முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டியிருக்கும் மருத்துவர்கள் மீது நடவடிக்கை கூடாது : சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை

புதன்கிழமை, 22 மே 2024      தமிழகம்
Chennai-high-court2

Source: provided

சென்னை : வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டி இருக்கும் மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கூடாது என்று ஐகோர்ட் இடைக்கால தடை விதித்துள்ளது.

பொதுமக்களில் சிலர் அரசு வாகனம், காவல், வழக்கறிஞர், மனித உரிமைகள் ஆணையம், பத்திரிகை, ஊடகம் போன்று பல துறைகளைச் சார்ந்த ஸ்டிக்கர்களை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதி ஒட்டி முறைகேடாகப் பயன்படுத்தி வருவதாக காவல் துறைக்கு புகார்கள் தொடர்ந்து வந்தன.

இதைக் கருத்தில் கொண்டு விதிமுறைகளை மீறி வாகன பதிவு எண் பலகையில் ஸ்டிக்கர் ஒட்டியிருப்பவர்கள் மீது மோட்டார் வாகன சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை பெருநகர காவல் துறை கடந்த 27ம் தேதி அறிவித்தது. மேலும், மே 2ம் தேதி முதல் விதிமுறைகளை மீறி வாகன பதிவு எண் பலகையில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தால், சம்பந்தப்பட்ட நபர் மீது வழக்குப் பதியப்பட்டு, அபராதம் வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து இந்த அறிவிப்பில் இருந்து விலக்க அளிக்க வேண்டும் என்று தமிழ்நாடு மருத்துவர்கள் நலச் சங்கத்தின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பாலாஜி முன்பு நேற்றஉ விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் எந்தவித விதிமீறல்களிலும் ஈடுபடுவதில்லை. மருத்துவர்கள் வாகனத்தில் ஸ்டிக்கர் ஓட்டக்கூடாது என்ற அறிவிப்பால் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு பணி நிமித்தமாக அவசரமாக பயணம் மேற்கொள்வதில் சிரமம் ஏற்படுகிறது என்று மருத்துவ சங்க தரப்பில் வாதிடப்பட்டது.

இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி, மருத்துவ அவசரத்துக்காக செல்லும் மருத்துவர்களுக்கு ஸ்டிக்கர் ஒட்ட விலக்கு அளிக்கலாமே? என்று கேள்வியை எழுப்பினார். மேலும், வழக்கறிஞர்களுக்கு பார் கவுன்சில் ஸ்டிக்கர் வழங்குவது போல மருத்துவர்களுக்கும் வழங்குவது குறித்து தேசிய மருத்துவ ஆணையத்திடன் கருத்து கேட்கலாமே? என்று நீதிபதி கருத்து தெரிவித்தார். 

தேசிய மருத்துவ ஆணையத்தையும், தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலையும் வழக்கில் இணைக்க மனுதாரருக்கு உத்தரவிட்டு விசாரணை ஜூன் 14ம் தேதிக்கு ஒத்திவைத்தார். அதுவரை வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டியிருக்கும் மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று இது ஒரு இடைக்கால உத்தரவு என்று கூறினார். மேலும், ஸ்டிக்கர் ஒட்டுவதை தவறாக பயன்படுத்தினால் காவல்துறை நடவடிக்கை எடுக்கலாம் என்று ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து