முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பொருளாதார வீழ்ச்சிக்கு முகர்ஜியே காரணம்: சங்மா

செவ்வாய்க்கிழமை, 26 ஜூன் 2012      இந்தியா
Image Unavailable

 

அமிர்தசரஸ், ஜூன். 26 - இந்திய பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்ததற்கு மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தான் காரணம் என்று ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் பி.ஏ. சங்மா குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து அவர் அமிர்தசரஸில் செய்தியாளர்களிடம் கூறுகையில், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு குறைந்துள்ளது. சர்வதேச கடன் மதிப்பீட்டு பட்டியலில் இந்தியா சரிவை சந்தித்துள்ளது. ஆனால் நாட்டில் விலைவாசி தாறுமாறாக உயர்ந்துள்ளது. நாட்டின் பொருளாதார வளர்ச்சி வெகுவாகக் குறைந்துள்ளது. இவை அனைத்திற்கும் மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தான் காரணம்.

ஒரு நிதியமைச்சராக அவர் திறம்படச் செயல்படவில்லை. பொருளாதாரப் பிரச்சனைகள் வரும் என்று தெரிந்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. பிரச்சனைகள் ஏற்பட்டபோது அதில் இருந்து மீள வழிவகைகள் குறித்து யோசிக்கவும் இல்லை. அரசுத் துறைகளில் ஊழல் மலிந்துள்ளதற்கு பிரதமர் மன்மோகன் சிங்கும் அவரது தலைமையிலான மத்திய அரசும் தான் காரணம். ஆனால் நாட்டின் பொருளாதாரப் பிரச்சனைகளுக்கு நிதியமைச்சர் தான் பொறுப்பேற்க வேண்டும்.

வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கறுப்புப் பணத்தை மீட்போம் என்று கூறினாரே ஒரு முறையாவது இது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றி பிரணாப் ஏதாவது தெரிவித்தாரா? இல்லை கறுப்புப் பண முதலைகளின் பெயர் பட்டியலைத் தான் வெளியிட்டாரா? நாட்டின் பொருளாதாரத்தை வீழ்ச்சியில் தள்ளிவிட்டு தற்போது ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவிருக்கிறார். பொருளாதாரப் பிரச்சனை குறித்து பிராணாபுடன் விவாதிக்க நான் விடுத்த அழைப்பையும் காங்கிரஸ் நிராகரித்துவிட்டது என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்