முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஷர்துல் அபார பந்துவீச்சு: நியூசி. 'ஏ' அணியை வீழ்த்திய இந்திய ஏ அணி

வியாழக்கிழமை, 22 செப்டம்பர் 2022      விளையாட்டு
sharthul 2022-09-22

Source: provided

நியூசிலாந்து ஏ அணி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 நான்கு நாள் ஆட்டங்களிலும் 3 லிஸ்ட் ஏ ஆட்டங்களிலும் விளையாடுகிறது.  ஒருநாள் தொடர் நேற்று முதல் தொடங்கியுள்ளது. சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற முதல் ஒருநாள் ஆட்டத்தில் நியூசிலாந்து ஏ அணி 40.2 ஓவர்களில் 167 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. மைக்கேல் ரிப்பன் அதிகபட்சமாக 61 ரன்கள் எடுத்தார். ஷர்துல் தாக்குர் 4 விக்கெட்டுகளும் குல்தீப் சென் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினார்கள். 

இந்திய ஏ அணி சிறப்பாக பேட்டிங் செய்து 31.5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 170 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ருதுராஜ் 41, திரிபாதி 31 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்கள். சஞ்சு சாம்சன் 29, ரஜத் படிதார் 45 ரன்கள் எடுத்துக் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்கள். 

____________

அணியில் இந்திரஜித்திற்கு 

வாய்ப்பு: தினேஷ் கார்த்திக்

கோயம்புத்தூரில் துலீப் கோப்பை இறுதி ஆட்டம் நடைபெறுகிறது. இந்த ஆட்டத்தில் தெற்கு மண்டல அணியில் இடம்பெற்றுள்ள சாய் கிஷோர், பாபா இந்திரஜித் ஆகிய இரு தமிழக வீரர்களும் சிறப்பாக விளையாடி வருகிறார்கள். மேற்கு மண்டல அணி முதல் இன்னிங்ஸில் 270 ரன்கள் எடுத்தது. விக்கெட் கீப்பர் பேட்டர் ஹெட் படேல் 98 ரன்கள் எடுத்தார். சாய் கிஷோர் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தெற்கு மண்டல அணி, 63 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 255 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. 

பாபா இந்திரஜித் சிறப்பாக விளையாடி சதமடித்தார். ரஞ்சி கோப்பைப் போட்டியில் விளையாடிய 3 ஆட்டங்களில் 3 சதங்கள், ஒரு அரை சதமெடுத்த இந்திரஜித் (3 ஆட்டங்களில் 396 ரன்கள், சராசரி - 99.00), துலீப் கோப்பை இறுதி ஆட்டத்திலும் சதமடித்து அசத்தியுள்ளார்.  இதையடுத்து இந்திய அணியில் பாபா இந்திரஜித் விரைவில் தேர்வாக வாய்ப்புண்டு என தமிழகத்தைச் சேர்ந்த பிரபல கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.  தீவிரமான துலீப் கோப்பை இறுதி ஆட்டத்தில் அபாரமான வீரரிடமிருந்து தரமான சதம். இதுவரை முதல் தர கிரிக்கெட்டில் என்னவொரு சாதனை. இந்திய அணியில் விரைவில் வாய்ப்பு கிடைக்கலாம். நன்றாக விளையாடினீர்கள் பாபா இந்திரஜித் என்று கூறியுள்ளார். 

______________

பாக்., ஜெர்சியை கிண்டல் 

செய்த டானிஷ் கனேரியா 

டி20 உலகக்கோப்பையில் விளையாட உள்ள உலக அணிகள் போட்டியில் தாங்கள் அணிய உள்ள புதிய ஜெர்சியை அறிமுகம் செய்துவருகின்றன. இந்த சூழலில் பாகிஸ்தான் அணியும் தங்களின் புதிய ஜெர்சியை அறிமுகம் செய்துள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஜெர்சி தொடர்பாக, சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், பாகிஸ்தான் அணியின் ஜெர்சியைப் பார்க்கும்போது பழக்கடையில் நிற்பதைப் போன்ற உணர்வு ஏற்படுவதாகவும், வழக்கமான அடர் பச்சை வண்ணத்தில் ஜெர்சியை வடிவமைத்து இருக்க வேண்டும் என்றும் அந்நாட்டு முன்னாள் வீரரான கனேரியா கருத்து தெரிவித்து உள்ளார்.

_____________

இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் 

பொறுப்பு தலைவர் ராஜினாமா

இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் பொறுப்புத் தலைவர் பதவியை அனில் கன்னா ராஜினாமா செய்து உள்ளார். நரீந்தர் பத்ராவின் விலகலுக்குப் பிறகு இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் இடைக்கால பொறுப்புத் தலைவராக அனில் கன்னா பொறுப்பேற்றார்.

ஆனால் இடைக்கால தலைவர் பதவியை அங்கீகரிக்க இயலாது என சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி கூறியது. இந்நிலையில், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் அறிவுறுத்தல்களை மதித்து, பொறுப்புத் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக அனில் கன்னா கூறி உள்ளார்.

_____________

அனுதாபத்தை எதிர்பார்க்கவில்லை: 

தென்ஆப்பிரிக்கா கேப்டன் ஆதங்கம்

டி20 லீக் போட்டிக்கான ஏலத்தில் தான் தேர்வு செய்யப்படாதது குறித்து தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார் தென்னாப்பிரிக்க அணியின் வெள்ளைப் பந்து கேப்டன் டெம்பா பவுமா.  2023 ஜனவரி மாதம் ஆறு அணிகள் பங்கேற்கும் புதிய டி20 லீக் போட்டியை சூப்பர் ஸ்போர்ட் நிறுவனத்துடன் இணைந்து நடத்துகிறது.. டி20 உலகக் கோப்பைப் போட்டியில் தென்னாப்பிரிக்க கேப்டனாகச் செயல்படவுள்ள டெம்பா பவுமாவை வீரர்களின் ஏலத்தில் எந்த அணியும் தேர்வு செய்யவில்லை. அதேபோல தெ.ஆ. டெஸ்ட் கேப்டன் டீன் எல்கரையும் எந்த அணியும் தேர்வு செய்யவில்லை. 

இந்தியாவில் வெள்ளைப் பந்து தொடர்களில் விளையாடுவதற்காக இந்தியாவுக்குப் புறப்படுவதற்கு முன்பு செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார் பவுமா. அப்போது அவர் கூறியதாவது: எஸ்ஏ20 போட்டிக்கான வீரர்கள் ஏலத்தில் எந்த அணியும் என்னைத் தேர்வு செய்யாதது குறித்து எனக்கு வருத்தம் இல்லை என்று சொன்னால் பொய் சொலவதாக ஆகிவிடும். அந்தப் போட்டியில் பங்கேற்கத் தயாராக இருந்தேன். எனக்கு வருத்தமாகத்தான் உள்ளது. ஏமாற்றப்பட்டு விட்டதாகவே உணர்கிறேன். அதற்காக (போட்டியில் பங்கேற்பதற்கான) உரிமை உள்ளதாக நான் எண்ணவில்லை. அதேசமயம் இதில் அதிகக் கவனம் செலுத்த விரும்பவில்லை. இது சரியான நேரமில்லை என்றார்.

________________

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து