முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நிர்வாகிகள் இல்லத்திருமண விழாவில் முதல்வர் பேச்சு

வியாழக்கிழமை, 14 ஜூன் 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூன்.15 - உங்கள் சகோதரியின் அரசு தமிழ்நாட்டை முதன்மையான மாநிலமாக மாற்ற  வேண்டும் என்ற குறிக்கோளுடன் செயல்படுவதை நீங்கள் அறிவீர்கள் என்று முதல்வர் கூறினார். திண்டுக்கல் மாவட்டக்கழகச் செயலாளர் திண்டுக்கல் சி.சீனிவாசனின் மகன் டாக்டர் எஸ்.பாலு.ஜே.அவிநயா, திருச்சி மாவட்டக்கழகச் செயலாளர் ஆர்.மனோகரன் எம்.எல்.ஏ.வின் மகள் கவிதா, கே.கார்த்திக் சேலம் மாநகர் மாவட்டக்கழகச் செயலாளர் எம்.கே.செல்வராஜ் எம்.எல்.ஏ.வின் மகள் வித்யா, பி.கமல்நாத் பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தொகுதிக்கழகச் செயலாளர்  வெ.முத்துச்செல்வனின் மகன் மு.மணிவண்ணன் - வே.சித்ரா ஆகிய நான்கு ஜோடிகளுக்கும் திருமணத்தை முதல்வர் ஜெயலலிதா நடத்திவைத்தார்.

கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் திருமணங்களை நடத்தி வைத்து, முதல்வர் பேசியதாவது:-

அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான  ஜெயலலிதா நேற்று (14.6.2012), 4 ஜோடிகளுக்கான திருமணங்களை தலைமையேற்று நடத்தி வைத்து ஆற்றிய உரை

இடம் : ரேஸ் கோர்ஸ் திடல், கிண்டி.

இந்த இனிய திருமண விழாவில் வரவேற்புரை ஆற்றிய திண்டுக்கல் மாவட்டக் கழக அவைத் தலைவர் அன்புச் சகோதரர்  திண்டுக்கல் சீனிவாசன் அவர்களே,

வாழ்த்துரை வழங்கிய திருச்சி மாநகர் மாவட்டக் கழகச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான அன்புச் சகோதரர் சு. மனோகரன் அவர்களே,

நன்றியுரை ஆற்ற உள்ள சேலம் மாநகர் மாவட்டக் கழகச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான அன்புச் சகோதரர் செல்வராஜூ அவர்களே,

நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய தென் சென்னை தெற்கு மாவட்டக் கழக இணைச் செயலாளர் அன்புச் சகோதரி நூர்ஜஹான் அவர்களே!

தலைமைக் கழக நிர்வாகிகளே! அமைச்சர் பெருமக்களே! கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களே! உள்ளாட்சிகளின் பிரதிநிதிகளே! கழகத்தின் பல்வேறு  நிலைகளில் பொறுப்பு வகிக்கும்  நிர்வாகிகளே!

வாழ்க்கை என்னும் வானில் வசந்த காலப் பறவைகளாய் கூடிப் பறந்திட இன்று இல்லறம் ஏற்றிருக்கும் மணமக்களே! மணமக்களின் பெற்றோர்களே! உற்றார் உறவினர்களே!

வணக்கத்திற்குரிய பெரியோர்களே! என்னை வாழ வைக்கும் தெய்வங்களாகிய தாய்மார்களே! இதய தெய்வம் எம்.ஜி.ஆரின்  ரத்தத்தின் ரத்தமான என் உயிரினும் மேலான எனதருமைக் கழக உடன்பிறப்புகளே! உங்கள் அனைவருக்கும் முதற்கண் எனது அன்பான வணக்கத்தை  தெரிவித்துக் கொள்கிறேன்.  கழக நிறுவனர், இதய தெய்வம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் நல்லாசியுடனும், தமிழக மக்களின் ஏகோபித்த நல்லாதரவுடனும் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ள உங்கள் அன்புச் சகோதரியின் அரசு, கடந்த ஓராண்டில் மகத்தான சாதனைகளை; மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்றியதோடு, தமிழ் நாட்டை இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக மாற்ற வேண்டும் என்ற குறிக்கோளுடனும், அயராது பாடுபட்டு வருவதை நீங்கள் அனைவரும் நன்கு அறிவீர்கள்.

