முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பா.ம.க. தேர்தல் அறிக்கை வெளியீடு

புதன்கிழமை, 27 மார்ச் 2024      தமிழகம்
PMK 2024-03-27

Source: provided

சென்னை : தமிழ்நாட்டில் தனியார் நிறுவனங்களில் 80 சதவீதம்  பணியிடங்களை உள்ளூர் மக்களுக்கு ஒதுக்க சட்டம் கொண்டு வர வலியுறுத்தப்படும் என பாமக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாட்டாளி மக்கள் கட்சியின் மக்களவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை வெளியீட்டு நிகழ்ச்சி சென்னை தியாகராயர் நகரில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது. இதில் பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் கலந்து கொண்டு தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர்.

தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்களை பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்தார். அவர் கூறியதாவது, 2021-ம் ஆண்டுக்கான மக்கள்தொகை கணக்கெடுப்பை சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பாக நடத்துவதற்கு வலியுறுத்தப்படும். உயர் வகுப்பு ஏழைகளுக்கு 10 சதவீதம்  வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பைத் தொடர்ந்து, இடஒதுக்கீட்டுக்கான 50 சதவீதம்  உச்சவரம்பை நீக்குவதற்கு பாமக நடவடிக்கை மேற்கொள்ளும். தமிழ்நாடு உட்பட இந்தியா முழுவதும் அனைத்து சமூகங்களுக்கும் அவற்றின் மக்கள்தொகை அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்குவதற்கு பாமக பாடுபடும். 

மத்திய அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இதர பிற்ப்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டில் கிரீமிலேயர் முறை நீக்கப்படும். கல்வி, வேலைவாய்ப்பில் மகளிருக்கு 33 சதவீதம்  இடஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். அரசுத் துறை, பொதுத் துறை பதவி உயர்வுகளிலும் இடஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்படும். தனியார் துறை, நீதித் துறை ஆகியவற்றிலும் இடஒதுக்கீடு கொண்டுவரப்படும். மத்திய அரசில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை என்ற புதிய அமைச்சகம் உருவாக்கப்படும்.

தேவேந்திரகுல வேளாளர்களை பட்டியல் வகுப்பில் இருந்து நீக்கவும், அவர்களை தனிப் பிரிவாக்கி இடஒதுக்கீடு வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் இடைநிலைப் பணிகளில் 50 சதவீதம் , கடைநிலைப் பணிகளில் 100 சதவீதம்  தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும். தமிழ்நாட்டில் தனியார் நிறுவனங்களில் 80 சதவீதம்  பணியிடங்களை உள்ளூர் மக்களுக்கு ஒதுக்க சட்டம் கொண்டுவர வலியுறுத்தப்படும். மத்திய, மாநில அரசுகளுக்கு இடையிலான அதிகாரப் பகிர்வு, மாநிலங்களுக்கு தன்னாட்சி குறித்து ஆராய்ந்து பரிந்துரைப்பதற்காக, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி தலைமையில் புதிய ஆணையம் அமைக்க பாமக வலியுறுத்தும்.

நெருக்கடி நிலைக் காலத்தின்போது, மாநிலப் பட்டியலில் இருந்து பொதுப் பட்டியலுக்கு மாற்றப்பட்ட கல்வி உள்ளிட்ட 5 துறைகளுக்கான அதிகாரங்களும் மீண்டும் மாநிலப் பட்டியலுக்கே மாற்றப்படுவதற்குப் பாட்டாளி மக்கள் கட்சி பாடுபடும். மத்திய அரசின் வரி வருவாயில் 50 சதவீதம்  மாநிலங்களுக்கு ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை. ஒவ்வொரு மாநிலத்திலிருந்து மத்திய அரசுக்கு எவ்வளவு வருவாய் கிடைக்கிறதோ, அதில் 50 சதவீதம் &ஐ அந்த மாநிலத்திற்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

உச்சநீதிமன்ற கிளையை சென்னையில் அமைக்க மத்திய அரசிடம் பா.ம.க. வலியுறுத்தும்.தமிழ்நாடு உள்ளிட்ட ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள மத்திய அரசுக்குச் சொந்தமான மருத்துவ மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கையில் 50 சதவீதம்  இடங்கள் சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு ஒதுக்கப்படும். மாநில அரசுகளின் சார்பில் செயல்படுத்தப்படும் உட்கட்டமைப்பு திட்டங்களுக்கான செலவில் 50 விழுக்காட்டை மத்திய அரசு ஏற்கவேண்டும் என பா.ம.க. வலியுறுத்தும். தொழிற்திட்டங்களுக்காக வேளாண் விளை நிலங்கள் கையகப்படுத்த தடை விதிக்கப்படும்.

கடலூர் மாவட்டத்தில் புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள 3 நிலக்கரி திட்டங்கள் கைவிடப்படும். என்எல்சி 3வது சுரங்கம் மற்றும் முதல், 2ஆம் சுரங்கங்களின் விரிவாக்கத்திற்கு தடை. குறிப்பிட்ட காலத்திற்குள் என்.எல்.சி. நிறுவனத்தை தமிழகத்திலிருந்து அகற்ற நடவடிக்கை. மரபணு மாற்றம் செய்யப்பட்ட காய்கறிகள் மற்றும் உணவு தானியங்களுக்குத் தடை விதிக்கப்படும். தமிழ்நாட்டை அணுஉலை இல்லாத மாநிலமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். அதற்கான கால அட்டவணை வெளியிடப்படும். காலநிலை மாற்றத்தின் தீயவிளைவுகளைத் தடுப்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.

இந்தியா முழுவதும் மத்திய அரசு அலுவலகங்களில் 30 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் 3 லட்சம் புதிய பணியிடங்கள் ஏற்படுத்தப்படும். ஒவ்வொரு ஆண்டும் கல்லூரி மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களில் படிப்பை முடித்து வெளிவரும் பட்டதாரிகள் மற்றும் பட்டயதாரிகளில் 20 இலட்சம் பேருக்கு திறன்மேம்பாட்டுத் தொழிற்பயிற்சி வழங்கப்படும். 10 மாதப் பயிற்சிக் காலத்தில் மாதம் ரூ.25,000 உதவித் தொகை வழங்கப்படும். இந்தியாவில் பட்டப்படிப்பை முடித்து, வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து குறைந்தது 3 ஆண்டுகள் வேலை கிடைக்காத இளைஞர்களுக்கு மாதம் ரூ.4,000 நிதியு-தவி வழங்கப்படும். இத்திட்டம் மாநில அரசுகளுடன் இணைந்து செயல்படுத்தப்படும்.

சொந்தமாகத் தொழில் தொடங்க விரும்பினால், அவர்களுக்குச் சிறப்புப் பயிற்சியும், கடனுதவியும், தேவையான பிற வசதிகளும் கிடைப்பதற்கும் பா.ம.க. பாடுபடும். இந்தியாவில் வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழும் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.3,000 உரிமைத் தொகை வழங்கப்படும். இத்திட்டம் மாநில அரசுகளுடன் இணைந்து செயல்படுத்தப்படும். மூத்த குடிமக்கள் மற்றும் ஆதரவற்றோருக்கு வழங்கப்படும் மாத ஓய்வூதியம் ரூ.3,000ஆக உயர்த்தப்படும்” இவ்வாறு பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து