முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இரவு நேரங்களில் பயணம் செய்யும்போது சக பயணிக்கு தொந்தரவு அளித்தால் நடவடிக்கை : இந்திய ரயில்வேயின் புதிய விதிமுறைகள் வெளியீடு

ஞாயிற்றுக்கிழமை, 18 செப்டம்பர் 2022      தமிழகம்
Train 2022 09 03

Source: provided

சென்னை : ரயில்களில் இரவு நேரங்களில் பயணம் செய்யும் போது சக பயணிகளுக்கு தொந்தரவு அளித்தால், ரயில்வே நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுப்பது குறித்து புதிய விதிமுறையை வகுத்துள்ளது. 

வெகுதூரங்களுக்கு இரவில் பயணம் செய்ய முதியோர்கள், பெண்கள், மாற்றுத்திறனாளிகள் பெரும்பாலும் ரயில் பயணங்களையே விரும்புகின்றனர். அமைதியான பயணம், கழைப்பின்மை, தூக்கம் தடைப்படாதது, பாதுகாப்பு உள்ளிட்ட அம்சங்களால் இதற்கு முக்கியத்தும் அளிக்கின்றனர். புதிய விதிமுறை 

ஆனால் சமீப காலமாக ஒரு சில பயணிகளுக்கு ரயில் பயணம் என்றால் முகம் சுழிக்கும் வகையில் இருக்கிறது. முன்பு இருந்ததை விட தற்போது நடைமுறைகள் அனைத்தும் மாறி விட்டன.

இதனால், இந்திய ரயில்வே நிர்வாகம் இரவு பயண விதிகளில் மாற்றம் செய்து உள்ளது. குறிப்பாக இரவில் தூங்கும் பயணிகளின் சிரமத்தை கருத்தில் கொண்டு ரயில்வே நிர்வாகம் இரவுப் பயண விதிகளில் இந்த புதிய விதிமுறைகளை வகுத்துள்ளது. அதன்படி புதிய விதிகளை அனைத்து பயணிகளும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக முழுமையான தகவல்களை ரயில்வே நிர்வாகம் அறிவித்து உள்ளது. 

சப்தமாக பேசக்கூடாது

புதிய விதிகளின்படி, இரவு 10 மணிக்கான வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளது. இரவு பயணத்தின் போது எந்த ரயில் பயணிகளும் செல்போனில் சத்தமாக பேசவோ, உரத்த குரலில் பாடல்களை கேட்கவோ கூடாது. இரவில், இரவு விளக்கு தவிர மற்ற அனைத்து விளக்குகளையும் அணைக்க வேண்டும். இதனால் சக பயணிகளின் தூக்கம் கெடாமல் இருக்கும். மீறி செயல்பட்டால் பயணிகளிடமிருந்து பெறப்படும் புகார்களின் பேரில், ரயில்வே நிர்வாகம் அத்தகைய நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும். பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 

ரயில்களில் உள்ள சோதனை ஊழியர்கள், பாதுகாப்பு படையினர் (ஆர்.பி.எப்.), மின்சார சாதனங்கள் பராமரிப்பவர்கள், உணவு பரிமாறும் பிரிவு ஊழியர்கள்மற்றும் பராமரிப்பு ஊழியர்கள் இரவில் அமைதியாக வேலை செய்வார்கள். குறிப்பாக, முதியோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட ஒற்றைப் பெண்களுக்கு ரயில்வே ஊழியர்கள் உடனடி உதவி வழங்குவார்கள். 

ரெயில்வே ஊழியர்கள் பொறுப்பு புதிய விதிகளின்படி, ரயிலில் பயணித்தவர்களிடம் இருந்து பெறப்படும் புகார்களுக்கு தீர்வு காணப்படாவிட்டால், ரயில்வே ஊழியர்களின் பொறுப்புணர்வை சரி செய்யலாம் என்ற விதிமுறையும் உள்ளது. அனைத்து மண்டலங்களுக்கும் இந்த விதிகளை உடனடியாக அமல்படுத்துவதுடன், வரும் காலங்களில் பயணிகள் பாதிக்கப்பட்டால் ரயில்வே ஊழியர்களே பொறுப்பு ஏற்க வேண்டும் என்று ரயில்வே அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. 

பயணிகள் நலன் கருதி, ரயில்வே நிர்வாகம் அவ்வப்போது மாற்றங்கள் செய்வது வழக்கம். அந்த வகையில் தற்போது பயணிகளின் இரவு தூக்கம் தடைப்படாமல் இருப்பதற்காக இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது என்று ரயில்வே உயர் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து