முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கடலூரில் கைதுசெய்யப்பட்ட கிளி ஜோதிடர்கள் விடுவிப்பு

செவ்வாய்க்கிழமை, 9 ஏப்ரல் 2024      தமிழகம்
Dhangarbachan 2024-04-09

கடலூர், கிளி ஜோதிடர்கள் கைதுசெய்யப்பட்டதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் கிளம்பியதை அடுத்து கடலூரில் கைதுசெய்யப்பட்ட கிளி ஜோதிடர்கள் இருவரும் விடுவிக்கப்பட்டனர்.

கடலூரில் போட்டியிடும் பாமக வேட்பாளர் தங்கர் பச்சான், பிரசாரத்தின்போது கிளி ஜோதிடம் பார்த்தார். அப்போது கிளி எடுத்துக் கொடுத்த சீட்டில் எதிர்காலம் சிறப்பாக உள்ளது என்று இருந்தது. இதற்கு மகிழ்ச்சி தெரிவித்த தங்கர்பச்சான், பின்னர் ஓட்டு கேட்க சென்றார். இது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.

இதற்கிடையே, தங்கர் பச்சானுக்கு கிளி ஜோதிடம் பார்த்த செல்வராஜ் என்பவரையும், அதே பகுதியில் கிளி ஜோதிடம் பார்த்த சீனுவாசன் என்பவரையும் வனத்துறையினர் கைது செய்தனர். வனவிலங்கு பாதுகாப்பு திருத்தச் சட்டத்தின் கீழ், கிளிகளை வளர்ப்பது குற்றம் என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

கிளி ஜோதிடர்கள் கைதுசெய்யப்பட்டதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் கிளம்பின. குறிப்பாக, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், இது திமுக அரசின் பழிவாங்கும் நடவடிக்கை என்றும், தங்கர்பச்சான் வெற்றி பெறுவார் என்று கிளி சோதிடர் கூறியதை தி.மு.க.வால் தாங்கிக்கொள்ள முடியவில்லை என்றும் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில், தங்கர் பச்சானுக்கு கிளி ஜோதிடம் பார்த்த செல்வராஜ் மற்றும் சீனுவாசன் ஆகிய இரு ஜோதிடர்களையும் வனத்துறையினர் விடுவித்தனர். அவர்களிடம் இருந்த 4 கிளிகளையும் பறிமுதல் செய்த வனத்துறையினர், ஜோதிடர்களை எச்சரித்து விடுவித்தனர்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து