முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராணுவ முன்னாள் தலைமை தளபதி வி.கே.சிங் உள்பட 5 பேருக்கு ஜாமீன்

சனிக்கிழமை, 21 ஜூலை 2012      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி,ஜூலை.- 21 - டெல்லி கோர்ட்டில் தொடரப்பட்டுள்ள மானநஷ்ட ஈடு வழக்கில் ராணுவ முன்னாள் தலைமை தளபதி வி.கே. சிங் உள்பட 5 பேருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.  ராணுவ தலைமை தளபதியாக இருந்த வி.கே. சிங், ஓய்வு பெறும் நேரத்தில் பல்வேறு பிரச்சினைகளை எழுப்பினார். தன்னுடைய பிறந்த தேதி 10.5.1951 என்றும் ஓய்வு பெற இன்னும் ஓராண்டு உள்ளது என்றும் கூறிவந்தார். இதை மத்திய அரசு ஏற்கவில்லை. இதனைத்தொடர்ந்து சுப்ரீம்கோர்ட்டிலும் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட சுப்ரீம்கோர்ட்டு விசாரணை முடிவில் வழக்கை வாபஸ் பெறும்படி வி.கே. சிங்கிற்கு உத்தரவிட்டது. இதனையொட்டி வழக்கை வாபஸ் பெற்றார். அதோடுமட்டுமல்லாது இந்திய ராணுவம் பலம் இல்லாமல் இருக்கிறது. பழைய ஆயுதங்களே உள்ளது என்று பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் எழுதினார். அந்த கடிதம் எப்படியோ வெளியாகிவிட்டது. இதுவும் பெரும் பிரச்சினையை எழுப்பியது. அதனையடுத்து ராணுவத்திற்கு தரம் குறைந்த மோட்டார் வாகனங்களை அனுமதித்தால் ரூ.14 கோடி லஞ்சம் தர தெஜிந்தர் சிங் என்ற ராணுவ அதிகாரி கூறியதாகவும் வி.கே. சிங் தெரிவித்தார். இதுவும் பெரும் பிரச்சினையை கிளப்பியுள்ளது. வி.கே. சிங்கின் இந்த குற்றச்சாட்டை எதிர்த்து ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி தெஜிந்தர் சிங் டெல்லி மெட்ரோபாலிடன் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் ஆஜராகும்படி வி.கே. சிங் மற்றும் ராணுவ அதிகாரிகள் லெப்டினெட் ஜெனரல் பி.எஸ். தாகூர், மாஜர் ஜெனரல் எஸ்.எல்.நரசிம்மன், லெப்டினெட் கர்னல் ஹிட்டன்,ஷானே ஆகியோர்களுக்கு நீதிபதி ஜாய் தரேஜா உத்தரவிட்டார். அதன்படி அவர்கள் 5 பேரும் கோர்ட்டில் நேற்று ஆஜரானார்கள். அப்போது அவர்கள் தங்களுக்கு ஜாமீன் வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி தரேஜா, அவர்களுக்கு தலா ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள தனிநபர் பத்திரம் உத்தரவாதம் கொடுக்க உத்தரவிட்டார்.  முன்னதாக தெஜிந்தர் சிங் தாக்கல் செய்துள்ள மனுவில், நான் ரூ.14 கோடி லஞ்சம் கொடுக்க முன்வந்ததாக அவர்கள் கூறியிருப்பதன் மூலம் பதவியை அவர்கள் தவறுதலாக பயன்படுத்தியுள்ளனர் என்று கூறியிருந்தார். இதனையொட்டி அந்த 5 பேரும் கோர்ட்டில் ஆஜராகும்படி கடந்த ஜூன் மாதம் 8-ம் தேதி நீதிபதி தரேஜா உத்தரவிட்டிருந்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்