முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இஸ்ரேல் மீது ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்திய ஈரான் : மத்திய கிழக்கில் உச்சக்கட்ட பதற்றம்

ஞாயிற்றுக்கிழமை, 14 ஏப்ரல் 2024      உலகம்
Iran 2024-04-14

Source: provided

டெல் அவிவ் : இஸ்ரேல் மீது ஏவுகணைகள் மற்றும் டிரோன்களை ஏவி ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளதால் மத்திய கிழக்கில் உச்சக்கட்ட பதட்டமான சூழ்நிலை நிலவுகிறது. 

காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக் குழுவினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 240 பேரை பணய கைதிகளாக காசாமுனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது. 

இதையடுத்து ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல் ஒப்பந்த அடிப்படையில் பணய கைதிகள் 100-க்கும் மேற்பட்டோரை மீட்டுள்ளது. எஞ்சிய பணய கைதிகளை மீட்கும் நடவடிக்கையில் இஸ்ரேல் ஈடுபட்டு வருகிறது. 

அதே வேளை ஹமாஸ் ஆயுதக்குழுவினர் மீது போர் அறிவித்து காசா முனை மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த போரில் காசாவில் ஹமாஸ் ஆயுதக் குழுவினர் உள்பட 33 ஆயிரத்து 634 பேர் உயிரிழந்துள்ளனர். அதே போல், மேற்குகரையில் ஏற்பட்ட மோதலில் 450க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 

இஸ்ரேல் - ஹமாஸ் ஆயுதக் குழுவினர் இடையேயான போரில் ஹமாசுக்கு ஈரான் ஆதரவு அளித்து வருகிறது. மேலும், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த சிரியா, லெபனானில் செயல்பட்டு வரும் பயங்கரவாத அமைப்புகளுக்கு ஈரான் ஆயுத உதவி வழங்கி வருகிறது. 

இதனிடையே, சிரியா தலைநகர் டமாஸ்கசில் உள்ள ஈரான் தூதரகம் மீது கடந்த 1-ம் தேதி இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் ஈரான் புரட்சிப்படை மூத்த தளபதி முகமது ரிசா சகிதி உள்பட 13 பேர் உயிரிழந்தனர்.  இதனால் கோபம் அடைந்த ஈரான் தக்க பதிலடி கொடுக்கப்படும் என அறிவித்தது.  இதனால், இஸ்ரேல் - ஈரான் இடையே போர் ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.  

இந்த நிலையில், தங்கள் நாட்டை நோக்கி ஏவுகணைகள் மற்றும் டிரோன்களை ஏவியதாக ஈரான் மீது இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது.  இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய முதல் நேரடி தாக்குதலாக இது கருதப்படுகிறது.  100-க்கும் மேற்பட்ட டிரோன்கள்  ஈரானில் இருந்து ஏவப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. 

தங்கள் நாட்டிற்கு மேலே அடுக்கடுக்காக டிரோன்கள் பறந்ததாக ஈராக் மற்றும் ஜோர்டானும் தெரிவித்துள்ளன. அதே போல், இஸ்ரேலை நோக்கி சென்ற டிரோன்களை சுட்டு வீழ்த்தியதாக அமெரிக்க அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர்.   ஏவுகணைகள் வீசப்பட்டதாக இஸ்ரேல் ராணுவமும் கூறியுள்ளது. இதனால் இஸ்ரேல்- ஈரான் இடையே போர் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் மத்திய கிழக்கில் உச்ச கட்ட பதற்றம் ஏற்பட்டுள்ளது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து