முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விபத்து தொடர்பாக 2 பேர் கைது: டெல்லி தீ விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 30 ஆக அதிகரிப்பு : கட்டிட உரிமையாளருக்கு போலீஸ் வலை

சனிக்கிழமை, 14 மே 2022      இந்தியா
Delhi 2022-05-14

Source: provided

புதுடெல்லி : மேற்கு டெல்லியான முண்டக் பகுதியின் மெட்ரோ ரயில் நிலையம் அருகே உள்ள ஒரு வணிக வளாக கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 30 பேர் உயிரிழந்தனர். இந்த சோக சம்பவம் தொடர்பாக கட்டிடடத்தில் இருந்த சிசிடிவி கேமரா அலுவலகத்தைச் சேர்ந்த ஹரீஷ் கோயல், வருண் கோயல் ஆகிய இருவரை போலீஸார் கைது செய்துள்ளனர். கட்டிட உரிமையாளரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

முன்னதாக நேற்று முன்தினம் (வெள்ளிக்கிழமை) மாலை 4.40 மணி அளவில் இந்த பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. சுமார் 24 தீயணைப்பு வாகனங்கள் போராடி அணைத்தது. மூன்றடுக்கு கொண்ட வணிக வளாகத்தில் இருந்து இதுவரை 27 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. கட்டிடத்தில் இருந்து சுமார் 60-70 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் இவர்களில் 40க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று மருத்துவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். 

கட்டிடத்தின் முதல் மாடியில் உள்ள சிசிடிவி கேமரா மற்றும் ரவுட்டர் தயாரிக்கும் நிறுவனத்தின் அலுவலகத்தில் இருந்து தீ விபத்து ஏற்பட்டதாக தீயணைப்புத்துறை முதல்கட்ட தகவல் தெரிவித்துள்ளது. அதேபோல், விபத்து நேர்ந்தபோது கட்டிடத்தின் 2வது தளத்தில் மோட்டிவேஷனல் ஸ்பீச் நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்துள்ளது. அந்த தளத்திலேயே அதிக உயிரிழப்பும் பதிவாகியுள்ளது தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் அப்பகுதியில் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தீவிபத்தில் இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, "உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆறுதல்" என்று கூறியதுடன், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி உள்ளிட்டோர் தங்களின் இரங்கலைப் பதிவு செய்துள்ளனர். மேலும் மீட்புப் பணிகளை உள்துறை அமைச்சர் அமித் ஷா தலையிட்டு முடுக்கிவிட்டார். மீட்புப் பணியில் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினரும் ஈடுபடுத்தப்பட்டனர்.

இதற்கிடையே டெல்லி தீ விபத்தில் பலியானர்களின் எண்ணிக்கை 30ஆக உயர்ந்துள்ளது. தப்பி ஓடிய கட்டிடத்தின் உரிமையாளரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் நேற்று மேலும் 3 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. இதனால் தீ விபத்தில் பலியானர்களின் எண்ணிக்கை 30ஆக உயர்ந்துள்ளது. பலியானவர்களில் 25 பேரின் உடல்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை.

இந்த சோக சம்பவம் தொடர்பாக கட்டிடடத்தில் இருந்த சிசிடிவி கேமரா அலுவலகத்தைச் சேர்ந்த ஹரீஷ் கோயல், வருண் கோயல் ஆகிய இருவரை போலீஸார் கைது செய்துள்ளனர். மரணம் விளைவிக்கும் வகையில் குற்றத்தை ஏற்படுத்தியதாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இருவரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்கிடையே அந்த கட்டிடத்தின் உரிமையாளர் மனிஷ் லகரா தப்பி ஓடி விட்டார். அவரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். அவர் கட்டிடத்திற்கு தீயணைப்பு துறையிடம் இருந்து தடையில்லா சான்றிதழ் பெறவில்லை எனவும் தெரியவந்துள்ளது. டெல்லியில் நடந்த மோசமான தீ விபத்துகளில் இதுவும் ஒன்றாக கருதப்படுகிறது. இதற்கு முன்பு 2019ம் ஆண்டு அனஜ்மண்டி பகுதியில் நடந்த தீ விபத்தில் 43 பேர் பலியாகி இருந்தனர். 

இந்நிலையில் நேற்று டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தீ விபத்து நடந்த இடத்திற்கு சென்று பார்வையிட்டார். அதன்பின் பேசிய அவர், ‘இந்த சம்பவம் குறித்து நீதிபதி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும்,  தீ விபத்தில் உயிழந்தவர்களின் குடும்பத்திற்கு  10 லட்சம் ரூபாயும்,  அதில் காயம் அடைந்தவர்களுக்கு 50,000 ரூபாயும் இழப்பீடு வழங்கப்படும். இது ஒரு பெரிய தீ விபத்து.  உடல்கள்  கருகிய நிலையில் இருந்ததால் அடையாளம் காண மிகவும் கடினமாக இருந்தது.  காணாமல் போனவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களை அடையாளம் காண டெல்லி அரசு உதவி வருகிறது. இவ்வாறு கெஜ்ரிவால் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து