முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பேனா நினைவுச் சின்னம்: விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு

வியாழக்கிழமை, 2 பெப்ரவரி 2023      தமிழகம்
Peni 20221 02 02

Source: provided

சென்னை: கடலுக்குள் கருணாநிதி பேனா நினைவு சின்னம் அமைக்கும் திட்டம் குறித்து தமிழ்நாடு கடற்கரை மண்டல மேலாண்மை ஆணையம் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தென் மண்டல அமர்வு உத்தரவிட்டுள்ளது.

சென்னை மெரினா கடலில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு பேனா நினைவு சின்னம் அமைப்பதற்கு தடை விதிக்கக் கோரி, ராம்குமார் ஆதித்யன் என்பவர் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தென் மண்டல அமர்வில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு வியாழக்கிழமை (பிப்.2) விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், ‘பேனா நினைவுச் சின்னக் கட்டுமானத்திற்கு தடை விதிக்க வேண்டும். பேனா நினைவுச் சின்னத்தை அமைப்பதற்கான கடற்கரை ஒழுங்கு மண்டல விண்ணப்பத்தை பரிசீலிக்க ஒன்றிய அரசுக்குத் தடை விதிக்க வேண்டும்.

மேலும், மெரினாவிலும், கொட்டிவாக்கம், கோவளம் உள்ளிட்ட கடற்கரையிலும் யாருக்கும் நினைவிடங்கள் அமைக்க தடை விதிக்க வேண்டும்’ என்று வாதிடப்பட்டது. அப்போது அரசு தரப்பு வழக்கறிஞர், "இத்திட்டத்திற்கு பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தப்பட்டது" என்று தெரிவித்தார்.

இதையடுத்து, பசுமைத் தீர்ப்பாய தென்மண்டல அமர்வின் நீதித் துறை உறுப்பினர் புஷ்பா சத்தியநாராயணா, ‘பத்திரிகைகளில் நான் படித்தது உண்மை என்றால் அது கருத்துக் கேட்புக் கூட்டமே இல்லை. எல்லா தரப்பினரையும் அழைத்து கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தப்பட்டதா?’ என்று கேள்வி எழுப்பினார். மேலும், இத்திட்டம் குறித்து விரிவான அறிக்கையை தமிழ்நாடு கடற்கரை மண்டல மேலாண்மை ஆணையம் தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை மார்ச் 2-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து