முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரணாப் முகர்ஜி நாளை ராஜினாமா

திங்கட்கிழமை, 25 ஜூன் 2012      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, ஜூலை - 25 - ஜனாதிபதி  தேர்தலில் போட்டியிடும் பிரணாப் முகர்ஜி  தனது மத்திய நிதி அமைச்சர் பதவியை நாளை ராஜினாமா செய்கிறார். இந்த தகவலை அவரே நேற்று தெரிவித்தார். அடுத்த மாதம் 19-ம் தேதி நாட்டின்  புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான  தேர்தல் நடைபெற உள்ளது.  இந்த தேர்தலில் காங்கிரஸ்  தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி  வேட்பாளராக மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் இத்தேர்தலில் போட்டியிட வேண்டுமானால் இவர்  தனது மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். அதன்படி  இவர் தனது மத்திய நிதி அமைச்சர் பதவியை நாளை (26 ம் தேதி ) ராஜினாமா செய்கிறார்.  மேற்கு  வங்க மாநிலம் பீர்பூம் மாவட்டத்தில் உள்ள தனது  சொந்த கிராமத்திற்கு சென்ற பிரணாப் முகர்ஜி அங்கு  பத்திரிகையாளர்களிடம் பேசினார். அப்போது அவர்  கூறுகையில் தான் தனது மத்திய நிதி அமைச்சர் பதவியை வருகிற 26 ம்   தேதி ராஜினாமா  செய்யப்போவதாக  கூறினார். மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த பிறகு  தனக்கு ஆதரவாக தான் பிரச்சாரத்தில் ஈடுபட இருப்பதாகவும் அவர்  கூறினார். வருகிற 28-ம்  தேதி தான்  தனது வேட்பு மனுவை தாக்கல் செய்ய இருப்பதாகவும் பிரணாப் முகர்ஜி  கூறினார். காங்கிரஸ் காரியக்கமிட்டியிலிருந்தும் தான் விலகப்போவதாகவும் அவர்  தெரிவித்தார். கொல்கத்தாவிலிருந்து பிரணாப் முகர்ஜி கார் மூலம் தனது  மூதாதையர் கிராமமான  மீராட்டிக்கு  புறப்பட்டு சென்றார். அங்கு அவருக்கு அவரது சொந்த கிராம மக்கள் உற்சாகமான வரவேற்பு கொடுத்தனர். சாலையின் இருமருங்கிலும் திரண்டிருந்த மக்கள் அவரது கார் சென்ற போது மலர்களை  தூவி மகிழ்ச்சி தெரிவித்தனர். பிரணாப் முகர்ஜியை வரவேற்க பழங்குடியின மக்கள்  சார்பில் சிறப்பான  வரவேற்பு  ஏற்பாடுகளும்  செய்யப்பட்டிருந்தன. பிரணாப் முகர்ஜியின் அக்கா அன்னப்பூர்ண தேவியின் ஆசியை பெறுவதற்காக பிரணாப் தனது பூர்வீக கிராமத்திற்கு வருகை புரிந்ததாக அவரது மகன் அபிஜித் முகர்ஜி எம்.எல்.ஏ. கூறினார். பிராணப் முகர்ஜியுடன் மேற்கு வங்க மாநில காங்கிரஸ் தலைவர்  பிரதீப் பட்டாச்சார்யாவும் வந்திருந்தார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்