முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அணியுடன் இணைந்தார் கோலி

திங்கட்கிழமை, 18 மார்ச் 2024      விளையாட்டு
Virat-Kohli 2023 08 11

Source: provided

2024ம் ஆண்டுக்கான ஐ.பி.எல் தொடர் வரும் 22ம் தேதி தொடங்க உள்ளது. இந்த தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், குஜராத் டைட்டன்ஸ் உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொள்கின்றன. இந்த தொடரின் முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்.சி.பி.) அணிகள் மோத உள்ளன. இந்த ஆட்டம் சென்னையில் நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த தொடரில் சிறப்பாக செயல்பட அனைத்து அணிகளும் பயிற்சி முகாம் ஏற்பாடு செய்து பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. ஐ.பி.எல் தொடரில் பங்கேற்பதற்காக ஒவ்வொரு அணியில் உள்ள வீரர்களும் தங்களது பயிற்சி முகாமில் இணைந்த வண்ணம் உள்ளனர். 

இதில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தனிப்பட்ட காரணங்களுக்காக விலகிய இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி ஆர்.சி.பி. அணியுடன் இணையாமல் இருந்தார். கடந்த ஜனவரி மாதம் லண்டன் சென்ற விராட் கோலி குறித்து பல வதந்திகள் பரவிய நிலையில் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது தெரிய வந்தது. இதனை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு வதந்திகளுக்கு விராட் கோலி முற்றுப்புள்ளி வைத்தார். இதனையடுத்து விராட் கோலி ஐ.பி.எல். தொடரில் பங்கேற்பதற்காக லண்டனில் இருந்து நேற்று மும்பை திரும்பினார். இந்நிலையில் இந்தியா திரும்பிய ஒரு நாளிலேயே அவர் ஆர்.சி.பி. அணியுடன் இணைந்துள்ளார். 

______________________________________________

சி.எஸ்.கே.வுக்கு அஸ்வின் கோரிக்கை 

இந்தியாவில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் ஐ.பி.எல். தொடரின் 17-ஆவது சீசன் வரும் 22-ம் தேதி தொடங்க உள்ளது. இந்த தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்த உள்ளன. கடைசி முறையாக சேப்பாக்கம் மைதானத்தில் டோனி - கோலி இருவரும் விளையாடுவதை பார்க்க ரசிகர்கள் ஆவலாக உள்ளனர். இதுமட்டுமல்லாமல் ஐ.பி.எல். தொடருக்கான தொடக்க விழாவும் சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கவுள்ளது. 

இந்த நிலையில் நேற்று சி.எஸ்.கே. - ஆர்.சி.பி. அணிகளுக்கு இடையிலான ஆட்டத்திற்கான டிக்கெட் விக்கெட் விற்பனை நடைபெற்றது. தில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான ரவிச்சந்திரன் அஸ்வினுக்கும் டிக்கெட் கிடைக்கவில்லை என்பது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து அஸ்வின், தனது எக்ஸ் பக்கத்தில், 'சேப்பாக்கத்தில் நடக்கவுள்ள சி.எஸ்.கே. - ஆர்.சி.பி. அணிகளுக்கு இடையிலான போட்டியை நேரில் காண்பதற்கான டிக்கெட்டுகளுக்கு அதிகபடியான டிமாண்ட் உள்ளது. எனது மகள்கள் இருவரும் தொடக்க விழா மற்றும் போட்டியை பார்க்க விரும்புகிறார்கள். சென்னை அணி நிர்வாகம் உதவி செய்யவும்' என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

______________________________________________

கோலியுடன் டு பிளெஸ்ஸி ஆலோசனை

விராட் கோலியுடன் இணைந்து பேட்டிங் செய்த அனுபவம் குறித்து பெங்களூரு அணியின் கேப்டன் டு பிளெஸ்ஸி தெரிவித்துள்ளார். ஐபிஎல் தொடர் இன்னும் ஒரு சில நாள்களில் தொடங்கவுள்ளது. ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்காக விராட் கோலி லண்டனிலிருந்து இந்தியா வந்தடைந்தார். இந்த நிலையில், விராட் கோலியுடன் இணைந்து பேட்டிங் செய்த அனுபவம் குறித்து பெங்களூரு அணியின் கேப்டன் டு பிளெஸ்ஸி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் பேசியதாவது: விராட் கோலியுடன் பேட்டிங் செய்வது நம்ப முடியாத விதமாக இருக்கும். அவருடன் பேட்டிங் செய்வதை நான் எப்போதும் விரும்புகிறேன். 

எனக்குள் இருக்கும் சக்தியை வெளியில் கொண்டுவருவதற்கு அவர் உதவுகிறார். அவரால் எப்போதும் எவ்வாறு உற்சாகமாக இருக்க முடிகிறது என வியந்திருக்கிறேன். பந்தினை கேட்ச பிடிக்கும்போது கூட நாங்கள் இருவரும் கடும் போட்டியாளராக இருப்போம். அதன் காரணத்தினால் அணிக்காக சிறந்த கேட்ச்சுகளை எங்களால் பிடிக்க முடிகிறது. அவர் அணியின் கேப்டனாக இல்லாதபோதிலும், அணியை வழிநடத்த எனக்கு சிறப்பாக உதவுகிறார் என்றார். இந்த ஆண்டு வரும் மார்ச் 22 ஆம் தேதி நடைபெறும் முதல் ஐபிஎல் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு எதிர்கொள்வது குறிப்பிடத்தக்கது.

