முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நெல்லை தனியார் குவாரியில் ராட்சத பாறைகள் உருண்டு விழுந்து விபத்து: 300 அடி ஆழ பள்ளத்தில் சிக்கிய மேலும் 3 பேரை மீட்கும் பணி தீவிரம் : தேசிய பேரிடர் மீட்பு படை விரைவு

ஞாயிற்றுக்கிழமை, 15 மே 2022      தமிழகம்
Tirunelveli 2022 05 15

Source: provided

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் முன்னீர்பள்ளம் அடைமதிப்பான் குளம் கிராமத்தில் உள்ள தனியார் குவாரியில் பாறைகள் உருண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 300 அடி ஆழ பள்ளத்தில் சிக்கியுள்ள 3 பேர் காயத்துடன் மீட்கப்பட்ட நிலையில் மேலும் 3 பேரை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

திருநெல்வேலி மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே அடைமிதிப்பான்குளம் கிராமத்தில் சங்கர நாராயணன் என்பவருக்கு சொந்தமான கல்குவாரி உள்ளது. நேற்று முன்தினம் இரவு அங்கு செல்வகுமார், ராஜேந்திரன், செல்வம் உள்ளிட்ட 6 தொழிலாளர்கள், 2 லாரிகள் மற்றும் 3 கனரக ஹிட்டாச்சி வாகனங்களில் சுமார் 300 அடி ஆழ பள்ளத்தில் கற்களை அள்ளும் பணியில் ஈடுபட்டிருந்தனர். நள்ளிரவு 12 மணியளவில் ராட்சத பாறை ஒன்று திடீரென உருண்டு, கற்கள் அள்ளும் பணி நடைபெற்ற பள்ளத்தில் விழுந்ததாக கூறப்படுகிறது.

இதில், பணியில் ஈடுபட்டிருந்த 6 பேரும் இடுபாடுகளில் சிக்கிக் கொண்ட நிலையில், பாறை விழுந்த சத்தம் கேட்டு கல்குவாரியின் அருகிலிருந்தவர்கள், தீயணைப்புத் துறைக்கும், போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர். இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு அவர்கள் வந்தடைந்த நிலையில், நள்ளிரவு நேரம் என்பதால் வெளிச்சம் இல்லாததாலும், லேசான மழைப்பொழிவு இருந்ததாலும் மீட்புப் பணிகளில் சிக்கல் ஏற்பட்டது.

இந்நிலையில், ராமேஸ்வரத்தை அடுத்த ஐ.என்.எஸ் பருந்து கடற்படை தளத்தில் இருந்து லெப்டினன்ட் கமாண்டர் சஞ்சய் தலைமையிலான 4 பேர் கொண்ட மீட்புக்குழுவினர் ஹெலிகாப்டர் மூலம் மீட்புப்பணியில் ஈடுபட முயன்றனர். ஆனால், ஹெலிகாப்டர் மூலம் மீட்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லாததால் அவர்கள் திரும்பிச் சென்றனர். 

தொடர்ந்து மீட்புப் பணியில் ஈடுபட்டு வந்த தீயணைப்பு வீரர்களும் நீண்ட போராட்டத்துக்கு பின், முருகன் மற்றும் விஜய் ஆகியோரை இடிபாடுகளில் இருந்து பத்திரமாக மீட்டனர். மற்ற 4 பேரை மீட்கும் பணியில் நடைபெற்ற நிலையில், மாவட்ட கலெக்டர் விஷ்ணு, நெல்லை சரக டி.ஐ.ஜி. பர்வேஷ்குமார் உள்ளிட்டோர் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். மேலும், விபத்து தொடர்பாக, கல்குவாரி உரிமையாளர் சங்கர நாராயணனை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், கல்குவாரி விபத்தில் சிக்கி உயிருக்குப் போராடிய தொழிலாளர் ஒருவர், கையை நீட்டி உதவிக்கு அழைத்த நிலையில், நீண்ட நேர போராட்டத்திற்கு பின் அவர் மீட்கப்பட்டார்.  கல்குவாரியில் பாறைகள் சரிந்து விழுந்ததால், இடிபாடுகளுக்கு இடையே சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.  இந்த விபத்து குறித்து மாவட்ட கலெக்டர் விஷ்ணு கூறுகையில், குவாரியில் கற்கள் தொடர்ந்து சரிந்து விழுந்ததால், மீட்புப் பணியில் சிக்கல் ஏற்பட்டதாகவும், குவாரியில் விதி மீறல் இருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.  

மேலும் திருநெல்வேலி மாவட்டத்தைப் பொருத்த வரை கடந்த 7 மாதத்திற்குள் 6 கனமவளக் குவாரிகள் மூடப்பட்டுள்ளது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள குவாரிகளைக்கூட மூடியிருக்கிறோம். 2018-லிருந்து இது இயங்கிவரும் குவாரி, 2023-ம் ஆண்டு வரை லைசென்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. கண்டிப்பாக விதிமீறல் கண்டறியப்படாடல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட கலெக்டர் கூறினார். இதனிடையே, விபத்தில் காயமடைந்தவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கப்படுமென முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து