முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கபாலீசுவரர் கோவிலுக்கு சொந்தமான நிலம் மீட்பு

வெள்ளிக்கிழமை, 10 ஆகஸ்ட் 2012      ஆன்மிகம்
Image Unavailable

 

சென்னை, ஆக.10 - சமூக விரோத கும்பலிடமிருந்து கபாலீசுவரர் கோவிலுக்கு சொந்தமான ரூ.25 கோடி மதிப்புள்ள நிலம் மீட்கப்பட்டது என்று கோவிலின் துணை ஆணையர் செயல் அலுவலர் காவேரி கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள  ஒரு அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சென்னை-4, மயிலாப்பூர், அருள்மிகு கபாலீசுவரர் திருக்கோயிலுக்குச் சொந்தமானதும், சென்னை-15,  சைதாப்பேட்டை, கொத்தவால்சாவடி தெரு, கதவு எண்.117 மற்றும் 119 உள்ள சுமார் 4 கிரவுண்ட் 558 சதுரஅடி பரப்பளவுள்ள இடத்தின் ஒரு பகுதியில் சுமார் 1449 சதுரஅடி பரப்பளவுள்ள, சுமார் ரூ.25 கோடி சந்தை மதிப்புள்ள மனைப்பகுதி டி.திருநாவுக்கரசு என்பவருக்கு வாடகைக்கு விடப்பட்டிருந்தது. மேற்படி நபர் இறந்துவிட்டதால் அன்னாரின் வாரிசுதாரர் டி.நந்தகுமார் என்பவர் வாடகை செலுத்தி வந்தார். இருப்பினும் இந்த மேற்படி இடம் வாடகைதாரர் பயன்படுத்தப்படாமல் சமூக விரோதிகள் சிலர் மது அருந்துவது, சூதாட்டம் போன்ற செயல்களில் ஈடுபடுவதாக திருக்கோயிலுக்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்தன.

இந்நிலையில் இந்த மேற்படி இடத்தில் சூதாட்டம் நடைபெறுவதாக ஒரு நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. எனவே, திருக்கோயில் நலன் கருதி இந்த திருக்கோயிலுக்குச் சொந்தமான இடத்தினை 8.8.12 அன்று சுவாதீனம் எடுக்கவும், ஆக்கிரமிப்பாளர்களை வெளியேற்றவும் திருக்கோயில் தக்கார் பி.விஜயகுமார்  ரெட்டி, இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் முனைவர் மூ.ராஜாராம், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் மற்றும் கூடுதல் ஆணையர் தனபால் ஆகியோரின் அறிவுரை பெறப்பட்டது.

அங்கு சென்று ஆய்வு மேற்கொண்டபோது, இவ்விடத்தின் பின்பக்கச் சுற்றுச் சுவர் இடிக்கப்பட்டு சமூக விரோதிகள் நடமாட்டம் இருந்ததற்கான அறிகுறிகள் காணப்பட்டது. இருப்பினும் எந்த ஒரு நபர்களும் இல்லை என்பதால் காவல்  துறை உதவி ஆணையர் மற்றும் சைதாப்பேட்டை காவல்துறை ஆய்வாளர் ஆகியோரின் ஒத்துழைப்புடன் இடம் கையகப்படுத்தப்பட்டது. சமூக விரோதிகளால் பயன்படுத்தப்பட்ட பொருட்கள் அகற்றப்பட்டு இவ்விடத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. மேலும் இவ்விடத்தினை பாதுகாத்திட உடனடியாக பின்புறம் சுமார் 15 அடி தூரத்திற்கு உடைக்கப்பட்ட மதில் சுவர் கட்டும் பணிக்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இவ்வாறு காவேரி அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்