முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வழக்கறிஞர் நடராஜன் மறைவு : நீதித்துறைக்கு பெரிய இழப்பு - முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

ஞாயிற்றுக்கிழமை, 14 ஆகஸ்ட் 2022      தமிழகம்
CM-1 2022-08-14

Source: provided

சென்னை : வழக்கறிஞர் நடராஜன் மறைவு நீதித்துறைக்கு மட்டுமல்ல, தி.மு.க.வுக்கும் மிகப் பெரிய இழப்பு என்று அவரது படத்திறப்பு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற மூத்த வழக்கறிஞர் என்.நடராஜனின் திருவுருவப் படத்தைத் திறந்து வைத்து முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது,

நம்முடைய நெஞ்சமெல்லாம் நிறைந்து வாழ்ந்து கொண்டிருக்கிற மரியாதைக்குரிய சட்ட அறிஞர், மூத்த வழக்கறிஞர் என். நடராஜனுடைய நினைவுகளைப் போற்றக் கூடிய நிகழ்ச்சியாக இந்த படத் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.  கடந்த ஆண்டு நடராஜன் மறைந்த போது, உடனடியாக அவருடைய இல்லத்திற்குச் சென்று அவருடைய உடலுக்கு மரியாதை செய்து, நான் அஞ்சலி செலுத்தி இருக்கிறேன். 

நாடு விடுதலை அடைந்து பல ஆண்டுகளுக்கு பின்பு பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக, அவர்களுடைய முன்னேற்றத்திற்காக ஒரு கமிஷன் அமைக்க வேண்டுமென்று பல ஆண்டு காலம் ஒரு கோரிக்கை இருந்து வந்தது. அந்த கோரிக்கையை ஏற்று 1969-ம் ஆண்டு சட்டநாதன் தலைமையில் அமைக்கப்பட்ட ஆணையம் 300 பக்கங்களைக் கொண்ட ஒரு அறிக்கையினை அப்போதைய தி.மு.க. அரசுக்கு அளித்தது.

அதன் அடிப்படையில் தான், 25 சதவீதமாக இருந்த பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இட ஒதுக்கீடு 31 சதவீதமாக மாற்றப்பட்டது. பின்பு 50 சதவீதமானது என்பது நம் எல்லோருக்கும் தெரியும். இப்படி வரலாற்று சிறப்புமிக்க அறிக்கையினை நமக்கு அளித்த சட்டநாதனின் மருமகன்தான் நம்முடைய மூத்த வழக்கறிஞர் நடராஜன் ஆவார். இப்படி ஒரு பாரம்பரியமான குடும்பத்தில் பிறந்தவர்.

கீழமை நீதிமன்றங்கள் முதல் உச்ச நீதிமன்றம் வரை தனது வாதத் திறமையால் சட்ட உலகில் தனக்கென தனிமுத்திரையைப் பதித்து நீங்காப் புகழ்பெற்றவராக விளங்கிக் கொண்டு இருக்கிறார். நீதித்துறைக்கு மட்டுமின்றி, தி.மு.க.வுக்கும் அனுபவமிக்க சட்ட நுணுக்கங்கள் தெரிந்த பல வழக்கறிஞர்களை உருவாக்கித் தந்த பெருமைக்குரியவர் அவர். 

நீதியரசர்களுடைய நன்மதிப்பைப் பெற்றவராக விளங்கினார். மும்பை குண்டு வெடிப்பு. அந்த வழக்கில் அரசு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டு வாதாடிய அவர், வழக்கறிஞர் தொழிலுக்கான நேர்மை, அறிவுக்கூர்மை, நம்பிக்கை என அனைத்தையும் தன்னகத்தே கொண்டவர்.  சட்ட நிபுணத்துவம் நிறைந்த சட்ட அனுபவத்தின் இமயமாக விளங்கிய நடராஜனின் மறைவு நீதித்துறைக்கும் மட்டுமல்ல, தி.மு.க.வுக்கும் மிகப் பெரிய இழப்பாக அமைந்திருக்கிறது. 

அவருடைய இழப்பு என்பது வழக்கறிஞர்களுக்கு நீதித் துறைக்கு மட்டும் ஏற்பட்ட இழப்பு அல்ல. எங்களைப் போன்றவர்களுக்கும் ஏற்பட்ட இழப்புதான் என்பதை நான் இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.   ஜெயின் கமிஷன் மூலமாக அந்த சோதனை வந்த நேரத்தில், தன்னுடைய வாதங்களின் மூலமாகக் காத்தவர் நம்முடைய நடராஜன் என்பதை யாரும் மறந்திடமுடியாது. நாங்கள் நிச்சயமாக எங்களுடைய வாழ்நாள் முழுவதும் அதை மறக்க முடியாது. இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து