மகிழ்ச்சிகரமான இந்த மங்கலத் திருநாளில் கழக வளர்ச்சிக்காக தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு அயராது பாடுபட்டு வரும் நான்கு கழக உடன்பிறப்புகளின் இல்லத் திருமணங்களை தலைமை ஏற்று நடத்தி வைக்கின்ற அரிய வாய்ப்பு இன்று எனக்கு கிடைத்துள்ளதை எண்ணி உள்ளபடியே நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.

அரங்கு நிறைய அமர்ந்திருக்கும் அனைவரது வாழ்த்தொலிகளையும் இந்த நன்னாளில் சீதனமாகப் பெற்று இருவர் ஒன்றாகி, இல்லறத்தால் இந்த உலகையே வென்றெடுப்போம் என்னும் மனம் பொருந்திய ஒப்பந்தத்தோடும் உவகையோடும் இங்கே வீற்றிருக்கும் மணமக்களே உங்களுக்கு என் சார்பாகவும்; கழகத்தின் ஒன்றரைக் கோடி தொண்டர்களின் சார்பாகவும்; என் இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன்.

இன்றைய தினம் முதலாவதாக, திண்டுக்கல் மாவட்டக் கழக அவைத் தலைவர் அன்புச் சகோதரர் திண்டுக்கல் சீனிவாசன் நாகேஸ்வரி தம்பதியினரின் மகன் திருநிறைசெல்வன் டாக்டர் பாலுவுக்கும், தேனி மாவட்டம், ஆண்டிபட்டி ஒன்றியம், கே. காமாட்சிபுரத்தைச் சேர்ந்த ஜெயராமன்  விஜயலட்சுமி தம்பதியினரின் மகள் திருநிறைசெல்வி அபிநயாவுக்கும் உங்கள் அனைவரின் நல்வாழ்த்துகளோடு இனிதே திருமணம் நடந்தேறி உள்ளது.

அடுத்ததாக, திருச்சி மாநகர் மாவட்டக் கழகச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான அன்புச் சகோதரர், மனோகரன் -​சாந்தி தம்பதியினரின் மகள் திருவளர்செல்வி கவிதாவுக்கும், திருச்சி மாநகர் மாவட்டம், சங்கிலியாண்டபுரத்தைச் சேர்ந்த  காளிதாஸ் ​-  மங்கையர்க்கரசி தம்பதியினரின் மகன் திருவளர்செல்வன் கார்த்திக்​குக்கும் இனிதே திருமணம் நடந்தேறி உள்ளது.

அதனைத் தொடர்ந்து, சேலம் மாநகர் மாவட்டக் கழகச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான அன்புச் சகோதரர் செல்வராஜூ - கோகிலவாணி தம்பதியினரின் மகள் திருவளர்செல்வி வித்யாவுக்கும், சேலம் மாநகர் மாவட்டம், அம்மாப்பேட்டையைச் சேர்ந்த தெய்வத்திரு பத்மநாபன் - துளசி தம்பதியினரின் மகன்  திருவளர்செல்வன் கமல்நாத்துக்கும் இனிதே திருமணம் நடந்தேறி உள்ளது.

நிறைவாக, பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தொகுதிக் கழகச் செயலாளர் அன்புச் சகோதரர் வெ.முத்தமிழ்ச்செல்வன் -  ஞானமணி தம்பதியினரின் மகன் திருநிறைசெல்வன் மணிவண்ணனுக்கும், அரியலூர் மாவட்டம், அரியலூர் ஒன்றியம், கயாலாபாத்தைச் சேர்ந்த  அ. வேலுச்சாமி ​- மணிமேகலை தம்பதியினரின் மகள் திருநிறைசெல்வி சித்ராவுக்கும் இனிதே திருமணம் நடந்தேறி உள்ளது.

