முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த கிறிஸ்டியானோ ரொனால்டோ

வெள்ளிக்கிழமை, 22 ஏப்ரல் 2022      விளையாட்டு
Cristiano 2022 04 22

கால்பந்தாட்ட உலகில் அதிக கோல்களை பதிவு செய்தவர் போர்ச்சுகல் நாட்டு வீரர் ரொனால்டோ. தற்போது மான்செஸ்டர் யுனைடெட் அணிக்காக கிளப் அளவிலான கால்பந்து போட்டிகளில் விளையாடி வருகிறார். 37 வயதான அவருக்கு ஆறு குழந்தைகள். இதில் அண்மையில் அவரது இணையர் ஜார்ஜினா ரோட்ரிக்ஸுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்தன. ஒரு ஆண், ஒரு பெண் என பிறந்த அந்த இரட்டையர்களில் ஆண் குழந்தை பிரசவத்தின் போதே உயிரிழந்திருந்தது.

அது குறித்த செய்தியையும் ரொனால்டோ பகிர்ந்திருந்தார். இந்நிலையில், பிறந்த தனது மகளின் படத்தை முதல்முறையாக பகிர்ந்துள்ளார் ரொனால்டோ. அதில் அவர் தனது குடும்பத்தினருடன் இருக்கிறார். அவரது இணையர் ஜார்ஜினா ரோட்ரிக்ஸும் உள்ளார். "ஜியோவும், எங்கள் மகளும் வீடு திரும்பியுள்ளனர். உங்கள் அன்பான வார்த்தைகளுக்கும், அரவணைப்புக்கும் நன்றி சொல்ல விரும்புகிறோம். உங்கள் ஆதரவு இந்நேரத்தில் எங்களுக்கு மிகவும் முக்கியமானதாகும்" என தெரிவித்துள்ளார் ரொனால்டோ. முன்னதாக ரொனால்டோவுக்கு ஆதரவு கொடுத்து அவரை தேற்றும் விதமாக லிவர்பூல் மற்றும் மான்செஸ்டர் யுனைடெட் அணிக்கு இடையிலான போட்டியில் ரசிகர்கள் கர ஒலி எழுப்பியதோடு, பாடலும் பாடியிருந்தனர் . அதற்கு ரொனால்டோ தனது நன்றியை தெரிவித்திருந்தார்.

டோனியை புகழ்ந்து தள்ளிய பிரபலம்

ஐ.பி.எல் தொடரின் 15வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நடைபெற்ற போட்டியில் மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. இதில் அப்போது களத்தில் இருந்த முன்னாள் கேப்டன் டோனி 6,4,2, மற்றும் 4 ரன்களை அடித்து சிஎஸ்கே அணியை வெற்றிக்கு அழைத்து சென்றார்.இதையடுத்து டோனிக்கு பல்வேறு நபர்களுக்கும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில் டோனியின் ஆட்டத்தை பகிர்ந்த இந்திய தொழிலதிபரும், மகிந்திரா ஆட்டோமொபைல் நிறுவனத்தின் தலைவருமான ஆனந்த் மகிந்திரா, ‘எங்களுடைய நிறுவனத்தின் பெயரில் மகி என்ற வார்த்தை இருப்பதற்கு நான் பெருமைப்படுகிறேன்’ என மகிந்திர சிங் டோனியை பாராட்டி ட்வீட் செய்துள்ளார். அவரைப் போலவே ரசிகர்களும், சர்வதேச வீரர்களும் டோனியை சிறந்த ஃபினிஷர் என பாராட்டி வருகின்றனர்.

ரஷ்ய நீச்சல் வீரர்  ரைலோவ்வுக்கு தடை

உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் 56-வது நாளாக நடைபெற்று வருகிறது. இந்த போருக்கு ரஷ்ய மக்களில் சிலர் ஆதரவும், சிலர் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ரஷ்ய அதிபர் புதினையும், உக்ரைன் மீதான படையெடுப்பையும் ஆதரவையும் தெரிவித்து கடந்த ஆண்டு ஒலிம்பிக்கில் 2 தங்கம் வென்ற ரஷ்யாவை சேர்ந்த நீச்சல் வீரர் எவ்கெனி ரைலோவ் பேரணியில் பங்கேற்றார்.

இதையடுத்து வரை 9 மாதங்களுக்கு தடை விதித்து FINA எனப்படும் சர்வதேச நீச்சல் சங்கம் உத்தரவிட்டுள்ளது. மாஸ்கோவில் நடைபெற்ற பேரணியில் ரைலோவ் பிற பதக்கங்கள் வென்ற வீரர்களுடன் மேடையில் ‘Z’ என்ற எழுத்தை கொண்ட ஆடையை அணிந்திருந்தார்.  இது ரஷ்ய படைகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் எழுத்து என குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

விஸ்டன் கவுரவ பட்டியலில் இந்திய வீரர் ரோகித், பும்ரா 

கிரிக்கெட்டின் ‘பைபிள்’ என்று வர்ணிக்கப்படும் விஸ்டன் இதழ் இங்கிலாந்தில் இருந்து வெளியாகிறது. கிரிக்கெட் தகவல்களை தாங்கி வரும் இந்த இதழில் வீரர்களின் பெயர் இடம் பிடிப்பது கவுரவமாக கருதப்படுகிறது. 

 

இந்த ஆண்டுக்கான விஸ்டன் பதிப்பில் சிறந்த வீரர்களாக இந்திய அணியின் கேப்டன் ரோகித் ஷர்மா, வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, நியூசிலாந்து பேட்ஸ்மேன் டிவான் கான்வே, இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஆலி ராபின்சன் மற்றும் தென்ஆப்பிரிக்க வீராங்கனை டேன்வான் நிகெர்க் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு அவர்கள் கடந்த சீசனில் விளையாடிய போட்டிகளில் படைத்த சாதனைகள் குறித்து வெகுவாக பாராட்டப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து