முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வேலூரில் புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட ரூ. 62.10 கோடியில் முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

புதன்கிழமை, 29 ஜூன் 2022      தமிழகம்
CM-4 2022 06 29

Source: provided

வேலூர் : தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வேலூர் மாவட்டம், கோட்டை மைதானத்தில் நடைபெற்ற அரசு விழாவில், வேலூர் புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட ரூ. 62.10 கோடி செலவிலான முடிவுற்ற 17  பணிகளை திறந்து வைத்து, ரூ. 32.89 கோடி  மதிப்பீட்டிலான 50  புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 30,423 பயனாளிகளுக்கு ரூ.360.53 கோடி  மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

வேலூரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 9.25 ஏக்கர் பரப்பளவில், ரூ.53.13 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள வேலூர் புதிய பேருந்து நிலையத்தை முதல்வர் திறந்து வைத்தார்.  இப்புதிய பேருந்து நிலையம், 54 பேருந்து நிறுத்த தடங்களும், 41 நிலை நிறுத்த தடங்கள், 8 நகர பேருந்து தடங்கள், 82 கடைகள், 2 உணவகங்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் நிறுத்துமிடம் ஆகிய வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது. மேலும், ஒரு வாகன நுழைவு வாயில் மற்றும் 2 வாகன வெளியேரும் வழிகளுடன்,   வெளியூர் பேருந்துகள், மாநகர பேருந்துகள் மற்றும் இதர வாகனங்களுக்கு தனியே வழிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் பயணிகள் காத்திருப்பு அறைகள், மின் தூக்கிகள், ஊனமுற்றோருக்கான கழிவறைகள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி,  தீ அணைப்பு வசதிகள், சிசிடிவி கேமராக்கள், சோலார் மின்வசதி, உயர்மின் கோபுர விளக்குகள், மின் வாகனங்களுக்கான சார்ஜிங் அலகுகள் போன்ற வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளன. 

அதை தொடர்ந்து 62 கோடியே 10 லட்சத்து 95 ஆயிரம் ரூபாய் செலவில் 17 முடிவுற்ற  பணிகளை முதல்வர் திறந்து வைத்தார்.  மேலும் 32 கோடியே 89 லட்சத்து 46 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டவுள்ள 50  புதிய திட்டப் பணிகளுக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார். அதை தொடர்ந்து பல்வேறு துறைகளின் சார்பில்  30,423 பயனாளிகளுக்கு 360 கோடியே  53 லட்சம் ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை முதல்வர் வழங்கினார். 

இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, ஆர்.காந்தி,  வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா ஆனந்தகுமார், நாடாளுமன்ற உறுப்பினர்கள்  டாக்டர் எஸ்.ஜெகத்ரட்சகன், கதிர்ஆனந்த், சட்டமன்ற உறுப்பினர்கள்  கார்த்திகேயன், நந்தகுமார், வில்வநாதன்,  ஜே.எல். ஈஸ்வரப்பன்,  அமுலு விஜயன், துணை மேயர் சுனில்குமார், வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல்பாண்டியன், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து