முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்த கல்லூரி மாணவர் கைது

ஞாயிற்றுக்கிழமை, 31 ஜூலை 2022      தமிழகம்
Jail 2022 01 05

Source: provided

வேலூர் : பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்த கல்லூரி மாணவரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்தனர்.  

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்த அக்தர் உசேன் என்பவரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். அவர் கொடுத்த தகவலின்பேரில் சேலத்தில் பதுங்கியிருந்த வங்கதேசத்தை சேர்ந்த அப்துல் அலிம் முல்லா என்பவரை சுற்றி வளைத்து போலீசார் கைது செய்தனர். அவருடன் தங்கியிருந்த வங்கதேசத்தை சேர்ந்த மேலும் 6 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில், அப்துல் அலிம் முல்லா, அக்தர் உசேன் ஆகியோரை பெங்களூரு போலீசார் 10 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். பயங்கரவாத அமைப்புகள், இவர்கள் இருவருக்கும் மாதம் ரூ. 30 ஆயிரம் சம்பளம் பேசி, பயங்கரவாத செயல்களுக்கு பயன்படுத்தி வந்தது தெரியவந்தது. மேலும் ஈரோட்டில் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

வலைதளங்களில் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருந்தவர்களை மத்திய புலனாய்வு துறை ரகசியமாக கண்காணித்தது. இந்தியா முழுவதும் 29 இடங்களில் மத்திய புலனாய்வு துறை, என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடியாக விசாரணை நடத்தினர். இந்த நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் ஐ.எஸ். பயங்கரவாத கும்பலுடன் தொடர்பில் இருந்ததாக கல்லூரி மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் டவுன் நீலிக்கொல்லை மசூதி தெருவை சேர்ந்தவர் அனாஸ்அலி. ஆற்காடு அடுத்த மேல்விசாரத்தில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். இந்த நிலையில் மத்திய புலனாய்வுத்துறை அதிகாரிகள் சந்திரசேகரன், ஹரிஷ் தலைமையில் டெல்லி, திருச்சி, திருப்பத்தூர், வேலூர் மாவட்டத்தில் இருந்து 10-க்கும் மேற்பட்டோர் கொண்ட குழுவினர் நேற்று முன்தினம் அதிகாலை மாணவன் வீட்டை சுற்றி வளைத்து அதிரடியாக வீட்டிற்குள் நுழைந்தனர். அப்போதும் மாணவன் தூங்காமல் லேப்டாப்பில் ஏதோ பார்த்துக் கொண்டிருந்தார். அவரிடம் விசாரணை நடத்திய போது முண்ணுக்கு பின்னாக பதில் கூறினார். மேலும் கையில் வைத்திருந்த லேப்டாப்பை தரையில் தூக்கி போட்டார். 

இதைத்தொடர்ந்து மாணவனை அணைக்கட்டு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். சுமார் 19 மணிநேர விசாரணைக்கு பிறகு மாணவர் அனாஸ் அலிக்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கங்களின்  வலைத்தளங்களை அனாஸ் அலி பின் தொடர்ந்து அதில் பதிவிடும் தகவல்களை லைக் செய்துள்ளார். மேலும் அந்த தகவலை பலருக்கு பகிர்ந்து வந்துள்ளார். 

அனாஸ் அலியிடம் இருந்து விலை உயர்ந்த நவீன 2 செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் லேப்டாப்பை பறிமுதல் செய்தனர். இதனைத் தொடர்ந்து அனாஸ் அலியை ஆம்பூர் டவுன் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். அவர் மீது 8 பிரிவில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் ஆம்பூர் மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தினர். தொடர்ந்து அனாஸ் அலியை 15 நாள் காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வேலூர் ஜெயிலில் அனாஸ் அலியை அடைத்தனர். 

விசாரணையின்போது அனாஸ் அலி கோபத்தில் லேப்டாப்பை கீழே போட்டதால் அதை ஓபன் செய்ய முடியாமல் போனது. லேப்டாப்பில் உள்ள தகவல்களை சேகரிக்கும் பணியில் புலனாய்வு துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். அதில் இருக்கும் தகவல்களை கொண்டு அடுத்தகட்ட நடவடிக்கையை தொடர்வோம் என அவர்கள் தெரிவித்தனர்.  ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு தொடர்பில் இருந்த ஆம்பூர் மாணவர் கைது செய்யப்பட்ட தகவல் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து