முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருவாரூர் தியாகராஜ சுவாமி கோவிலில் கோலாகலமாக நடந்த ஆழித்தேரோட்டம்: ஆரூரா, தியாகேசா கோஷத்துடன் வடம் பிடித்த பக்தர்கள்

வியாழக்கிழமை, 21 மார்ச் 2024      ஆன்மிகம்
Tiruvarur-Azhitherottam-202

திருவாரூர், திருவாரூர் தியாகராஜ சுவாமி கோவிலில் நேற்று பங்குனி உத்திர திருவிழாவின் முக்கிய நிகழ்வான ஆழித்தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. அப்போது பக்தர்கள் ஆரூரா, தியாகேசா என்ற கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். 

திருவாரூரில் பிரசித்தி பெற்ற தியாகராஜர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் சைவ சமய தலங்களில் முதன்மை தலமாகவும், சர்வதோஷ பரிகார தலமாகவும் விளங்குகிறது. இந்த கோவிலின் பங்குனி உத்திர திருவிழா கடந்த பிப்ரவரி 27-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 

இந்த பங்குனி உத்திர திருவிழாவின் முக்கிய நிகழ்வான ஆழித்தேரோட்டம் நேற்று நடைபெற்றது. பிரசித்தி பெற்ற இந்த திருவாரூர் தேர் ஆசிய கண்டத்திலேயே மிகப் பெரிய தேராகும். இந்த தேரின் நிலை பீடம் 30 அடி உயரமும் 30 அடி அகலமும் கொண்டது. நான்கு ராட்சத இரும்பு சக்கரங்களுடன் இதன் எடை 220 டன்னாக இருக்கிறது. 

இந்த தேரின் சக்கரங்களில் ஹைட்ராலிக் பிரேக் பொருத்தப்பட்டுள்ளது. இந்த தேரின் மேல் கட்டுமானம் மூங்கில்கள் மற்றும் பனஞ்சப்பைகள் கொண்டு 48 அடி உயரத்திற்கு கட்டுமான பணியும் அதற்கு மேல் 12 அடி உயரத்திற்கு சிகரம் அதற்கு மேல் 6 அடி உயரத்திற்கு தேர் கலசம் என மொத்தம் 96 அடி உயரத்தில் இந்த தேர் கட்டப்பட்டு துணியால் அலங்கரிக்கப்பட்டு குதிரைகள் பூட்டப்பட்டுள்ளது. 

அலங்கரிக்கப்பட்ட பின் தேரின் எடை 300 டன் ஆகும். முன்பகுதியில் 33 அடி நீளமும் 11 அடி உயரமும் கொண்ட நான்கு மர குதிரைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. 

தேரோட்டத்தை முன்னிட்டு தேரில் தியாகராஜ சுவாமி எழுந்தருளினார். இந்த ஆழித்தேரோட்டத்தினை மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ வடம்பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து பக்தர்கள் ஆரூரா, தியாகேசா என்ற கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். 

தியாகராஜர் கோவிலின் கீழவீதியில் தொடங்கிய இந்த தேரோட்டம் தெற்கு வீதி, மேலவீதி, வடக்கு வீதி என சுற்றி வந்து மாலை மீண்டும் நிலையடிக்கு தேர் வந்து சேர்ந்தது.  பெரிய தேர் எனப்படும் தியாகராஜ சுவாமி தேரோட்டத்திற்கு முன்பு முருகர் தேர், விநாயகர் தேர் இழுத்து செல்லப்பட்டது.

ஆழித்தேரை தொடர்ந்து அம்பாள் தேர், சண்டிகேஸ்வரர் தேர் ஆகிய தேர்களும் இழுத்து செல்லப்பட்டன. மொத்தம் 5 தேர்களும் ஒன்றன்பின் ஒன்றாக வீதியில் அசைந்து வந்தது கண்கொள்ளா காட்சியாக இருந்தது. 

உலகப் புகழ்பெற்ற இந்த ஆழித்தேரோட்டத்தை பார்ப்பதற்காக லட்சக்கணக்கான பொதுமக்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை புரிந்திருந்தனர். 2000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து