முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அல்ட்ரா சவுண்ட் பரிசோதனை செய்ய சிறப்பு தகுதி பெற்ற மருத்துவர்களுக்கு மட்டுமே அனுமதி: சென்னை ஐகோர்ட்

திங்கட்கிழமை, 29 மே 2023      தமிழகம்
chennai-high-court 2022-08-29

Source: provided

சென்னை : சிசு பாலின தேர்வு தடைச் சட்டத்தின்படி, சிறப்பு தகுதி பெற்றவர்கள் மட்டுமே கர்ப்பிணி பெண்களுக்கு அல்ட்ரா சவுண்ட் தொழில்நுட்ப பரிசோதனைகள் செய்ய தகுதி உள்ளது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆயுர்வேதம், சித்தா, யுனானி, ஹோமியோபதி மற்றும் யோகா போன்ற இந்திய மருத்துவமுறைகளான ஆயுஷ் மருத்துவ படிப்புகளை படித்து, அல்ட்ரா சவுண்ட் பரிசோதனை தொடர்பான சான்றிதழ் முடித்த மருத்துவர்கள், கர்ப்பிணி பெண்களுக்கு ஒலியியல் பரிசோதனைகள் செய்ய அனுமதிக்க மத்திய - மாநில அரசுகளுக்கு உத்தரவிடக் கோரி தமிழ்நாடு ஆயுஷ் ஒலியியல் பரிசோதனையாளர்கள் சங்கத்தின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, "சிசு பாலின தேர்வு தடைச் சட்டத்தில், கர்ப்பிணி பெண்களுக்கு அல்ட்ரா சவுண்ட் தொழில்நுட்ப பரிசோதனைகள் மேற்கொள்ள பல்வேறு சிறப்பு தகுதிகளை வரையறுத்துள்ளது. அந்தத் தகுதிகளை பெற்ற மருத்துவர்களுக்கு மட்டுமே இந்த பரிசோதனைகளை நடத்த தகுதி உள்ளது.

இந்த சிறப்பு தகுதிகளைப் பெறாத மருத்துவர்கள், இச்சோதனைகளை நடத்த தகுதியில்லை. மேலும், மனுதாரர் சங்க உறுப்பினர்கள் எக்ஸ்ரே, இசிஜி, உள்ளிட்ட அடிப்படை பயிற்சி மட்டுமே பெற்றுள்ளதால் கர்ப்பிணி பெண்களுக்கு அல்ட்ரா சவுண்ட் பரிசோதனைகள் செய்ய தேவையான தகுதியைப் பெறவில்லை. எனவே, இந்தப் பரிசோதனைகளை மேற்கொள்ள அவர்களை அனுமதிக்க முடியாது” எனக் கூறி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து