முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தஞ்சை சம்பவம் எதிரொலி: தமிழகம் முழுவதும் 60 ஷவர்மா கடைகளில் அதிரடி சோதனை : 10 கடைகளில் இருந்து தரமற்ற இறைச்சி பறிமுதல் - அபராதம்

சனிக்கிழமை, 7 மே 2022      தமிழகம்
60-Shawarma 2022 05 07

Source: provided

சென்னை : தஞ்சை சம்பவம் எதிரொலியாக நேற்று தமிழகம் முழுவதும் 60 'ஷவர்மா'  கடைகளில் அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தினர். இதில் 10 கடைகளில் இருந்து தரமற்ற இறைச்சி பறிமுதல் செய்தது மட்டுமில்லாமல் அந்த கடைகளுக்கு அபராதமும் விதிக்கப்பட்டது.

ஷவர்மா சாப்பிட்டதால் கேரளாவில் மாணவி ஒருவர் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இந்த நிலையில் தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் உள்ள கால்நடை மருத்துவ கல்லூரியில் படிக்கும் கன்னியாகுமரியை சேர்ந்த பிரவீன், புதுக்கோட்டையை சேர்ந்த பரிமளேஸ்வரன், தருமபுரியை சேர்ந்த மணிகண்டன் ஆகிய 3 பேரும் ஒரத்தநாடு பிரிவு சாலையில உள்ள ஓட்டலில் சாப்பிட சென்றுள்ளார்கள்.

அங்கு சிக்கன் ஷவர்மா சாப்பிட்டார்கள். சிறிது நேரத்தில் அவர்கள் மயங்கி விழுந்தனர். வாந்தியும் எடுத்தனர். உடனடி யாக அவர்கள் 3 பேரும் தஞ்சாவூர் மருத்துவகல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். இதையடுத்து தமிழகம் முழுவதும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் 60-க்கும் மேற்பட்ட கடைகளில் அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது சென்னையில் தரமற்ற பொருட்கள் என்று சந்தேகிக்கப்பட்ட கடைகளில் இருந்து உணவுகள் பறிமுதல் செய்யப்பட்டு ஆய்வு கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

திருவள்ளூர் மாவட்டத்தில் ஆவடி, பூந்தமல்லி, செங்குன்றம் உள்பட பல பகுதியில் ஆய்வு நடத்தி கெட்டுப்போன இறைச்சியை பறிமுதல் செய்தனர். இதுவரை 60 கடைகளில் நடத்தப்பட்ட சோதனையில் 10 கடைகளில் இருந்து தரமற்ற 25 கிலோ கோழி இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அதிகாரிகள் அந்த கடைகளுக்கு ரூ.2 ஆயிரம் என்று அபராதம் விதித்தனர். இதேபோல் நாசப்பட்டி வைத்திப் வண்டிப்பேட்டை பகுதியில் நடத்தப்பட்ட சோதனையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 250 கிலோ கோழி இறைச்சியை பறிமுதல் செய்தார்கள்.

இதற்கிடையே கேரள மாநிலத்தில் ஷவர்மா சாப்பிட்ட மாணவி பலியானதை தொடர்ந்து குமரி மாவட்டத்தில் விற்பனை செய்யப்படும் ஷவர்மா மற்றும் அசைவ உணவுகளின் தரத்தை கண்டறிய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த வகையில், உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் செந்தில்குமார் தலைமையில் அதிகாரிகள் மாநகர பகுதியில் கடந்த 2 நாட்களாக தீவிர ஆய்வு மேற்கொண்டனர். இதுகுறித்து உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் செந்தில்குமார் கூறியதாவது:-

நாகர்கோவில் மாநகர பகுதிகளில் கடந்த 2 நாட்களாக அசைவ ஓட்டல்கள் மற்றும் ஷவர்மா விற்பனை நிலையங்களில் உணவின் தரம் குறித்து சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதில், இது வரை 32 ஷவர்மா கடைகளிலும், 4 அசைவ உணவகங்களிலும் சோதனை நடைபெற்றது. இதில், தரமற்ற 5 கிலோ இறைச்சி மற்றும் ஷவர்மா வைக்க பயன்படுத்தப்படும் குக்கூஸ் (வெள்ளை நிற ரொட்டி) 50க்கும் மேல் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஷவர்மா கடைகளில் உணவு பொருட்களை கடைக்கு வெளியே வைக்க கூடாது. குறிப்பாக தூசி, புழுதி படும் வகையில் திறந்த நிலையில் வைக்க கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அசைவ கடைகள் கண்டிப்பாக உரிமம் பெற்று தான் செயல்பட வேண்டும்.

மேலும், அசைவ உணவுகள் மூலம் நோய் பரவாமல் தடுக்கும் விதமாக அசைவ உணவுகளை 70 சென்டிகிரேட் வெப்பத்தில் வேக வைக்க வேண்டும். மேலும், இறைச்சியை தொட்டு உண்ண பயன்படுத்தப்படும் மைனஸ் அன்றன்று தயாரிக்க வேண்டும். முந்தைய நாள் மைனஸ் பயன்படுத்த கூடாது. ஷவர்மா தயாரிக்க பயன்படும் குக்கூஸ் உரிமம் பெற்ற நிறுவனத்திடம் இருந்து பெற்று பயன்படுத்த வேண்டும். மேலும் உணவு பரிமாறுபவர்கள் தலையில் தொப்பி, கைகளில் கையுறை அணிந்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் உணவின் தரம் தொடர்பான புகார்களுக்கு 9444042322 என்ற எண்ணை அழைக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து