முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தீவிரவாத எதிர்ப்பு மையம்: தமிழக அரசு வலியுறுத்தல்

திங்கட்கிழமை, 12 மார்ச் 2012      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி,மார்ச்.14 -தீவிரவாத எதிர்ப்பு மையம் அமைப்பதற்கு முன்பு அனைத்து மாநில முதல்வர்களையும் மத்திய அரசு கலந்தாலோசிக்க வேண்டும் என்று தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது. நாட்டின் வடக்கு பகுதியான ஜம்மு-காஷ்மீர் மாநிலம், மற்றும் தலைநகர் டெல்லி,மும்பை, புனே, ஆமதாபாத், உள்பட பல இடங்களில் தீவிரவாதிகள் நடமாட்டம் அதிகமாக இருக்கிறது. அவர்கள் நாசவேலையில் ஈடுபட்டு அப்பாவி மக்கள் கொன்று வருகிறார்கள். மேலும் கோடிக்கணக்கான சொத்துக்களை நாசப்படுத்தி வருகிறார்கள். தீவிரவாதிகளை ஒடுக்க மத்திய மாநில அரசுகள் ஒன்றுபட்டு பணியாற்றி வருகின்றன. மேலும் தீவிரவாதத்தை ஒடுக்க அந்தந்த மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளது. மாநில அரசுகள் இந்த அதிகாரத்தை பயன்படுத்தி தீவிரவாதத்தை ஒடுக்க நடவடிக்கை எடுப்பதோடு, மாநில போலீசாரையும் மாநில அரசு பயன்படுத்தி தீவிரவாதம் ஒடுக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் மாநில அரசுகளை கேட்காததோடு அதிகாரத்தையும் பறிக்கும் வகையில் தீவிரவாத எதிர்ப்பு மையம் அமைக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் ஒரு சுற்றறிக்கையை மாநில அரசுக்களுக்கு அனுப்பியது. இதற்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா மட்டுமல்லாது, பீகார், மேற்குவங்காளம், ஒரிசா, மத்தியப்பிரதேசம், குஜராத் உள்பட 10-க்கும் மேற்பட்ட மாநிலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதுதொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு முதல்வர் ஜெயலலிதா ஒரு கடிதம் எழுதினார். அதில் தீவிரவாத எதிர்ப்பு மையம் அமைப்பது மாநில அரசின் அதிகாரத்தில் மத்திய அரசு தலையிடுவது மட்டுமல்லாது அதிகாரத்தை பறிக்கும் செயலாகும். இது தொடர்பாக மாநில முதல்வர்களை மத்திய அரசு கலந்தாலோசிக்க வேண்டும் என்று கூறியிருந்தார். மேலும் முதல்வர்கள் கூட்டத்தையும் கூட்ட வேண்டும் என்று பிரதமரை கேட்டுக்கொண்டார். 

இந்தநிலையில் தீவிரவாத எதிர்ப்பு மையம் தொடர்பான கூட்டம் நேற்று டெல்லியில் நடைபெற்றது. இதில் மாநில தலைமை செயலாளர்கள், உள்துறை செயலாளர்கள், மாநில தலைமை போலீஸ் அதிகாரி ஆகியோர் கலந்துகொண்டனர். தமிழகம் சார்பாக தலைமை செயலாளர் மிருத்யுஞ்சய் சாரங்கி, உள்துறை செயலாளர் ராஜகோபால் மற்றும் தலைமை போலீஸ் அதிகாரி ராமானுஜம் ஆகியோர் கலந்துகொண்டனர். கூட்டத்தில் பேசிய சாரங்கி, தீவிரவாத எதிர்ப்பு மையம் அமைப்பதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். மேலும் இதுதொடர்பாக மாநில முதல்வர்களுடன் மத்திய அரசு கலந்தாலோசிக்க வேண்டும் என்றார். தீவிரவாத எதிர்ப்பு மையம் அமைப்பது தொடர்பாக கூறப்பட்டுள்ள விதிமுறைகள் மாநில அரசின் அதிகாரத்தை பறிக்கும் வகையில் உள்ளது என்றும் அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்