முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கள்ளநோட்டு புழக்கத்தை தடுக்க அமெரிக்காவிடம் உதவியைக் கேட்கிறதுஇந்தியா

திங்கட்கிழமை, 4 ஜூன் 2012      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, ஜுன் - 4 - கள்ள நோட்டு புழக்கத்தை தடுக்க அமெரிக்காவிடம் இருந்து புதிய தொழில்நுட்ப ஒத்துழைப்பை இந்தியா கேட்கிறது. இந்தியாவில் கள்ளநோட்டுகள் மிக அதிக அளவில் புழக்கத்தில் இருந்து வருகின்றன. கள்ள நோட்டுக்களை தடுக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. என்றாலும்கூட இந்த கள்ளநோட்டு புழக்கத்தை அறவே ஒழிக்க முடியவில்லை. பாகிஸ்தானில் அச்சடித்து நேபாளம் வழியாக இந்திய கள்ள ரூபாய் நோட்டுக்கள் இந்தியாவில் பெருமளவில் புழக்கத்தில் விடப்படுவதாக தகவல்கள் கூறுகின்றன. இது தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டும் உள்ளனர். அமெரிக்காவிலும் கூட கள்ள டாலர் நோட்டுக்களை அச்சடித்து அவற்றை புழக்கத்தில் விடப்பட்டு வந்துள்ளது. ஆனால் இப்போது அமெரிக்காவில் கள்ள டாலர் நோட்டுக்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு அந்நாட்டு அரசு புதிய தொழில் நுட்பத்தை உருவாக்கி செயல்படுத்தி வருகிறது. இதனால் அமெரிக்காவில் கள்ள டாலர் நோட்டுக்கள் என்றது அறவே ஒழிக்கப்பட்டுவிட்டது. இந்தியாவிலும் கள்ள ரூபாய் நோட்டு புழக்கத்தை அறவே ஒழிக்க அமெரிக்காவின் தொழில் நுட்ப ஒத்துழைப்பை கேட்டுப் பெறுவதென மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த மாத பிற்பகுதியில் வாஷிங்டன் நகரில் அமெரிக்க-இந்திய முக்கிய பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. அந்த பேச்சுவார்த்தையின்போது இந்த புதிய தொழில் நுட்பத்தை முறைப்படி கேட்பது என இந்தியா முடிவு செய்துள்ளது. இந்த முக்கியமான இரு நாட்டு கூட்டத்தில் மத்திய உள்துறை செயலாளர் ஆர்.கே.சிங் மற்றும் முக்கிய அதிகாரிகள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவின் எல்லைக்கு அப்பால் இந்திய கள்ள ரூபாய் நோட்டுக்களை அச்சடித்து அவற்றை இந்தியாவுக்குள் கடத்திவந்து புழக்கத்தில் விடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்துள்ளார். இதன் ஒரு பகுதியாக கள்ள நோட்டு புழக்கத்தை தடுக்க அமெரிக்காவின் தொழில் நுட்ப ஒத்துழைப்பை கேட்பது என்று இந்தியா முடிவு செய்துள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்