முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகம் முழுவதும் ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டம் : வாழ்த்துகளை பரிமாறி கொண்ட இஸ்லாமியர்கள்

செவ்வாய்க்கிழமை, 3 மே 2022      தமிழகம்
Ramadan-festival 2022 05 03

Source: provided

சென்னை : தமிழகம் முழுவதும் நேற்று ரம்ஜான் பண்டிகையை இஸ்லாமியர்கள் சிறப்பாக கொண்டாடினார்கள். அதிகாலையிலேயே எழுந்து குளித்து புத்தாடைகளை அணிந்து மகிழ்ச்சியுடன் ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.  சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.  தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிவாசல்களில் இன்று இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். 

சென்னை பாரிமுனையில் உள்ள டான் போஸ்கோ பள்ளி வளாகத்தில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் ஆயிரக் கணக்கான ஆண்களும், பெண்களும் பங்கேற்றனர். த.மு.மு.க. சார்பில் இந்த தொழுகைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  தவ்கீத் ஜமாத் அமைப்பின் சார்பில் பாரிமுனை பிஷப் கோரி மேல்நிலைப்பள்ளி வளாகத்திலும் சிறப்பு தொழுகை நடந்தது. இதிலும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.  திருவல்லிக்கேணியில் உள்ள பெரிய மசூதியில் நடைபெற்ற தொழுகையிலும் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.

இதே போன்று சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள பள்ளிவாசல்கள் அனைத்திலும் சிறப்பு தொழுகை நடந்தது. இந்த தொழுகையில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த இஸ்லாமியர்கள் திரளாக கலந்து கொண்டனர். இதேபோன்று திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் ரம்ஜான் சிறப்பு தொழுகை நடைபெற்றது. மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் நேற்று ரம்ஜான் பண்டிகையை மிகுந்த உற்சாகத்துடன் இஸ்லாமியர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். 

மற்ற மதத்தினரும் தங்களது இஸ்லாமிய நண்பர்களுக்கு நேரிலும், தொலைபேசி வாயிலாகவும் ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். ரம்ஜான் தொழுகையை யொட்டி சென்னை மாநகர் முழுவதும் பள்ளிவாசல்கள் இருக்கும் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.  கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக ரம்ஜான் பண்டிகை களையிழந்து காணப்பட்டது.

வீடுகளிலேயே தொழுகை நடைபெற்றது.  இந்த நிலையில் கொரோனா கட்டுப்பாடுகள் விலகி பள்ளி வாசல்களில் சிறப்பு தொழுகை நடைபெற்றதால் இஸ்லாமியர்கள் 2 ஆண்டு களுக்கு பிறகு மிகுந்த உற்சாகத்தோடு ரம்ஜான் பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!