முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நிலக்கரியை இறக்குமதி செய்ததால் ரூ.18 லட்சம்கோடி வருவாய்இழப்பு

திங்கட்கிழமை, 10 செப்டம்பர் 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, செப்.- 10 - குத்தகை எடுத்த சுரங்கங்களில் நிலக்கரியை வெட்டி எடுக்காமல் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்த காரணத்தால் அரசுக்கு ரூ.18 லட்சத்து 100 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக அகில இந்திய கணக்கு தணிக்கை ஊழியர் சங்கத் தலைவர் துரைபாண்டியன் தெரிவித்தார்.  நிலக்கரி ஊழல் தொடர்பாக அகில இந்திய கணக்குத் தணிக்கை ஊழியர் சங்கத் தலைவர் எம்.துரைபாண்டியன் சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

அண்மையில் வெளியான நிலக்கரி ஊழல் குறித்தும் பல அடுக்குகளாக தணிக்கை செய்து பல நிலை அதிகாரிகளின் விளக்கங்களுடன் சேர்த்து அறிக்கை தயார் செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.  இந்த அறிக்கை குறித்து அனைத்து கட்சி உறுப்பினர்களும் பங்கேற்று விவாதம் நடத்தலாம். சி.ஏ.ஜி.யை நேரடியாக அழைத்தும் விளக்கம் கேட்கலாம். இந்த நடைமுறையை பின்பற்றாமல் ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும், அமைச்சர்களும், பிரதமரும் சி.ஏ.ஜி.யை குறை கூறுவது ஜனநாயகத்துக்கும், இந்திய அரசியல் அமைப்புக்கும் புறம்பானது.  இதுவரை ஊடகங்களில் இருந்து பெறப்பட்ட தகவல்களின்படி கட்சி பாகுபாடில்லாமல் பல அரசியல் தலைவர்கள் பினாமி பெயரில் குறைந்த தொகை மற்றும் இலவசமாகவும் குத்தகை எடுத்துள்ளனர் என தெரிய வந்துள்ளது. அப்படி குத்தகை எடுத்த 28 சுரங்கங்களில் மட்டும் 34.64 டன் நிலக்கரி எடுக்கப்பட்டுள்ளது. 68 சுரங்கங்களில் நிலக்கரி எடுக்கப்படவில்லை. காலம் தாழ்த்தினால் விலையேற்றம் வரும். அப்போது எடுத்துக் கொள்ளலாம் என குத்தகைதாரர்கள் நிறுத்தி வைத்துள்ளனர். மீதமுள்ள 116 சுரங்கங்களில் உள்ள 49 ஆயிரத்து 790 மில்லியன் டன் நிலக்கரியை எடுப்பதற்கு அனுமதி இல்லை.  இந்திய நிலக்கரி நிறுவனம் சாதாரணமாக விற்கும் விலை ஒரு டன் ரூ.295.41. ஏல விலையில் அதிகபட்சமாக ரூ.1782. இந்த விலைக்கு இந்தியாவில் நிலக்கரி எடுக்காமல் வெளிநாடுகளில் இருந்து ஒரு டன் ரூ.2874-க்கு இறக்குமதி செய்யப்படுகிறது. 

இந்த அடிப்படையில் உண்மையான விலைக்கும், ஏல விலைக்கும் கணக்கிட்டு பார்த்தால் அரசுக்கு வரவேண்டிய வருவாய் இழப்பு ரூ.18 லட்சத்து 100 கோடி இருக்கும் என்றார். இவ்வாறு அவர் கூறினார்.        

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்