ்ச்சி இன்று 14-ம் தேதி  காலை வெகு விமரிசையாக நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சிக்காக திருக்கல்யாண மேடை ரூ.25 லட்சம் செலவில் பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. அதிகாலை 4 மணி அளவில் மீனாட்சியும் - சுந்தரேசுவரரும் வெள்ளி சிம்மாசனத்தில் நான்கு சித்திரை விதிகளில் வலம் வந்து, முத்துராமைய்யர் மண்டபத்தில் கன்னி ஊஞ்சலாகி பின் கோவிலில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளுவர். காலை 6 மணி அளவில் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமியும், பவளக்கனிவாய் பெருமாளும் திருக்கல்யாண மண்டபத்திற்கு எழுந்தருளுவர். அதனை தொடர்ந்து, காலை 10:35 மணி முதல் 10:59 மணிக்குள் மிதுன லக்னத்தில் திருக்கல்யாணம் நடைபெறும். தொடர்ந்து இரவு 7 மணி அளவில் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட ஆனந்தராயர் பூப்பல்லக்கில் அம்மனும், தங்க அம்பாரியுடன் கூடிய யானை வாகனத்தில் சுவாமியும் எழுந்தருளி நான்கு மாசி வீதிகளில் உலா வருவர். பூப்பல்லக்கில் பவனி வரும் அம்மை, அப்பனை காண்பதற்காகவே மாலை முதலே வீதிகளில் கூட்டம் குவியும். முதலில் யானை, ஒட்டகம் என்று ஒவ்வொன்றாக பவனி வர, விநாயகர், முருகனைத் தொடர்ந்து தம்பதி சமேதரராய் மீனாட்சி, சொக்கநாதர் பூப்பல்லகில் எழுந்தருளுவார்கள். 

முன்னதாக பெற்றோரின் திருமணத்தில் பங்கேற்பதற்காக திருப்பரங்குன்றத்தில் இருந்து முருகப் பெருமான் தெய்வானையுடன் நேற்று மாலை புறப்பட்டார். அவருடன் பவளக்கனிவாய் பெருமாள் மீனாட்சி அம்மன் சொக்கநாதருக்கு தாரைவார்த்து கொடுக்க உடன் சென்றார்.  மதுரையில் முருகப்பெருமான் வரும் 17-ம் தேதி வரை ஆவணி மூல வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். 17-ம்  தேதி மாலை பூப்பல்லக்கில் மதுரையில் இருந்து திருப்பரங்குன்றத்திற்கு முருகப் பெருமான் புறப்பாடு ஆவார்.  

ஏற்கனவே திருக்கல்யாணத்தை பக்தர்கள் காணுவதற்கு 500, 200 ரூபாய் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.  திருக்கல்யாணத்தை காண வரும் அனைத்து பக்தர்களும் பிரசாதம் வழங்கப்படும் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. லட்சக்கணக்கான பக்தர்களுக்கு திருக்கல்யாண விருந்து வழங்கவும் மதுரை நகரில் பல்வேறு இடங்களில்  ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பக்தர்களின் வசதிக்காக பல்வேறு இடங்களில் இந்த திருக்கல்யாண நிகழ்ச்சி அகன்ற திரைகளில் நேரடி ஒளிபரப்பும் செய்யப்படுகிறது.  மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாண நிகழ்வை நேரடியாக வீட்டிலிருந்தே கண்டுகளிக்கும் வகையில் இணைய தளத்திலும் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. அதை தொடர்ந்து நாளை 15-ம் தேதியன்று தேரோட்டம் நடக்கிறது. அம்மன் திருத்தேரில் தம்பதி சமேதரராக தேரில் வலம் வரும் காட்சியை காண மதுரை மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் மாட வீதிகளில் குவிந்திருப்பார்கள். 

இதே போல் அழகர் கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 12-ம் தேதி தொடங்கியது. இன்று அழகர் மலையில் இருந்து கள்ளர் திருக்கோலத்தில் கண்டாங்கி சேலை கட்டி மதுரைக்கு கள்ளழகர் பல்லாக்கில் புறப்படுகிறார்.  நாளை 15-ம் தேதி இரவு தல்லாகுளத்தில் எதிர் சேவை நடைபெறும். மதுரைக்கு வரும் அழகரை பக்தர்கள் சர்க்கரை கிண்ணத்தில் தீபம் ஏற்றி எதிர்கொண்டு அழைப்பார்கள்.  16-ம் தேதி சனிக்கிழமை கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளி அருள்பாலிக்கிறார். லட்சக்கணக்கான பக்தர்கள் அழகர் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து வேண்டுதலை நிறைவேற்றுவார்கள். 

விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 17-ம் தேதி வண்டியூர் தேனுர் மண்டபத்தில் சேஷ வாகனத்தில் அருள்பாலிக்கிறார். கருட வாகனத்தில் எழுந்தருளும் அழகர் மண்டூக மகரிஷிக்கு மோட்சம் தருகிறார்.  அன்றைய தினம் இரவு ராமராயர் மண்டபத்தில் தசாவதார கோலத்தில் காட்சி தருகிறார். 18-ம் தேதி திங்கட்கிழமை மோகனாவதாரத்திலும் இரவு கள்ளழகர் திருக்கோலத்தில் புஷ்ப பல்லாக்கில் அழகர் கோவிலுக்கு திரும்புகிறார். 19-ம் தேதி அழகர் மலைக்கு செல்கிறார் கள்ளழகர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து