முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய-ஆஸ்திரேலிய அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி இன்று துவக்கம்

செவ்வாய்க்கிழமை, 6 ஜூன் 2023      விளையாட்டு
India-Australia 2023 06 06

Source: provided

லண்டன் : இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் இன்று தொடங்குகிறது.

மாலை 3 மணிக்கு...

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 2-வது உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி, இங்கிலாந்தில் உள்ள லண்டன் ஓவலில் இன்று (புதன்கிழமை) தொடங்குகிறது. இந்திய நேரப்படி மாலை 3 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

தீவிர பயிற்சி...

இதையொட்டி ஒரு வாரத்திற்கு மேலாக இரு அணியினரும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி பட்டம் வென்று வரலாறு படைக்குமா? என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.  இந்த நிலையில் போட்டி குறித்து இந்திய கேப்டன் ரோகித் சர்மா கூறியதாவது:-

மிகவும் சவால்... 

பொதுவாக இங்கிலாந்தில் உள்ள சீதோஷ்ண நிலை பேட்ஸ்மேன்களுக்கு மிகவும் சவால் அளிக்கக்கூடியது. இங்கு அவசரப்படாமல் நிலைத்து நின்று விளையாடினால் தான் கணிசமாக ரன் சேர்க்க முடியும். எனவே நீண்ட நேரம் பேட்டிங் செய்வதில் தொடர்ந்து கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும். ஆனால் அது எளிதான விஷயம் அல்ல.

எனது ஸ்டைல்....

இங்குள்ள சீதோஷ்ண நிலையில் விளையாடிய பல தொடக்க ஆட்டக்காரர்களின் பேட்டிங்கை பார்த்து இருக்கிறேன். அதில் நிறைய பேர் ரன் குவித்ததையும் பார்த்து உள்ளேன். ஆனால் அவர்களை நான் பின்பற்றி விளையாடப்போவதில்லை. ஏனெனில் அவர்களின் ஆட்ட அணுகுமுறை வேறு. எனது ஸ்டைல் வேறு. ஆனால் அவர்கள் ரன் குவித்த விதத்தை தெரிந்து வைத்திருந்தால் நன்றாக இருக்கும் என்றார்.

ஓவல் எப்படி?

நாங்கள் அறிந்த வரை அனேகமாக சிறந்த பேட்டிங் ஆடுகளங்களில் ஒன்றாக லண்டன் ஓவல் இருக்கிறது. இங்கு பவுண்டரி தூரம் குறைவு என்பதால், உங்களது ஷாட்டுகளை ரன்னாக மாற்ற முடியும். அதற்கு ஏற்ப நீண்ட நேரம் நிலைத்து விட்டால் நிச்சயம் சாதிக்கலாம். அதில் தான் கவனம் தேவை. டெஸ்ட் கிரிக்கெட்டில் கடந்த 3-4 ஆண்டுகளாக நன்றாக விளையாடி பல வெற்றிகளை குவித்துள்ளோம். அதன் மூலம் பெற்ற நம்பிக்கையை இளம் வீரர்களுக்கு வழங்கி, அவர்களை விரும்பும் விதத்தில் சிறப்பாக விளையாட வைக்க முடியும் என்று ரோகித் சர்மா கூறினார்.

கம்மின்ஸ் கருத்து...

இது குறித்து ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ் கூறுகையில், 'இப்போதெல்லாம் கிரிக்கெட் வீரர்களுக்கு ஓய்வு கிடைப்பது அரிதாகி விட்டது. நாங்கள் தொடர்ச்சியாக 6 டெஸ்டுகளில் (டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி மற்றும் ஆஷஸ் தொடர்) விளையாட வேண்டி இருக்கிறது என்று எப்போதும் சொல்லி வந்திருக்கிறேன். அதனால் மிகையான போட்டிகளை விட குறைவான போட்டிகளில் விளையாடிவிட்டு வந்திருப்பது கொஞ்சம் நல்லது என்றே நினைக்கிறேன். 

கடினமாக பயிற்சி... 

பந்து வீச்சாளர்களின் பார்வையில் இதை சொல்கிறேன். உடல்ரீதியாக புத்துணர்ச்சியுடன் இருக்க விரும்புகிறேன். இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரில் ஆடிவிட்டு தாயகம் திரும்பியதும் நாங்கள் கடினமாக பயிற்சி மேற்கொண்டோம். புத்துணர்ச்சியுடன் போட்டியை எதிர்கொள்ள ஆர்வமாக இருக்கிறோம்' என்றார். 

ஆஸ்திரேலிய அணி:

பாட் கம்மின்ஸ் (கேப்டன்), ஸ்காட் போலண்ட், அலெக்ஸ் கேரி, கேமரூன் கிரீன், மார்கஸ் ஹாரிஸ், ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லாபுசாக்னே, நாதன் லயன், ஜோஷ் இங்கிலிஸ், டாட் மர்பி, ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், டேவிட் வார்னர். ரிசர்வ் வீரர்கள்:- மிட்ச் மார்ஷ், மாட் ரென்ஷா.

இந்திய அணி:

ரோஹித் சர்மா (கேப்டன்), ரவிச்சந்திரன் அஷ்வின், கே.எஸ்.பாரத், ஷுப்மன் கில், ரவீந்திர ஜடேஜா, விராட் கோலி, இஷான் கிஷன், சேதேஷ்வர் புஜாரா, அக்சர் படேல், அஜிங்க்யா ரஹானே, முகமது ஷமி, முகமது சிராஜ், ஷர்துல் தாக்கூர், ஜெய்தேவ் உனடக், உமேஷ் யாதவ். ரிசர்வ் வீரர்கள்:- யஷஸ்வி ஜெய்ஸ்வால், முகேஷ் குமார், சூர்யகுமார் யாதவ்.

20 வருடம் கழித்து...

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) நடத்தும் ஒரு தொடரின் இறுதி ஆட்டத்தில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் 20 வருடம் கழித்து மோத உள்ளன. இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் கடைசியாக 2003ல் நடந்த ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் இறுதி ஆட்டத்தில் சந்தித்தன. அந்த ஆட்டத்தில் இந்திய அணி தோல்வி அடைந்தது. அந்த தோல்விக்கு இந்திய அணி பதிலடி கொடுக்குமா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து கொண்டுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து