முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வட மாநிலங்களில் வெப்ப அலை எதிரொலி: 5 நாட்களுக்கு ரெட் அலர்ட் விடுத்தது வானிலை மையம்

புதன்கிழமை, 22 மே 2024      இந்தியா
sun-2023-05-01

புது டெல்லி, வெப்ப அலை வீசுவதை தொடர்ந்து வட மாநிலங்களில் 5 நாட்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கையை இந்திய வானிலை மையம் விடுத்துள்ளது. 

நாட்டின் வட மாநிலங்களில் வெப்பம் அதிகரித்து காணப்படுகிறது. கோடை வெயிலால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஏற்கனவே வெயிலின் தாக்கம் அதிகளவில் உள்ள நிலையில், வட இந்திய மாநிலங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது.

அதன்படி, ராஜஸ்தான், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் கடுமையான வெப்ப அலை நிலவும் என்றும், அரியானா, சண்டிகர், டெல்லி மற்றும் மேற்கு உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு அடுத்த ஐந்து நாட்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இந்த மாநிலங்களின் பல மாவட்டங்களில் அதிகபட்ச பகல் நேர வெப்பநிலை 47 டிகிரி செல்சியசை  மீறக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து  இந்திய வானிலை ஆய்வு மைய ஆய்வாளர் நரேஷ் குமார் கூறுகையில், 

வடமேற்கு இந்தியா முழுவதும் தற்போது வெப்பநிலை இயல்பை விட அதிகமாக உள்ளது. மேலும், கடந்த 2, 3 நாட்களாக இப்பகுதிக்கு சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளோம். 

மாநில வாரியான முன்னறிவிப்பு தொடர்பாக, அடுத்த ஐந்து நாட்களுக்கு ராஜஸ்தானில் ரெட் அலர்ட் விடுத்துள்ளோம். அதிகபட்ச வெப்பநிலை 45 டிகிரி செல்சியஸிலிருந்து மேலும் அதிகரித்து 47 டிகிரி செல்சியஸில் நிலைபெற வாய்ப்புள்ளது.

பஞ்சாப் மற்றும் அரியானாவில், நிலவும் மேற்கத்திய இடையூறு காரணமாக அதிகபட்ச வெப்பநிலை ஓரளவு குறைந்துள்ளது. ஆனால் அவை படிப்படியாக 2 முதல் 3 டிகிரி வரை அதிகரிக்கும். இந்த இரண்டு மாநிலங்களுக்கும் நாங்கள் ஏற்கனவே ரெட் அலர்ட் விடுத்துள்ளோம். 

அண்டை மாநிலமான உத்தரபிரதேசத்தில், அடுத்த ஐந்து நாட்களுக்கு சிவப்பு எச்சரிக்கையும், மத்தியப் பிரதேசத்தின் வடக்குப் பகுதிகளுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுத்துள்ளோம். 

எவ்வாறாயினும், கோடை வெயிலின் கீழ் வடக்கில் சுட்டெரிக்கும் போது, தெற்கில் ஒரு அளவு வெயிலின் தாக்கம் குறைவாக இருக்கும் என்று தெரிவித்தார். 

டெல்லி மற்றும் வட இந்தியாவின் பிற பகுதிகளுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால், அவசியமின்றி மக்கள் வெளியில் செல்ல வேண்டாம் என்று சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை கவனமாக இருக்கவும், அது அவர்களின் உடல்நலம் குறைவதற்கு வழிவகுக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து