முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முறைகேடுகளே தேர்தல் ஆணையத்தின் கெடுபிடிக்கு காரணம்

செவ்வாய்க்கிழமை, 29 மார்ச் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை,மார்ச்.29 -  தேர்தல் ஆணையத்தின் கடுமையான நடவடிக்கைகளுக்கு முந்தைய தேர்தல்களில் நடைபெற்ற முறைகேடுகள்தான் காரணம் என தமிழக முன்னாள் தலைமை தேர்தல் அலுவலர் நரேஷ்குப்தா தெரிவித்துள்ளார். தமிழகம், புதுவைக்கான மக்கள் சிவில் உரிமை கழகம் சார்பில் தேர்தல் விதிமுறைகளும், சட்ட திட்டங்களும் என்ற தலைப்பிலான கருத்தரங்கம் சென்னையில் நடைபெற்றது. இதில் நரேஷ்குப்தா கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது, 

ஒரு நாட்டின் ஜனநாயக மரபை காப்பது தேர்தல். ஆனால் அந்த தேர்தல் மீது பெரும்பாலான மக்கள் நம்பிக்கையிழந்து வருகின்றனர். இதற்கு காரணம் தேர்தலின் போதும், தேர்தலுக்கு பிறகும் நடைபெறும் முறைகேடுகள்தான். நமது நாட்டில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் காலத்திற்கு ஏற்ப மாறி வருகின்றன. வரும் சட்டசபை தேர்தலை முன்னிட்டு தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் கடுமையான விதிமுறைகளை தேர்தல் ஆணையம் அமுல்படுத்தி வருகிறது. அதற்கு காரணம் முந்தைய தேர்தல் முறைகேடுகளே. ஒவ்வொரு சட்டப் பேரவை தொகுதிக்கும் ரூ 16 லட்சம்தான் செலவிட வேண்டும் என தேர்தல் ஆணையம் விதிமுறை வகுத்துள்ளது. 

ஆனால் உண்மையில் நடப்பது என்ன? இந்த தேர்தலில் ஒவ்வொரு வேட்பாளரும் தேர்தலுக்கு என தனியாக வங்கி கணக்கு தொடங்கி அதன் மூலம்தான் பணத்தை செலவிட வேண்டும் என ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதே போல் தேர்தல் நடவடிக்கைகளை வீடியோ மூலம் படம்பிடித்தல், அவற்றை மற்றொரு குழு கண்காணித்தல், முறைகேடுகளை பொதுமக்கள் படம்பிடித்து அனுப்புதல் போன்றவைகளையும் தேர்தல் ஆணையம் வகுத்துள்ளது. இவை அனைத்தும் வரவேற்கப்பட வேண்டியவை. 

தேர்தலில் யாருக்கும் வாக்களிக்க விரும்பாதவர்கள் வாக்கு சாவடியில் உள்ள அதிகாரிகளிடம் தெரிவித்து 49 ஓ விண்ணப்பத்தை பெற்று பூர்த்தி செய்யலாம். அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க முடியும். தேர்தலில் மக்கள் தங்களது சுயமரியாதையையும், தன்மானத்தையும் இழக்காமல் வாக்களிக்க வேண்டும் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்