முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குஜராத் சட்டசபை தேர்தல்: 89 தொகுதிகளில் முதல் கட்ட பிரசாரம் இன்றுடன் ஓய்கிறது: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் தீவிர ஓட்டு வேட்டை

திங்கட்கிழமை, 28 நவம்பர் 2022      இந்தியா
Modi 2022-11-28

குஜராத்தில் முதல் கட்டமாக தேர்தல் நடைபெறுகிற 89 தொகுதிகளில் இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்கிறது. பிரதமர் மோடியும், தலைவர்களும் தீவிர ஓட்டு வேட்டையாடினர்.

நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ள குஜராத் சட்டசபை தேர்தல் பிரசார களம், களை கட்டி வருகிறது. அங்கு 182 இடங்களைக் கொண்ட சட்டசபைக்கு டிசம்பர் 1-ந் தேதி, 5-ந் தேதி என 2 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. முதல் கட்டமாக 89 தொகுதிகளில் 1-ந் தேதி தேர்தல் நடப்பதால், அங்கெல்லாம் பிரசாரம் உச்சகட்டத்தை அடைந்து வருகிறது.

வழக்கமாக பா.ஜ.க.வுக்கும், காங்கிரசுக்கும் இடையே நேரடி போட்டி நடைபெற்று வந்த குஜராத்தில், இந்த முறை அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியும் 181 வேட்பாளர்களை களம் இறக்கி, ஆட்சியைப் பிடிக்கும் கனவில் இருப்பதால் மும்முனை போட்டி நிலவுகிறது. 

89 தொகுதிகளில் 1-ம் தேதி நடக்கிற முதல் கட்ட தேர்தலில் 788 வேட்பாளர்களின் அரசியல் எதிர்காலம் தீர்மானிக்கப்படுகிறது. இவர்களில் 167 வேட்பாளர்கள் மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. குறிப்பாக 100 பேர் மீது கொலை, கற்பழிப்பு உள்ளிட்ட கடுமையான குற்றச்சாட்டுகள் உள்ளதாக ஏ.டி.ஆர். என்னும் ஜனநாயக சீர்திருத்த சங்கம் சுட்டிக்காட்டி உள்ளது.

ஆம் ஆத்மி கட்சி 88 இடங்களில் போட்டியில் உள்ளது. இந்த 88 வேட்பாளர்களில் 36 சதவீதத்தினர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன. காங்கிரஸ் கட்சி 89 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளது. அந்த வேட்பாளர்களில் 35 சதவீதத்தினர் மீது கிரிமினல் வழக்குகள் இருக்கின்றன. 89 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ள பா.ஜ.க.வில், 16 சதவீத வேட்பாளர்கள் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன. 

முதல் கட்ட தேர்தலில் வைர நகரம் என்று அழைக்கப்படுகிற தொழில் நகரான சூரத் முக்கிய இடம் பிடிக்கிறது. இங்கிருந்து 12 எம்.எல்.ஏ.க்கள் சட்டசபைக்கு செல்கிறார்கள். முதல் கட்ட தேர்தலை சந்திக்கிற இந்த சூரத்தில் பா.ஜ.க.வுக்காக பிரதமர் மோடி ஓட்டு வேட்டையாடினார். அவர் சூரத் விமான நிலையத்தில் இருந்து மோட்டா வரச்சா என்ற இடம் வரையில் 25 கி.மீ. தொலைவுக்கு பிரமாண்ட வாகன பேரணி (ரோடு ஷோ) நடத்தி ஆதரவு திரட்டினார். அதைத் தொடர்ந்து அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.

மேலும் அவர் பாரூச் மாவட்டத்தில் உள்ள நேட்ராங்க், கெடா மாவட்டத்தின் மெகமதாபாத் ஆகிய நகரங்களிலும் பிரசார கூட்டங்களில் கலந்து கொண்டு பேசி பா.ஜ.க. வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார். கெடா மாவட்டத்தில் மெகமதாபாத்தில் அவர் பேசும்போது, "ஜனநாயகம் வலிமை பெற அதிக எண்ணிக்கையிலானவர்கள் வாக்கு அளிக்க வேண்டும். ஜனநாயகம் வலுவானால், நாம் அனைவரும் வலிமை பெற முடியும்" என தெரிவித்தார்.

பழங்குடியினர் ஆதிக்கம் செலுத்துகிற நர்மதா மாவட்டத்தின் டெடியாபடா நகரில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து அந்த கட்சியின் தலைவர் கார்கே ஓட்டு வேட்டையாடினார். அங்கு நடந்த பிரசார கூட்டத்தில் பேசிய அவர் பிரதமர் மோடியையும், உள்துறை மந்திரி அமித்ஷாவையும் சாடினார். 

காங்கிரசுக்காக சத்தீஷ்கார் முதல்-மந்திரி பூபேஷ் பாகல், பாலிடானா என்ற இடத்தில் நடந்த பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார். ஆம் ஆத்மிக்காக, டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் சூரத்தில் முற்றுகையிட்டு தீவிர ஓட்டு வேட்டையில் ஈடுபட்டார். அவர் அங்கு ஜவுளித்தொழில் அதிபர்கள் மற்றும் ரத்தினக்கல் கைவினைஞர்களுடன் டவுன்ஹால் சந்திப்புகளை நடத்தி தனது கட்சி வேட்பாளர்களுக்கு ஓட்டு வேட்டையாடினார். முதல் கட்ட தேர்தல் நடைபெறும் 89 தொகுதிகளில் இன்று (29-ந் தேதி) மாலை தேர்தல் பிரசாரம் முடிவுக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து