முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அன்னாஹசாரே குழுவினரின் அரசியல் பிரவேசத்திற்கு சரத்யாதவ் வரவேற்பு

ஞாயிற்றுக்கிழமை, 5 ஆகஸ்ட் 2012      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, ஆக. - 5 - அன்னா குழுவினரின் அரசியல் பிரவேசத்திற்கு  ஐக்கிய ஜனதா தளம் கட்சி தலைவர் சரத் யாதவ் வரவேற்பு  அளித்துள்ளார். மகாராஷ்டிராவை  சேர்ந்த  பிரபல சமூக சேவகர்  அன்னா  ஹசாரே  ஊழலுக்கு எதிரான போராட்டங்களை நடத்தி வருகிறார்.  இவரது  இந்த ஊழலுக்கு  எதிரான குழுவில்  அர்விந்த்  கெஜ்ரிவால், கிரண் பேடி உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்களும்  இடம் பெற்றுள்ளனர். ஊழலுக்கு எதிராக வலுவான லோக்பால் மசோதாவை மத்திய  அரசு கொண்டு  வர வேண்டும் என்பதை வலியுறுத்தி டெல்லியில் கடந்த 11 நாட்களுக்கு  முன்பு  அன்னா ஹசாரே குழுவினர்  காலவரையற்ற உண்ணாவிரதத்தை மேற்கொண்டனர்.  அப்போது இந்த  உண்ணாவிரத போராட்டத்தில்  கலந்து கொண்ட  அன்னா ஹசாரே பேசுகையில் அடுத்து வர இருக்கும் பாராளுமன்ற தேர்தலில்  தங்களது  அமைப்பை  சேர்ந்தவர்கள் வேட்பாளர்களாக  நிறுத்தப்படுவார்கள் என்று அறிவித்தார். ஹசாரேவின் இந்த கருத்துக்கு  அன்னா குழுவில்   சிலர்  ஆதரவு தெரிவித்துள்ள போதிலும்  பலர்  எதிர்ப்பு  தெரிவித்து வருகின்றனர். இருந்தாலும்  அன்னா குழுவினரின் இந்த அரசியல் பிரவேசத்திற்கு  ஐக்கிய  ஜனதா தளம் கட்சியின்  தலைவர் சரத்  யாதவ்  ஆதரவு தெரிவித்துள்ளார். இது குறித்து டெல்லியில் செய்தியாளர்கள் கருத்து கேட்டதற்கு  அவர்கள் ( அன்னா குழுவினர் ) அரசியலுக்கு வந்தால் அதை நாங்கள் வரவேற்கிறோம் என்றார்.  தீவிர அரசியலில் குதிப்பதற்கு  இந்திய  ஜனநாயகத்தில் ஒவ்வொருவருக்கும் உரிமை இருக்கிறது. அதே போல அரசியல் கட்சியை துவக்குவதற்கும்  அவர்களுக்கு  உரிமை இருக்கிறது என்று சரத் யாதவ்  கூறினார். பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் ஒருங்கிணைப்பாளரும்  ஐக்கிய  ஜனதா தளம் கட்சியின்  தலைவருமான சரத் யாதவிடம்  தேசிய ஜனநாயக கூட்டணியில் சேரும்படி  அன்னா குழுவினருக்கு  அழைப்பு  அனுப்பப்படுமா என்று கேட்டதற்கு  அவர் கருத்து கூற மறுத்து விட்டார். மத்திய புலனாய்வு துறையான சி.பி. ஐ.க்கு சுதந்திரமான அந்தஸ்து வழங்க வேண்டும், தற்போதைய தேர்தல் முறைகளில்  மாற்றங்களை கொண்டு வர வேண்டும்  என்ற அன்னா ஹசாரேவின்  கோரிக்கைகளை  ஆதரிப்பதாகவும் அவர்  தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்