முக்கிய செய்திகள்

அமைச்சர் கைது குறித்து கோவா சட்டசபையில் எதிர்க்கட்சிகள் அமளி

வியாழக்கிழமை, 7 ஏப்ரல் 2011      இந்தியா
goa assembly

 

பனாஜி, ஏப்.- 7 - கோவா கல்வி அமைச்சரை மும்பை விமான நிலையத்தில் அதிகாரிகள் கைது  செய்தது தொடர்பாக அம்மாநில சட்டசபையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் சபை ஒத்திவைக்கப்பட்டது. கோவா மாநில கல்வி அமைச்சர் அடனாசியோ மான்சரேட் சமீபத்தில் மும்பை விமான நிலையத்திற்கு சென்றிருந்த போது அங்கு அவரை சுங்க இலாகா அதிகாரிகள் கைது செய்தனர்.

அளவுக்கு அதிகமாக அமெரிக்க  மற்றும் இந்திய கரன்சி நோட்டுக்களை அவர் வைத்திருந்ததாக கூறி அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.

இந்த சம்பவம் குறித்து  விவாதிக்க வேண்டும் என்று கோரி, கோவா சட்டசபையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோரிக்கை வைத்தனர். 

இந்த  சம்பவம் குறித்து சபையில் விவாதிக்க ஒத்தி வைப்பு தீர்மானம் ஒன்றை பா.ஜ.க. தலைமையிலான எதிர்க்கட்சிகள் கொண்டு வந்தன. ஆனால் ஒத்திவைப்பு தீர்மானத்திற்கு சபாநாயகர் அனுமதி மறுத்தார்.

இது குறித்துதான்  இந்த சபையில் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்ய முதல்வர் திகம்பர் காமத் ஒப்புக்கொண்டார். ஆனால் அதை ஏற்க எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மறுத்துவிட்டனர்.

அமைச்சர் மான்சரேட்டை பதவி நீக்கம் செய்ய  வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் மனோகர் பரிக்கார் கோரிக்கை விடுத்தார்.

ஆனால் அதை அரசு நிராகரித்தது.

இதை அடுத்து எதிர்க்கட்சியினர் தங்களது கோரிக்கையை வலியுறுத்தி தொடர்ந்து சபையில் அமளியில் ஈடுபட்டனர். இதை அடுத்து சபையை சபாநாயகர் பிற்பகல் வரை ஒத்திவைத்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: