முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இராணிப்பேட்டையில் புதிய கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம்: முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்

வியாழக்கிழமை, 30 ஜூன் 2022      தமிழகம்
CM-2022 06 30

இராணிப்பேட்டை அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நேற்று நடைபெற்ற அரசு விழாவில், ரூ. 118.40 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள புதிய மாவட்ட கலெக்டர் அலுவலகப் பெருந்திட்ட வளாகம் மற்றும் ரூ. 32.18 கோடி செலவிலான 23 முடிவுற்ற பணிகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார். மேலும் ரூ. 22.19 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள 5 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 71,103 பயனாளிகளுக்கு ரூ. 267.10 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

இராணிப்பேட்டை கால்நடை நோய்த்தடுப்பு மருந்து நிலைய வளாகத்தில், 13.40 ஏக்கர் நிலப்பரப்பளவில், ரூ.118.40 கோடி செலவில் புதிய மாவட்ட கலெக்டர் அலுவலகப் பெருந்திட்ட வளாகம் கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டிடம் மொத்தம் 28,711 ச.மீ பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. மேலும் 150 கோடியே 58 லட்சம் ரூபாய் செலவிலான 24 முடிவுற்ற  பணிகளை முதல்வர் நேற்று திறந்து வைத்தார். 

இராணிப்பேட்டை புதிய பேருந்து நிலையம், செய்யாறு ஆற்றின் குறுக்கே கட்டப்படவுள்ள உயர்மட்டப் பாலம்,  இராணிபேட்டை மற்றும் அரக்கோணம் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் புதிய பணிமனைக் கட்டிடங்கள்,  ஆற்காட்டில் கால்நடை மருந்தகம் என மொத்தம் 22 கோடியே 19 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான 5 புதிய திட்டப்பணிகளுக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார்.  மேலும் பல்வேறு துறைகளின் சார்பில் மொத்தம் 71,103 பயனாளிகளுக்கு 267 கோடியே 10  லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்டங்களை முதல்வர் வழங்கினார். 

இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, ஆர்.காந்தி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் டாக்டர்.எஸ்.ஜெகத்ரட்சகன், கதிர்ஆனந்த், சட்டமன்ற உறுப்பினர்கள் ஈஸ்வரப்பன், முனிரத்தினம்,  நந்தகுமார், கார்த்திகேயன், பொதுப்பணித் துறை  கூடுதல் தலைமை செயலாளர் தயானந்த் கட்டாரியா, இராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன், உள்ளாட்சி அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள்  கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து