முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒரிசாவில் கடத்தப்பட்ட எம்.எல்.ஏ.வின் கதி என்ன?

செவ்வாய்க்கிழமை, 27 மார்ச் 2012      இந்தியா
Image Unavailable

 

புவனேஸ்வர், மார்ச் 28 - ஒரிசாவில் கடந்த சனிக்கிழமை ஆளும் பிஜு ஜனதாதளம் கட்சி எம்.எல்.ஏ. ஜினா ஹிகாகா மாவோயிஸ்ட்களால் கடத்தப்பட்டார். இவரது கதி என்ன என்பது இதுவரை தெரியவில்லை.  இவரை விடுவிப்பதில் இழுபறி நிலை நீடித்துவருகிறது. ஒரிசா மாநிலத்தில் இத்தாலிய நாட்டவர் இருவர் மாவோயிஸ்ட் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டனர். இவர்களை தேடும் முயற்சியில் மாநில போலீசாரும், ராணுவமும் தீவிர முயற்சிகளை மேற்கொண்டனர். மேலும் கடத்தப்பட்டவர்களை மீட்க பல்வேறு தரப்பிலும் பேச்சுவார்த்தைகளும் நடத்தப்பட்டன. இதற்கிடையே கடந்த சனிக்கிழமையன்று ஆளும் பிஜு ஜனதாதளம் கட்சியைச் சேர்ந்த ஜினா ஹிகாகா என்ற எம்.எல்.ஏ.வும் மாவோயிஸ்ட்களால் கடத்தப்பட்டார். இதில் இரு தினங்களுக்கு முன்பு இத்தாலி நாட்டவர் ஒருவர் மட்டும் விடுவிக்கப்பட்டார். மற்றொரு இத்தாலியர் குறித்தும் கடத்தப்பட்ட எம்.எல்.ஏ. குறித்தும் எந்த தகவலும் இதுவரை வெளியிடப்படவில்லை. 

ஒரிசா மாவட்டத்தில் கோரபுட் மாவட்டத்தில் மாவோயிஸ்ட்டுகள் சவ்யசாச்சிபாண்டா, தயாநிதி என்ற இருவரது தலைமையில் இரு குழுக்களாக செயல்படுவதாக கூறப்படுகிறது. இதில் சவ்யசாச்சி பாண்டா தொலைக்காட்சியில் எம்.எல்.ஏ.வை நாங்கள் கடத்தவில்லை என்று தெரிவித்துவிட்டார். அதனால் தயாநிதி தலைமையிலான குழுவே இந்த கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. இந்த குழுவினரிடம் போலீசாரால் தொடர்புகொள்ள முடியவில்லை. எனவே இவர்களுடன் தொடர்புகொள்ள ஆதிவாசிகள் நல அமைப்புகளின் உதவியை போலீசார் நாடியுள்ளனர். 

எம்.எல்.ஏ. கடத்தப்பட்ட பிறகு வனப்பகுதிகளில் பல இடங்களில் ராணுவமே தேடுதல் வேட்டையை நிறுத்து என்ற வாசகங்கள் எழுதப்பட்ட போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. எனவே மாவோயிஸ்ட்டுகள் திட்டமிட்டு இந்த கடத்தலை மேற்கொண்டுள்ளனர் என்பது தெரியவருகிறது, இதற்கிடையில் கடத்தப்பட்ட எம்.எல்.ஏ. ஜினாவை மீட்க உரிய நடவடிக்கையை மாநில அரசு எடுக்கவில்லை என்று அவரது தொகுதியான லட்சுமிபூர் தொகுதி மக்கள் மாநில அரசை கண்டித்து போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்