முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேள்வி நேரத்தில் கதையெல்லாம் சொல்லக்கூடாது: உறுப்பினர்களுக்கு அமைச்சர் துரைமுருகன் அறிவுரை

புதன்கிழமை, 4 மே 2022      தமிழகம்
durai-murugan 2021 07 20

தமிழக சட்டப்பேரவையின் கேள்வி நேரத்தில் பேசிய அவை முன்னவர் துரைமுருகன், கேள்வி நேரம் எப்படி நீண்டு போகிறது என்பதைக்கூறி, கேள்வி நேரத்தில் உறுப்பினர்களின் கேள்வியும், அமைச்சர்களின் பதிலும் தான் இருக்க வேண்டும் என்று உறுப்பினர்களுக்கு விளக்கமாக எடுத்துரைத்தார்.

4 நாட்கள் விடுமுறைக்குப் பின்னர், தமிழக சட்டப்பேரவை நேற்று (மே 4) மீண்டும் கூடியது. இந்துசமய அறநிலையத்துறை, தகவல் தொழில்நுட்பவியல் துறைகளின் மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெற்றது. இதற்கு துறையின் அமைச்சர்கள் சேகர்பாபு, மனோ தங்கராஜ் ஆகியோர் பதிலளித்து, புதிய அறிவிப்புகளை வெளியிட்டனர். முன்னதாக காலை 10 மணிக்கு பேரவை கேள்வி நேரத்துடன் தொடங்கியது.

அப்போது அதிமுக சட்டமன்ற உறுப்பினர், அக்ரி கிருஷ்ணமூர்த்தி, சாத்தனூர் அணை பகுதியில் வாழும் மீனவ மக்களின் நலனுக்காக திருவண்ணாமலை மாவட்டத்தில் மீன்வளக் கல்லூரி, ஆராய்ச்சி மையம் அரசின் மூலம் அமைத்து தரப்படுமா என்று கேள்வி கேட்பதற்கு முன், அந்தப் பகுதியின் பெருமைகள் மற்றும் தேவைக்கான காரணங்களையும் விளக்கிக் கூறினார். இதற்கிடையே பேரவைத் தலைவர் இரண்டு மூன்று முறை இடைமறித்து நேரடியாக கேள்வியை கேட்கும்படி கூறினார். 

இந்தக் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், எந்தெந்த பகுதியில் மீன்வளக் கல்லூரிகள் இருக்கின்றன என்பது குறித்து பட்டியலிட்டார். இதைத்தொடர்ந்து, உறுப்பினர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, மீன்வளக் கல்லூரி வரலாறு குறித்து பட்டியலிட்டார். அப்போது பேரவைத் தலைவர் நேரடியாக கேள்விக்கு வரும்படி கூறினார்.

அப்போது பேசிய சட்டப்பேரவை முன்னவரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன், "கேள்வி நேரம் எப்படியெல்லாம் நீண்டு போகிறது எனப் பாருங்கள். உறுப்பினர், சாத்தனூர் அணை பக்கத்தில் ஒரு மீன்வளக் கல்லூரி அமைக்கப்படுமா என்று கேட்க வேண்டும். இதுதான் கேள்வி. அதற்கு சம்பந்தப்பட்ட அமைச்சர் உடனே அவருக்கு என்ன சொல்ல வேண்டுமோ அதைச் சொல்ல வேண்டும். ஆனால், அவரும் ஊரில் இருக்கும் கதையெல்லாம் சொல்கிறார். 

அதற்கு மாறாக கேள்விக்கு நேரடியாக, அரசின் பரிசீலனையில் இருக்கிறது, இல்லை என்று பதில் சொன்னால் முடிந்து போகும். அதற்கு உறுப்பினர், இரண்டாவது கேள்வியாக அங்கு நிறைய மாணவர்கள் உள்ளனர், என்று கேட்டால், அதற்கு உண்டா இல்லையா என்று அமைச்சர் பதில் சொல்ல வேண்டும், அவ்வளவுதான். ஆனால், அந்த லோகத்தில், இந்த லோகத்தில் என்று ஆரம்பித்தால், எப்போது முடிவது" என்று பேரவை உறுப்பினர்களுக்கு விளக்கினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து