முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அனைத்து தரப்பு மக்களின் அரசாக தி.மு.க. அரசு செயல்பட்டு வருகிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

திங்கட்கிழமை, 15 ஆகஸ்ட் 2022      தமிழகம்
CM-1 2022-08-15

அனைத்து மக்களின் அரசாகத்தான் இந்த தி.மு.க. அரசு செயல்பட்டு வருகிறது என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.   

சுதந்திர திருநாளையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னை, தலைமைச் செயலகக் கோட்டை முகப்பில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து பேசியதாவது, 

இந்திய நாட்டின் தியாகிகளைப் போற்றிப் பாராட்டுவதில் தி.மு.க. அரசு யாருக்கும் சளைத்தது அல்ல.  பாஞ்சாலங்குறிச்சியில் கட்டபொம்மனுக்குக் கோட்டை,  பாரதியின் இல்லம் அரசு இல்லமானது, பெருந்தலைவர் காமராசர் மணிமண்டபம்,  மூதறிஞர் இராஜாஜி நினைவாலயம்,  தில்லையாடி வள்ளியம்மை மணிமண்டபம்,  வீரவாஞ்சியின் உறவினருக்கு நிதி,  வ.உ.சி. இழுத்த செக்கு நினைவுச் சின்னமானது,  விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு இலவசப் பேருந்து பயணம்,  தியாகிகள் மணிமண்டபம்,  விடுதலைப் பொன்விழா நினைவுச் சின்னம்,  பூலித்தேவன் நினைவு மண்டபம்,  தியாகி விஸ்வநாத தாஸ் வாழ்ந்த இல்லம் புதுப்பிப்பு,  மாவீரன் சுந்தரலிங்கம் வாரிசுகளுக்கு வீடு,  நேதாஜிக்கு சிலை,  கக்கனுக்கு சிலை,  சிப்பாய்க் கலகத்துக்கு நினைவுத்தூண் என இப்படி நாட்டுக்காக உழைத்த தியாகிகளைப் போற்றுகின்ற இயக்கம்தான் தி.மு.க. 

உத்திரப்பிரதேச மாநிலம் காசியில் பாரதியார் வாழ்ந்த வீட்டைப் பராமரிக்க அரசு சார்பில் ரூபாய் 18 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கிண்டி காந்தி மண்டபத்தில் வீரபாண்டிய கட்டபொம்மன் திருவுருவச் சிலை அமைக்க ரூபாய் 18 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மருது சகோதரர்கள் சிலை அமைக்க ரூபாய் 34 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  கடலூர் அஞ்சலை அம்மாள் சிலை வைக்க ரூபாய் 25 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விடுதலைப் போராட்ட வீரர்களின் நினைவிடங்களில் ஒலி - ஒளி காட்சிகள் அமைத்திட நடவடிக்கை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

காந்தி மண்டபம், அருங்காட்சியகம், பெருந்தலைவர் காமராசர் மண்டபம், பெரியவர் பக்தவத்சலம் மண்டபம் ஆகியவற்றை மேம்படுத்த 3 கோடியே 36 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  விடுதலைப் போராட்ட வீரர் தளி பாளையக்காரர் மலையாண்டி வெங்கிடுபதி எத்தலப்பருக்கு திருப்பூர் மாவட்டத்தில் நினைவு மண்டபம் அமைக்க 2 கோடியே 60 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தியாகி ஈஸ்வரன் அவர்களுக்கு ஈரோடு மாவட்டத்தில் அரங்கம் அமைக்க 

2 கோடியே 60 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழகத்தின்  260 ஆண்டு கால தொடர் பங்களிப்பு குறித்து, எதிர்கால இளம் சமுதாயம் அறிந்து கொள்ளும் வகையில், நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய விடுதலை நாள் அருங்காட்சியகம் ஒன்று சென்னையில் அமைக்கப்படும் என்பதைப் பெருமிதம் பொங்க, இவ்வரலாற்றுச் சிறப்புமிகு நாளில் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஏழை எளிய மக்களின் தேவைகளை உணர்ந்து, அவர்கள் கேட்பதற்கு முன்னதாகவே அவற்றை நிறைவேற்றித் தரும் அரசாகத் தி.மு.க. அரசு செயல்பட்டு வருகிறது. ஆளும் கட்சி வென்ற தொகுதி, எதிர்க்கட்சி வென்ற தொகுதி என்ற பாகுபாடு எங்களுக்கு இல்லை. தமிழ்நாடு முதலமைச்சர் என்ற வகையில் அனைத்துத் தொகுதியும் எனது தொகுதிதான். அனைத்து மக்களின் அரசாகத்தான் இந்த அரசு செயல்பட்டு வருகிறது.  இன்றைக்கும் சிறு பிரச்னையாக இருந்தாலும், சம்பந்தப்பட்ட அமைச்சருக்கோ, அதிகாரிகளுக்கோ, முதலில் தொடர்பு கொண்டு கேட்கும் அளவுக்குச் செயல்பட்டு வருகிறேன். இந்தப் பொறுப்பை எனக்கு வழங்கிய தாய்த் தமிழ்நாட்டு மக்களுக்கு என்றும் நான் உண்மையாக இருப்பேன்  என்பதை தேசியக் கொடியின் நிழலில் நின்று உறுதி எடுத்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து