கழகத்தின் மீதும், கழகத் தலைமையின் மீதும் மாறாத விசுவாசம் கொண்டு பணியாற்றி வரும் அன்புச் சகோதரர்கள்  திண்டுக்கல் ஊ. சீனிவாசன், மனோகரன், செல்வராஜூ  மற்றும் ஏ. முத்தமிழ்ச்செல்வன் ஆகியோர் கழகத்திற்காக ஆற்றி வரும் பணிகளை நான் நன்கு அறிவேன்.  இவர்களுடைய இல்லத் திருமணங்களை இன்று நான் தலைமையேற்று நடத்தி வைத்ததில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். திருமணம் என்பது இரண்டு உயிர்கள் ஒன்றை ஒன்று புரிந்து கொண்டு வாழ்க்கையை ஆனந்தமயம் ஆக்குகின்ற அழகிய நிகழ்வு.  உண்மையான அன்பைப் பகிர்ந்துகொள்ள கிடைக்கின்ற அற்புதமான வாய்ப்பு. பெற்றோரைப் பிரிந்து; பிறந்து வளர்ந்த சூழலையும் துறந்து; திருமாங்கல்யம் அணிவிக்கின்ற அந்த நிமிடம் தொடங்கி ஒரு புதிய வாழ்வில் அடியெடுத்து வைக்கும் மணப் பெண்ணை கண்ணின் இமையாகக் காக்க வேண்டிய பொறுப்பு மணமகனுக்கு உண்டு. அது போலவே, கணவனுக்கு சிக்கல் வரும் போது விடையாகவும்; விக்கல் வரும் போது ராகவும் மாறுகின்ற அன்பு மனம் கொண்டவளாக மணமகளும் திகழ வேண்டும். ஒருவரை ஒருவர் புரிந்து ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து இருவருக்கும் இடையிலான உறவை இனிதாக்கிக் கொள்ளல் வேண்டும்.

கடற்கரை ஓரமாக பெரிய மரம் ஒன்று வளர்ந்திருந்தது. அதன் கிளை ஒன்று மிக ண்டு கடல் ருக்கு மேலாக ட்டிக் கொண்டிருந்தது.  அதன் உச்சியில் கடற் குருவி ஒன்று, கூடு கட்டியது.  அதனுள் நான்கு முட்டைகளை இட்டு அடை காத்தும் வந்தது.

ஆண் குருவியும் பெண் குருவியும் அதே கூட்டில் வசித்தபடி தங்கள் குஞ்சுகள் வெளி வரும் நாளை ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்தன.  ஒரு நாள் பெரும் காற்று வீசியது.  அலைகள் பொங்கி எழுந்தன. அப்போது கிளையில் இருந்த கூடு நழுவி காற்றின் வேகத்தில் கடலில் விழுந்து மூழ்கியது.  குருவிகள் மனம் பதறி கதறின. கடல் நீnullரில் கூடு விழுந்த இடத்தைக் குருவிகள் சுற்றிச் சுற்றி வந்தன.  பெண் குருவி மனமுடைந்து அழுதது. எப்படியாவது முட்டைகளை மீண்டும் நாம் காண வேண்டும் இல்லையேல் நான் உயிர் வாழ மாட்டேன் என்றது.

ஆண் குருவி சொன்னது அவசரப்படாதே! ஒரு வழி இருக்கிறது.   நமது கூடு கரையின் ஓரமாகத் தான் விழுந்து மூழ்கி உள்ளது.  தண்ணீரில் கூட்டுடன் விழுந்ததால் முட்டைகள் நிச்சயம் உடைந்திருக்காது.  அதனால், இந்த கடலில் உள்ள தண்ணீரை கொஞ்சம் வற்ற வைத்தால் போதும் முட்டைகளை நாம் மீட்டுவிடலாம் என்றது ஆண் குருவி.  கடலை எப்படி வற்ற வைப்பது? முட்டைகள் பொறிந்து குஞ்சுகள் வெளிவர இன்னும் பல நாட்கள் ஆகலாம்.  எனவே, நாம் இடைவிடாமல் சில நாட்கள் முயல வேண்டும்.  நம் வாயில் கொள்ளும் மட்டும் தண்ணீரை எடுத்துச் சென்று தொலைவில் கொட்டுவோம்.  மறுபடியும் திரும்ப வந்து, மீண்டும் நீரை எடுத்துக்கொண்டு போய் தொலைவில் உமிழ்வோம்.  இப்படியே விடாமல் மொண்டு மொண்டு கொண்டு போய் கடல் ரை வேறு இடத்தில் ஊற்றினால் கடல் நீர்மட்டம் குறைந்து தரை மட்டம் தெரியும்; அப்போது முட்டைகள் வெளிப்படும் என்றது நம்பிக்கையோடு அந்த ஆண் குருவி.