______________________________________________

மணிக்கணக்கில் அழுதிருக்கிறேன்: அஸ்வின்

எம்.பி.ஏ. படிப்பதா? கிரிக்கெட்டை தொடருவதா? என்ற குழப்பத்தில் பல மணி நேரம் தனியாக அழுது புலம்பியதாக மனம் திறந்து பேசயுள்ளார் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின். அண்மையில் தனது 100-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர்களில் ஒருவரான ரவிச்சந்திரன் அஸ்வின் விளையாடினார். அதேபோல டெஸ்ட் போட்டிகளில் 500 விக்கெட்டுகளைக் கடந்த இரண்டாவது இந்திய வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்தார். இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் ரவிச்சந்திரன் அஸ்வின் 516 விக்கெட்டுகள் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், 2017இல் தனது கிரிக்கெட் வாழ்க்கையில் பல்வேறு தடைகளை வெற்றிகரமாகக் கடந்து வந்த பாதையை குறித்து சமீபத்திய பேட்டியில் அஸ்வின் குறிப்பிட்டுள்ளார். 2017இல் அஸ்வின் பல்வேறு தடைகளை சந்திக்க வேண்டியிருந்தது. ஒயிட் பால் கிரிக்கெட் எனப்படும், ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டிகளிலிருந்து அஸ்வின் ஓரங்கட்டப்பட்ட காலம் அது. தன் மீது தனக்கே சந்தேகம் எழுந்ததாகவும், தன்னம்பிக்கையை இழந்து தவித்ததாகவும், இதன் காரணமாக, வேறு துறைகளில் கவனம் செலுத்தலாமா என்பது குறித்தும் ஆலோசித்து வந்ததாகவும் அஸ்வின் மனம் திறந்து பேசியுள்ளார். வாழ்க்கையில் என்ன செய்தாலும், அந்த துறையில் சிறப்பாகச் செயல்பட வேண்டுமென்பதை நோக்கமாக கொண்டிருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

______________________________________________

வங்காளதேச அணி அறிவிப்பு

இலங்கை கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரை இலங்கை கைப்பற்றிய நிலையில், ஒருநாள் தொடரை வங்காளதேசம் கைப்பற்றியது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையே டெஸ்ட் தொடர் நடைபெற உள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி வரும் 22-ம் தேதி சிலேட்டில் நடைபெற உள்ளது.

இந்நிலையில் இந்த போட்டிக்கான வங்காளதேச அணி அறிவிக்கப்பட்டுள்ளது. வங்காளதேச கிரிக்கெட் அணியின் 3 வடிவிலான போட்டிகளுக்கும் கேப்டனாக நியமிக்கப்பட்ட நஜ்மூல் ஹொசைன் சாண்டோவின் டெஸ்ட் கேப்டன்ஷிப் பயணம் இந்த தொடரில் இருந்துதான் ஆரம்பமாக உள்ளது. வங்காளதேச அணி விவரம் பின்வருமாறு;- நஜ்மூல் ஹொசைன் சாண்டோ (கேப்டன்), ஜாகிர் ஹசன், மஹ்முதுல் ஹசன் ஜாய், ஷத்மன் இஸ்லாம், லிட்டன் தாஸ், மொமினுல் ஹக் ஷோராப், முஷ்பிகுர் ரஹீம், ஷஹாதத் ஹொசைன் திபு, மெஹிதி ஹசன் மிராஸ், நயீம் ஹசன், தைஜுல் இஸ்லாம், ஷோரிபுல் இஸ்லாம், சையத் கலீத் அகமது, முஷ்பிக் ஹசன், நஹித் ராணா.

______________________________________________

மும்பை அணி புதிய அறிவிப்பு

மும்பை இந்தியன்ஸ் அணியின் அதிகாரபூர்வ பார்ட்னர் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் வருகிற மார்ச் 22 முதல் தொடங்கவுள்ளது. அனைத்து அணிகளும் ஐபிஎல் தொடருக்காக தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆண்டு மும்பை அணியை ஹார்திக் பாண்டியா கேப்டனாக வழிநடத்துவார் என மும்பை அணி நிர்வாகம் அறிவித்தது.

இந்த நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியின் அதிகாரபூர்வ பார்ட்னராக கேட்பரி டைரி மில்க் இணைந்துள்ளது. இது தொடர்பாக மும்பை அணியின் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அந்தப் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இந்த ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணியின் அதிகாரபூர்வ பார்ட்னராக கேட்பரி டைரி மில்க் இணைந்துள்ளதை அறிவிப்பதில் மிகுந்த மகிழ்ச்சி. எங்களுடன் இணைந்து வெற்றியின் அனுபவத்தை பெற தயாராகுங்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து