முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காண்டே சட்டசபை தொகுதி இடைத்தேர்தல்: ஹேமந்த் சோரனின் மனைவி வேட்புமனு தாக்கல் செய்தார்

திங்கட்கிழமை, 29 ஏப்ரல் 2024      இந்தியா
Kalpana-Soran 2024-04-29

Source: provided

ராஞ்சி : ஜார்கண்ட் மாநிலத்தின் காண்டே சட்டசபை தொகுதிக்கு  ஆளும் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் வேட்பாளராக ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனா நேற்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

ஜார்கண்ட் மாநிலத்தின் முதல்வராக  இருந்து வந்த ஹேமந்த் சோரனை நிலமோசடி வழக்கில் அமலாக்கத்துறை  கடந்த ஜனவரி 31-ம் தேதி கைது செய்தது. இதனால் அவர் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.

அதை தொடர்ந்து ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனாவை முதல்வராக ஆக்குவதற்கான முயற்சிகள் நடந்தன. ஆனால் அது தோல்வியில் முடிந்தது. இந்த நிலையில் ஜார்கண்ட் மாநிலத்தில் பாராளுமன்ற தேர்தலுடன் காண்டே சட்டசபை தொகுதிக்கு நடக்கும் இடைத்தேர்தலில் ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனா போட்டியிடுவார் என ஆளும் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி அறிவித்தது.

இந்த நிலையில், ஜார்கண்ட் மாநிலத்தின் காண்டே சட்டசபை தொகுதிக்கு  ஆளும் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் வேட்பாளராக, ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனா (41) வேட்புமனுவை தாக்கல் செய்தார். 

வேட்புமனு தாக்கலின் போது ஜார்கண்ட் முதல்வர்  சம்பாய் சோரன் மற்றும் மைத்துனர் பசந்த் சோரன் ஆகியோர் உடனிருந்தனர். ஜார்கண்ட்  மாநிலத்தில் பாராளுமன்ற தேர்தலுடன் மே 20-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. 

காண்டே தொகுதி எம்.எல்.ஏ.வான, ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியை சேர்ந்த சர்பராஸ் அகமது தனது பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து அந்த தொகுதி காலியானது. 

கல்பனா சோரன் எம்.டெக் மற்றும் எம்.பி.ஏ. படித்துள்ளார். ஒடிசாவின் மயூர்பாஞ்ச் மாவட்டத்தில் பரிபாத நகரில் பள்ளி படிப்பை முடித்திருக்கிறார். புவனேஸ்வர் நகரில் வெவ்வேறு கல்வி மையங்களில் எம்.டெக் மற்றும் எம்.பி.ஏ. படிப்புகளை முடித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து