முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உ.பி. மீரட்டில் இருந்து பிரசாரத்தை தொடங்குகிறார் பிரதமர் மோடி

புதன்கிழமை, 27 மார்ச் 2024      இந்தியா      அரசியல்
mODI 2023-05-25

லக்னோ, உ.பி. மீரட்டில் இருந்து தேர்தல் பிரசாரத்தை பிரதமர் மோடி தொடங்குகிறார்.

பிரதமர் மோடி மக்களவை தேர்தலுக்கான பா.ஜனதா வேட்பாளர்களை தேர்வு செய்வதில் முழுக்கவனம் செலுத்தி வருகிறார். இதுவரை ஐந்து கட்டமாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. முதல்கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், வருகிற 30-ந்தேதி வேட்மனுவை திரும்பப்பெற கடைசி நாளாகும்.

இந்த நிலையில் பிரதமர் மோடி வருகிற 31-ந்தேதி உத்தர பிரதேச மாநிலம் மீரட்டில் இருந்து பாராளுமன்ற மக்களவை தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார். அதனைத் தொடர்ந்து முதல் கட்ட தேர்தல் நடைபெறும் இடங்களில் சூறாவளி பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறார். மீரட்டில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். மீரட் தொகுதியில் ராமாயணம் டிவி தொடரில் நடித்த அருண் கோவில் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.

பா.ஜனதா 370 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்ற இலக்கோடு தேர்தலை சந்திக்கிறது. உத்தர பிரதேசத்தின் மேற்கு பிராந்தியங்களில் பா.ஜனதா 2014-ல் 27 இடங்களில் 24-ல் வெற்றி பெற்றது. ஆனால் கடந்த 2019-ல் சமாஜ்வாடி மற்றும் பகுஜன் சமாஜ்வாடி கட்சிகள் இணைந்து 8 இடங்களை கைப்பற்றியது. பா.ஜனதாவுக்கு 19 இடங்களே கிடைத்தது. இதனால் இந்த முறை அதிக இடங்களை கைப்பற்ற பா.ஜனதா வியூகம் வகுத்துள்ளது.

2019-ல் ராஜேந்திர அகர்வால் நிறுத்தப்பட்டிருந்தார். இவர் சமாஜ்வாடி ஆதரவுடன் பகுஜன் சமாஜ்வாடி கட்சியை சேர்ந்த ஹஜி யாகூப் குரேசியை சுமார் 5 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில்தான் வீழ்த்தியிருந்தார். இதனால் தற்போது பா.ஜனதா வேட்பாளரை மாற்றியுள்ளது. உத்தர பிரதேச மாநிலத்தில் பா.ஜனதா 2014-ல் 71 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. ஆனால் 2019-ல் சமாஜ்வாடி- பகுஜன் சமாஜ் கட்சி கூட்டணியால் 64 இடங்களில்தான் வெற்றி பெற முடிந்தது. பகுஜன் சமாஜ் கட்சி 10 இடங்களில் வெற்றி பெற்ற நிலையில் சமாஜ்வாடி கட்சி ஐந்து இடங்களை தாண்ட முடியவில்லை.

உத்தர பிரதேச மாநிலத்தில் ஏழு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. முதல்கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 19-ந்தேதி நடைபெறுகிறது. சமாஜ்வாடி கட்சி இந்தியா கூட்டணி கட்சிகள் ஆதரவுடன் களம் இறங்குகிறது. பகுஜன் சமாஜ் கட்சி தனியாக நிற்கிறது. பா.ஜனதா ஆர்.எல்.டி., எஸ்.பி.எஸ்.பி., அப்னா தளம் (எஸ்), நிஷாத் கட்சி ஆகியவற்றுடன் கூட்டணி அமைத்து களம் காண்கிறது. உத்தர பிரதேசத்தில் 8 தொகுதிகளுக்கு ஏப்ரல் 19-ந்தேதி முதற்கட்டமாகவும், மேலும் 8 தொகுதிகளுக்கு ஏப்ரல் 26-ந்தேதி 2-வது கட்டமாகவும், 10 தொகுதிகளுக்கு மே 7-ந்தேதி 3-வது கட்டமாகவும், 13 தொகுதிளுக்கு மே 13-ந்தேதி 4-வது கட்டமாகவும், 14 தொகுதிகளுக்கு மே 20-ந்தேதி 5-வது கட்டமாகவும், மேலும் 14 தொகுதிகளுக்கு மே 25-ந்தேதி 6-வது கட்டமாகவும், 13 தொகுதிகளுக்கு ஜூன் 1-ந்தேதி 7-வது கட்டமாகவும் தேர்தல் நடைபெறுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து