முக்கிய செய்திகள்

தி.மு.க.வின் தோல்வி கின்னஸ் சாதனையில் இடம்பெறவேண்டும்-பரமக்குடியில் ஜெயலலிதா பேச்சு

5jaya

 

பரமக்குடி, ஏப்.- 6 - தி.மு.க. கூட்டணியின் தோல்வி கின்னஸ் சாதனையில் இடம் பெற வேண்டும் என்று தேர்தல் பிரச்சாரத்தின் போது அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா பேசினார்.

பரமக்குடி, மானாமதுரை, திருவாடானை, ராமநாதபுரம் ஆகிய தொகுதிகளில் அ.தி.மு.க மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பரமக்குடியில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது, தமிழகத்தை காப்பாற்ற வேண்டிய கோரிக்கையுடன் உங்களிடம் நான் வந்துள்ளேன். கருணாநிதியின் குடும்பம் தமிழகத்தை சூறையாடி சொத்துக்களை குவித்து வருகிறது. தமிழகத்தில் மின்வெட்டு, விலைவாசி உயர்வு, ரவுடியிசம், மணல் கொள்ளை, உலகமகா ஊழல் உள்பட அனைத்தும் அரங்கேறி வருகின்றன. இது போன்ற தமிழகத்தில் தலைவிரித்தாடும் பிரச்சனைகளை மீட்டெடுக்க இதுவே தகுந்த நேரம். பொதுச்சொத்துக்களை அபகரித்து கருணாநிதி தனது குடும்ப சொத்துக்களை வளர்த்துக்கொண்டு வருகிறார். பொருளாதார வளர்ச்சி, சட்டம் ஒழுங்கு ஆகியவற்றில் முன்னணியில் இருந்த தமிழகம் கருணாநிதி ஆட்சியில் பின்நோக்கி சென்று விட்டது. கருணாநிதி கோடிகோடியாக தநது குடும்பத்தினருக்கு ஒதுக்கிக்கொண்டு தமிழகத்தை 1லட்சம் கோடி கடனாளி ஆக்கிவிட்டார். மத்தியிலும், மாநிலத்திலும் நடக்கும் ஆட்சியினை பயன்படுத்திகொண்டு கருணாநிதியின் குடும்பம் உலக பணக்காரர்கள் பட்டியலில் இடம்பிடித்துக்கொண்டது. எளிய மாநிலங்களான பீகார், பஞ்சாப், குஜராத்தை விட குறைந்த வளர்ச்சி நிலைக்கு தமிழகம் தள்ளப்பட்டுவிட்டது. தலைமுறை தலைமுறையாக உழைப்பவர்கள் எல்லாம் துன்பப்படும் போது உழைக்காமல் கருணாநிதியின் குடும்பம் மட்டும் எப்படி பணக்காரர்கள் ஆனார்கள். இதற்கு சரியான பாடம் புகட்ட அனைத்து தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி படுதோல்வி அடைந்து கின்னஸ் சாதனை என்ற பட்டியலில் கருணாநிதி குடும்பம் இடம்பெற செய்யவேண்டும். வக்பு வாரியத்திற்கு சொந்தமான இடங்கள் தி.மு.க.வினரிடம் இருந்து கைப்பற்றப்பட்டு இஸ்லாமிய மக்களின் மேம்பாட்டிற்கு பயன்படுத்தப்படும். பரமக்குடியில் தி.மு.க. ஆட்சியில் முடக்கப்பட்ட பாதாள சாக்கடை திட்டம் அமைக்கப்படும். பஸ்நிலையம் புதிப்பிக்கப்படும், சட்டம், ஒழுங்கு பாதுகாக்கப்படும். செய்த தவறுகளுக்காக கருணாநிதி குடும்பம் தண்டிக்கப்படவேண்டும். அதற்கு பொன்னான நேரம் இது தான். தற்போது கருணாநிதியின் ஒரு குடும்பம் மட்டும் வாழ்கிறது. எல்லோரும் வாழ அ.தி.மு.க. கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும்.

இந்த பிரச்சாரத்தின் போது முன்னாள் அமைச்சர்கள் அன்வர் ராஜா, வ.து. நடராஜன், மாவட்ட செயலாளர் ஆனிமுத்து மற்றும் முக்கிய நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஜெயலலிதா வருகையின் போது ஏராளமானோர் சாலையின் இருபுறமும் நின்று இரட்டை இலை சின்னத்தை காட்டி வரவேற்பளித்து ஆரவாரம் செய்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்: