முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இயற்கை தாவரங்கள் இறக்குமதிக்கு லஞ்சம்: 5 பேர் கைது

வெள்ளிக்கிழமை, 31 ஆகஸ்ட் 2012      ஊழல்
Image Unavailable

 

சென்னை, ஆக.31 -​மத்திய வேளாண்மை துறையின் கட்டுப்பாட்டில் மத்திய தாவர பாதுகாப்பு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. வெளிநாடுகளில் இருந்து இயற்கை விளை பொருட்களை இறக்குமதி செய்யும் போதும், இந்தியாவில் இருந்து பொருட்களை ஏற்றுமதி செய்யும் போதும், தாவர பாதுகாப்பு நிறுவன அதிகாரிகளிடம் தடையில்லா சான்றிதழ் பெறவேண்டும்.

ஏற்றுமதி அல்லது இறக்குமதி செய்யப்படுபவை உணவுப் பொருட்களாக இருந்தால், அதனை இந்த அதிகாரிகள், தீவிரமாக பரிசோதிப்பார்கள். தொற்று நோய்களை பரப்பும் கிருமிகள், குறிப்பிட்ட உணவு பொருட்களில் இருக்கிறதா? அவைகள் தரமானவையாக உள்ளனவா? என்பது பற்றி ஆய்வு செய்து சான்றிதழ் கொடுப்பதுதான் இவர்களின் பணியாகும்.

சென்னை மீனம்பாக்கத்தில், இயற்கை பொருட்களை இறக்குமதி செய்யும் நிறுவனத்தை நடத்தி வரும் கேரளாவை சேர்ந்த ஸ்ரீவத்சன் என்பவர், தாய்லாந்தில் இருந்து அரிய வகை தாவரங்களை இறக்குமதி செய்தார். கண்டெய்னர் மூலமாக சென்னை துறைமுகத்துக்கு கொண்டு வரப்பட்ட இந்த தாவரங்களை, வெளியில் கொண்டு வருவதற்காக ஸ்ரீவத்சன், மத்திய தாவர பாதுகாப்பு நிறுவனத்தை அணுகினார். நிறுவனத்தின் உதவி திட்ட அலுவலர் கே.டி, சுரேஷ், ரூ.2 ஆயிரம் லஞ்சம் கொடுத்தால், தடையில்லா சான்றிதழ் தருவதாக கூறியுள்ளார்.

இதுபற்றி ஸ்ரீவத்சன், சி.பி.ஐ. ஊழல் தடுப்பு பிரிவில் புகார் செய்தார். இதன் பேரில் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி சுரேசை கைது செய்தனர். இதைத் தொடர்ந்து மத்திய தாவர பாதுகாப்பு நிறுவனத்தின் துணை இயக்குனர்கள் ஜஸ்பீர்சிங், டாக்டர் இளங்கோவன், உதவி இயக்குனர் ஞானசம்பந்தன், உதவி திட்ட அலுவலர் ஆர்.கே. ஜெயின் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பின்னர் சி.பி.ஐ. கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட 5 பேரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். லஞ்ச புகாரில் கைதான அனைவரும் கோடிக்கணக்கில் சொத்துக்களை வாங்கி குவித்துள்ளனர். இதுபற்றி சி.பி.ஐ. அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்