முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாயாவதி மீதான வழக்கு: மறுபரிசீலனை இல்லை: சி.பி.ஐ

வெள்ளிக்கிழமை, 3 ஆகஸ்ட் 2012      ஊழல்
Image Unavailable

 

புது டெல்லி, ஆக.3 - உத்தர பிரதேச முன்னாள் முதல்வர் மாயாவதிக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கை தள்ளுபடி செய்த சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை மறுபரிசீலனை செய்ய கோரி மனுத்தாக்கல் செய்ய போவதில்லை என்று சி.பி.ஐ முடிவு செய்துள்ளது. உத்தர பிரதேச முன்னாள் முதல்வர் மாயாவதி மீதான தாஜ் வணிக வளாக ஊழல் வழக்கையும், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கையும் சி.பி.ஐ. பதிவு செய்தது. இந்த வழக்குகள் கடந்த 9 ஆண்டுகளாக சுப்ரீம் கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் கடந்த 6ம் தேதி மாயாவதி மீதான மேற்கண்ட வழக்குகளை நீதிபதிகள் பி.சதாசிவம், தீபக் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மேலும் சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த உத்தரவில், நீதிமன்ற உத்தரவின்றி மாயாவதி மீது இந்த வழக்கில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் சி.பி.ஐ தனது அதிகார வரம்பை மீறி செயல்பட்டுள்ளது. தாஜ் வணிக வளாக வழக்கு தொடர்பாக நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை தகுந்த முறையில் புரிந்து கொள்ளாமல் சி.பி.ஐ செயல்பட்டுள்ளது. இந்த ஊழலில் உத்தரப் பிரதேச அரசின் பல அதிகாரிகள் மீது விசாரணை மேற்கொள்ளும்படிசுப்ரீம்கோர்ட் உத்தரவிட்டது.

ஆனால் சொத்துக் குவிப்பு வழக்கில் மாயாவதி மீது தனிப்பட்ட முறையில் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்யுமாறு எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை. எனவே இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது என்ற நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.

இதையடுத்து மாயாவதிக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கை தள்ளுபடி செய்து சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த உத்தரவை மறுபரிசீலனை செய்ய கோரி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்ய போவதில்லை என்று சி.பி.ஐ. முடிவு செய்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்