முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரெபல் விமர்சனம்

திங்கட்கிழமை, 25 மார்ச் 2024      சினிமா
Rebel-Review 2024-03-25

Source: provided

தேயிலை தோட்டங்களில் வேலை பார்க்கும் தமிழர்கள் தங்களைப் போன்று தங்களது பிள்ளைகளும் கஷ்ட்டப்படக்கூடாது, அவர்களின் வாழ்க்கை நிலை மாற வேண்டும் என்றால் அவர்கள் எப்படியாவது படித்து முன்னேற வேண்டும் என்று விரும்புகிறார்கள். அதன்படி அவர்களது பிள்ளைகளும் படித்துவிட்டால் நம் வாழ்க்கை மாறிவிடும் என்று நம்புவதோடு, பட்டப்படிப்பு படிப்பதற்காக பாலக்காட்டில் உள்ள அரசினர் கல்லூரிக்கு செல்கிறார்கள்.

ஆனால், அந்த கல்லூரியில் சக மாணவர்களுக்கு கிடைக்கும் அடிப்படை வசதிகள் உள்ளிட்ட எதுவும் தமிழ் மாணவர்களுக்கு கிடைப்பதில்லை. அதேபோல், அங்கிருக்கும் இரண்டு மாணவர் அமைப்புகள் தமிழ் மாணவர்களை ராக்கிங் என்ற பெயரில் கொடுமைப்படுத்துவதோடு, அவர்களை அடக்கி ஆளும் போக்கை கடைப்பிடிக்கிறார்கள். இவற்றை சகித்துக்கொண்டு எப்படியாவது படிப்பை முடித்துவிட வேண்டும், என்று அடங்கிப் போகும் தமிழ் மாணவர்கள், ஒரு கட்டத்தில் அமைதி இழந்து நாயகன் ஜி.வி.பிரகாஷ் குமார் தலைமையில் புரட்சியில் ஈடுபடுகிறார்கள். அவர்களுடைய புரட்சி தமிழ் மாணவர்கள் மீதான அடக்குமுறைக்கு முற்றுப்புள்ளி வைத்ததா? அல்லது படிக்க வேண்டும் என்ற அவர்களது கனவுக்கு முற்றுப்புள்ளி வைத்ததா? என்பதை சொல்வது தான் ‘ரெபல்’.

முதல் தலைமுறையாக கல்வி, பொருளாதாரத்தில் முன்னோக்கி செல்ல நினைக்கும் ஒரு இளைஞராக அறிமுகமாகும் ஜி.வி.பிரகாஷ் குமார், கல்லூரியில் தமிழ் மாணவர்களுக்கு எதிராக நடக்கும் அடக்குமுறைகளுக்கு எதிராக போராடும் காட்சிகளில், கண்களில் அனல் பறக்க, நடிப்பில் ஆக்ரோஷம் தெறிக்க, மாணவ புரட்சியாளராக மிரட்டுகிறார். 

நாயகியாக நடித்திருக்கும் மமீதா பைஜுவின் நடிப்பு முந்திய படங்களில் போல இல்லாமல் இருக்கிறது.

கல்லூரி பேராசிரியராக நடித்திருக்கும் கருணாஸ், ஜி.வி.பிரகாஷ் குமாரின் தந்தையாக நடித்திருக்கும் சுப்பிரமணிய சிவா, இருவரும் படிப்பு மட்டுமே ஒருவரின் வாழ்க்கை நிலையை மாற்றும், அதைப்பெறுவதற்கு எத்தகைய இன்னல்களையும் தாங்கி கொள்ளலாம் என்பதை வலியுறுத்தும் கதாபாத்திரங்களாக வலம் வருகிறார்கள்.

தமிழ் மாணவர்களாக நடித்திருக்கும் ‘கல்லூரி’ வினோத், ஆதித்யா பாஸ்கர், ஆண்டனி ஆகியோர் திரைக்கு ஏற்றால் போல் தங்களை மாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

மலையாள மாணவர்கள் அமைப்பின் தலைவர்களாக நடித்திருக்கும் வெங்கடேஷ் மற்றும் ஷலுரஹீம் அடக்குமுறையின் வன்மத்தை தங்களது நடிப்பில் நேர்த்தியாக வெளிப்படுத்தியிருக்கிறார்கள். 

 ஒளிப்பதிவாளர் அருண் ராதாகிருஷ்ணனின் ஒளிப்பதிவு படத்தின் தரத்தை பல மடங்கு உயர்த்தியிருக்கிறது. ஜி.வி.பிரகாஷ் குமாரின் இசையில் அனைத்து பாடல்களுமே அருமையாக உள்ளது.

1980-ம் காலக்கட்டத்தில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு இப்படத்தை எழுதியிருக்கும் இயக்குநர் நிகேஷ் ஆர்.எஸ், தமிழ் மாணவர்கள் மீதான கேரள மாணவர்களின் அடக்குமுறை மற்றும் அதற்கு எதிரான புரட்சியை சுற்றி திரைக்கதை அமைத்திருந்தாலும், காட்சிகள் மற்றும் வசனங்கள் மூலம் சாதி, மதம், மொழி, தொழிலாளர்கள் என எளியவர்கள் மீதான அடக்குமுறையை புரட்சிகளின் மூலமாகவே ஒடுக்க முடியும் என்ற பொதுவான கண்ணோட்டத்தில் சொல்லியிருக்கிறார்.

புரட்சிகரமான கதை என்றாலும், அதை கல்லூரி மாணவர்கள் கொண்டாடும் விதமாகவும், திரை ரசிகர்கள் ரசிக்கும் விதமாகவும் கமர்ஷியலாக கொடுத்திருக்கும் இயகிகுநர் நிகேஷ் ஆர்.எஸ், ஜி.வி.பிரகாஷ் குமாரை ஹீரோவாக அடுத்தக்கட்டத்திற்கு அழைத்துச் சென்றிருக்கிறார்.

மொத்தத்தில், இந்த ‘ரெபல்’ மக்கள் மனதில் மறக்க முடியாத நினைவுகளை பெற்றிருக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து