இதையடுத்து இரண்டு குருவிகளும் ஊக்கத்துடன் செயலில் இறங்கின.  விர்றென்று பறந்து போய் தங்களது சிறிய அலகில் இரண்டு விழுங்கு நீரை நிரப்பிக்கொண்டன.  பறந்து சென்று தொலைவில் போய் உமிழ்ந்தன.  மீண்டும் பறந்து வந்து இரண்டு வாய் தண்ணீரை அள்ளின. கொண்டு போய் தொலைவில் கக்கின.  இப்படியே நாள் முழுதும் இடைவிடாமல் நடந்து கொண்டிருந்தது, குருவிகளின் ரகற்றும் படலம்.  அப்போது, அந்தக் கடற்கரை ஓரமாய் மகா சக்திகள் நிரம்பிய மகான் ஒருவர் நடந்து வந்து கொண்டிருந்தார்.  ஆள் இல்லாத அந்த அத்துவானப் பகுதியில் கீச் கீச் என்ற சத்தம் கேட்கவும் திரும்பிப் பார்த்தார்.  இரண்டு குருவிகள் கடலுக்கு மேலே பறந்து தண்ணீரை தன் வாயின் வழியே அள்ளிச் சென்று தொலைவில் போய் உமிழ்வதைப் பார்த்தார்.  உடனே அந்த மகான் கண்களை மூடி அமர்ந்தார்.  உள்ளுக்குள் அமிழ்ந்தார்.  மறுகணம் அவர் மனதில் எல்லா நிகழ்வுகளும் படம் போல் ஓடின.  அவர் மனம் உருகியது.  முட்டைகளை இழந்த தாயின் தவிப்பும்; கடலையே வற்ற வைத்தாவது முட்டைகளை மீட்டு தன் துணையிடம் சேர்ப்பித்துவிட வேண்டும் என்னும் ஆண் குருவியின் தவிப்பும் அவர் உள்ளத்தை நெகிழச் செய்தன.  உடனே தனது தபோ பலத்தை ஒன்று திரட்டிய முனிவர் கையை உயர்த்தினார்.  மறு கணம் கடல் சில அடிகள் பின்வாங்கியது.  அங்கே கூட்டுடன் இருந்த முட்டைகள் தென்பட்டன.  குருவிகள் அதைப் பார்த்து குதூகலத்துடன் கீச்சிட்டவாறே ஆளுக்கொரு முட்டையை அன்போடு பற்றிக்கொண்டு வேறிடத்தில் கொண்டு போய்ச் சேர்த்தன.

நான் அப்போதே சொன்னேன் பார்த்தாயா? நமது ஒரு நாள் உழைப்பில் கடல் nullரையே குறைத்து முட்டைகளை மீட்டு விட்டோம் பார்த்தாயா...? என்றது ஆண் குருவி பெருமிதமாக! முனிவர் புன்சிரிப்போடே அந்த இடத்தில் இருந்து நகர்ந்து சென்றார். குருவிகள் முட்டைகளை மீட்டது அவற்றின் உழைப்பாலா? இல்லை.   முனிவரின் அருளால் தான்.  ஆனால் அந்தக் குருவிகளுக்கோ முனிவர் என்ற ஒருவரைப் பற்றியோ தவ வலிமை என்றால் என்ன என்பது பற்றியோ தெரியாது. அதே சமயம் குருவிகள் மட்டும் கடல் nullரை மொண்டு சென்று ஊற்றிக் கொண்டிருக்காவிட்டால் முனிவர் தம் வழியே போயிருப்பார்! அவரை மனம் நெகிழ வைத்தது குருவிகளின் அபார முயற்சி தான்!  ஆக, இங்கே முட்டைகள் மீட்கப்பட்டது குருவிகளாலும் தான் முனிவராலும் தான்.  முனிவரின் ஆற்றல் அவற்றிற்கு பக்கபலமாக வந்து சேர்ந்தது.  ஆனால் குருவிகளின் உழைப்பு தான் அதற்கு அடிப்படையாக அமைந்தது.

எனவே, நோக்கம் நியாயமானதாக இருந்து நமது முழு ஆற்றலையும் பிரயோகித்து பலனைப் பற்றிக் கவலைப்படாமல் செயலில் இறங்கினால் இறை அருளே பக்க பலமாக வந்து நின்று எந்த மகத்தான சாதனைகளையும் நிகழ்த்த நமக்கு உறுதுணை செய்யும் என்பதை இன்று இரு கரம் பற்றி இருக்கும் மணமக்களுக்கும் சரி; இரு இலையைப் பற்றி இருக்கும் என் உயிரினும் மேலான எனதருமை கழகக் கண்மணிகளுக்கும் சரி; வெற்றி நிச்சயம் என்பதை மட்டும் இந்த நேரத்தில் உங்களுக்கு தெரிவித்துக் கொண்டு,

அண்ணா நாமம் வாழ்க! புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். நாமம் வாழ்க!

என்று கூறி விடை பெறுகிறேன் என்று கூறி முதல்வர் ஜெயலலிதா பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்