முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சர்ச்சை டுவிட் வழக்கு: முகமது ஜூபைருக்கு டெல்லி நீதிமன்றம் ஜாமீன்

வெள்ளிக்கிழமை, 15 ஜூலை 2022      இந்தியா
Muhammad-Zubair-2022 07 15

டுவிட்டரில் சர்ச்சைக்குரிய பதிவு காரணமாக டெல்லி போலீஸாரால் கைது செய்யப்பட்ட செய்தி இணையதளத்தின் இணை நிறுவனரான முகம்மது ஜூபைருக்கு டெல்லி நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.

பொதுமக்களின் மத உணர்வை தூண்டி, வெறுப்புணர்வை ஏற்படுத்த முயன்றதாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டது. இந்த வழக்கில் நீதிமன்றம் நேற்று ஜாமீன் வழங்கியுள்ளது. 

முஸ்லிம்களின் இறைத்தூதர் முகம்மது நபியை பாஜக செய்தித் தொடர்பாளராக இருந்த நுபுர் சர்மா விமர்சித்திருந்தார். இதையடுத்து, நாடு முழுவதிலும் சமூக வலைதளங்களை டெல்லி போலீஸார் தீவிரமாகக் கண்காணித்தனர்.

இதில், பெங்களூரூவில் இருந்து செயல்படும் ஆல்ட் நியூஸ் செய்தி இணையதளத்தின் இணை நிறுவனர் முகம்மது ஜூபைர், டுவிட்டரில் செய்த பதிவும் சிக்கியதாக போலீஸ் தரப்பு கூறுகிறது. இதுகுறித்து ஜூபைரை டெல்லி போலீஸார் விசாரித்தனர். இதில் ஜூபைர் கூறிய பதில் திருப்தி அளிக்கவில்லை எனக் கூறி அவரை அவர்கள் கைது செய்தனர். விசாரணை என்ற பெயரில் அழைத்துவிட்டு ஜூபைரை கைது செய்ததற்கு நாடு முழுவதும் கடும் கண்டனங்கள் எழுந்தன.

இந்நிலையில் ஜூபைர் ஜாமீன் கோரியிருந்தார். இந்த வழக்கில் டெல்லி நீதிமன்றம் தீர்ப்பை ஒத்திவைத்திருந்தது. இந்நிலையில், ஜூபைருக்கு நேற்று நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. டெல்லி அரசு தரப்பு வழக்கறிஞர், ஜூபைர் மீது அந்நிய செலாவணி மோசடி வழக்கும் இருப்பதால் ஜாமீன் வழங்கக்கூடாது என வாதாடியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும், இந்த ஒரு வழக்கில் மட்டுமே அவருக்கு ஜாமீன் கிடைத்துள்ளது. அவர் மீது லக்கிம்பூர் கேரி, ஹத்ராஸ், சீதாபூர் ஆகிய ஊர்களிலும் பதிவான வழக்குகளில் அவருக்கு இன்னும் ஜாமீன் கிடைக்கவில்லை. இதனால் அவர் டுவிட் சர்ச்சை வழக்கில் ஜாமீன் கிடைக்கப்பெற்றாலும் சிறையிலேயே இருக்கும் சூழல் உள்ளது. ஜூபைர் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.

இதற்கிடையில், தன் மீது உத்தரப் பிரதேச போலீஸாரால் பதிவு செய்யப்பட்டுள்ள 6 வழக்குகளையும் ரத்து செய்யக் கோரி ஜூபைர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். மேலும், தன் மீதான குற்றச்சாட்டுகளை சிறப்பு புலனாய்வுக் குழு விசாரிக்கும் என்ற உத்தரவையும் ரத்து செய்யுமாறு ஜூபைர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து