முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ப.சிதம்பரம் பதவி விலகக்கோரி எதிர்க்கட்சிகள் அமளி

வெள்ளிக்கிழமை, 27 ஏப்ரல் 2012      ஊழல்
Image Unavailable

 

புதுடெல்லி, ஏப்.28 - மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பதவி விலகக்கோரி பாராளுமன்றத்தில் நேற்று பா.ஜ.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன. இதனால் சபை ஒத்திவைக்கப்பட்டது. 2 ஜி. ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தையும் சேர்க்க வேண்டும் என்று ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சாமி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். சிதம்பரத்தின் மகன் கார்த்திக் சிதம்பரத்திற்கு நாடு முழுவதும் 12 நிறுவனங்கள் இருப்பதாகவும் 2 ஜி.ஸ்பெக்ட்ரம் ஊழல் பணத்தில் ஒரு பகுதி கார்த்திக் சிதம்பரத்திற்கும் சென்றுள்ளது என்றும் சுப்பிரமணியம் சாமி குற்றம் சாட்டியுள்ளார். கடந்த 2006 ஆம் ஆண்டு மலேசியாவைச் சேர்ந்த மேக்ஸில் நிறுவனத்திற்கு ஏர்செல் நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்வதற்காக ஏர்செல் நிறுவனத்திற்கு வழங்க வேண்டிய 2 ஜி.ஸ்பெக்ட்ரம் உரிமத்தை அப்போது நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரம் வேண்டுமென்றே காலம் தாழ்த்தி இருக்கிறார் என்றும் சுப்பிரமணியம் சாமி குற்றம் சாட்டி இருக்கிறார். 

தொலைத்தொடர்பு ஊழல் வழக்கில் ப.சிதம்பரத்தையும் அவரது மகன் கார்த்திக் சிதம்பரத்தையும் சேர்க்க சி.பி.ஐ.க்கு உத்தரவிட வேண்டும் எனக்கோரியும், சிதம்பரம் உடனடியாக பதவி விலக வேண்டும் எனக்கோரியும் பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு சுப்பிரமணியம் சாமி ஒரு கடிதம் எழுதியுள்ளார். 

இதுதொடர்பாக பாராளுமன்றத்தின் லோக்சபையில் நேற்று பா.ஜ.க. உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பிரச்சனை கிளப்பினர். சுப்பிரமணிய சாமியின் குற்றச்சாட்டை அடுத்து அமைச்சர் ப.சிதம்பரம் உடனடியாக பதவி விலக வேண்டும் எனக்கோரி பா.ஜ.க. எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். கேள்வி நேரத்தின்போது இந்த பிரச்சனை கிளப்பப்பட்டதால் சபை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன. சபையின் மையப்பகுதிக்கு வந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் சபையை நண்பகல் 12 மணிவரை சபாநாயகர் மீராகுமார் ஒத்திவைத்தார். பிறகு சபை மீண்டும் கூடியபோதும் இதே பிரச்சனையை முன்வைத்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கூச்சல் குழப்பம் செய்தனர். ப.சிதம்பரம் பதவி விலக வேண்டும் என்று கோஷமிட்டும் அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பியும் அவர்கள் அமளியை ஏற்படுத்தினர். இதையடுத்து சபையை இரண்டாவது முறையாக சபாநாயகர் மீராகுமார் ஒத்திவைத்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்