உலக கோப்பை போட்டி - இந்திய நியூஸ் சேனல்களுக்கு தடை

சனிக்கிழமை, 2 ஏப்ரல் 2011      இந்தியா
icc

 

மும்பை,ஏப்.2 - உலக கோப்பைக்கான கிரிக்கெட் இறுதி போட்டி செய்திகளை சேகரிப்பதற்கு இந்திய தொலைக்காட்சி நியூஸ் சேனல்களுக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தடை விதித்துள்ளது. உலக கோப்பைக்கான கிரிக்கெட் இறுதி போட்டி இன்று மும்பையில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் இந்திய கிரிக்கெட் அணியும் இலங்கை கிரிக்கெட் அணியும் மோதுகின்றன. இந்த போட்டியை ஜனாதிபதி பிரதீபா பாட்டீலும் இலங்கை அதிபர் ராஜபக்சேவும் பார்க்கிறார்கள். 

இந்தநிலையில் கிரிக்கெட் போட்டிக்கு முன்பு நேற்று மும்பையில் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பை இரண்டு அணிகளின் கேப்டன்களான மகேந்திர சிங் தோனியும் இலங்கை குமார் சங்கக்கராவும் இந்திய கிரிக்கெட் சங்க தலைவர் சரத்பவாரும் சேர்ந்து நடத்தினர். இதற்கு நிருபர்கள், புகைப்படக்காரர்கள், தொலைக்காட்சி நிருபர்கள் மற்றும் புகைப்படக்காரர்கள் சென்றனர். இந்த சந்திப்புக்கு வர இந்திய தொலைக்காட்சி செய்தி சேனல்களின் நிருபர்கள் மற்றும் புகைப்படக்காரர்களுக்கு அனுமதி கொடுக்கவில்லை. அடையாள விதிமுறைகளை ஒழுங்காக இந்திய தொலைக்காட்சிகள் செய்தி சேனல்களின் நிருபர்கள் மற்றும் புகைப்படக்காரர்கள் பின்பற்றவில்லை. அதனால் போட்டி நடக்கும் வாங்டே ஸ்டேடியத்தை விட்டு வெளியேறுமாறு அவர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டனர். கிரிக்கெட் போட்டி குறித்து செய்தி தயாரிப்பது தொடர்பாக இந்திய கிரிக்கெட் சங்கத்திற்கும் செய்தி ஒலிபரப்பாளர் சங்கத்திற்கும் இடையே நேற்றுமுன்தினம் இரவு நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது எந்தவித உடன்பாடும் ஏற்படவில்லை. இதே மாதிரியான தடை பிரச்சினையை மொகாலியில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானும் இடையே நடந்த கிரிக்கெட் போட்டியின்போதும் இந்திய தொலைக்காட்சி செய்தி சேனல்களுக்கு ஏற்பட்டது. பின்னர் மத்திய செய்தி மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகம் தலையிட்டு பிரச்சினைக்கு தீர்வு ஏற்பட செய்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்: