முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2 ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம்:அனில் அம்பானியிடம் பிஏசி விசாரணை

வியாழக்கிழமை, 7 ஏப்ரல் 2011      ஊழல்
Image Unavailable

 

புது டெல்லி,ஏப்.- 7 - நாட்டுக்கு ரூ. 1.76 லட்சம் கோடி இழப்பை ஏற்படுத்தியதாக கூறப்படும் 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக தமிழக முதல்வர் கருணாநிதியின் மகளும், தி.மு.க. எம்.பியுமான கனிமொழி மீது வரும் 25 ம் தேதிக்குள் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  இ.பி.கோ. 120 பி பிரிவின் கீழ் கிரிமினல் சதித் திட்டம் தீட்டியதாக மத்திய புலனாய்வுத் துறை கனிமொழி மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யவிருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2009 - 10 ம் ஆண்டில் கலைஞர் தொலைக்காட்சிக்கு டி.பி. ரியாலிட்டியின் துணை நிறுவனம் மூலமாக ரூ 214 கோடி கைமாறிய விவகாரம் தொடர்பாக இந்த குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படுகிறது. 

கலைஞர் டி.விக்கு கைமாறிய ரூ 214 கோடி முதலில் குசேகான் ரியாலிட்டி நிறுவனத்திடம் இருந்து சினி யுக் பிலிம்ஸ் லிமிடெட் என்ற நிறுவனத்துக்கு கைமாறியதாம். அதன் பிறகுதான் கலைஞர் டி.விக்கு கைமாறி உள்ளது. முன்னதாக, சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் ஜி.எஸ். சிங்வி, ஏ.கே. கங்குலி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு ஆஜரான மூத்த வழக்கறிஞர் கே.கே. வேணுகோபால் கூறுகையில், 

மத்திய புலனாய்வுத் துறையும், அமலாக்கப்பிரிவு இயக்குனரகமும் ரூ. 214 கோடி கைமாறிய விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தியதாக தெரிவித்தார். இந்த தொகை கலைஞர் டி.விக்கு டி.பி. ரியாலிட்டி மூலம் கடனாக கொடுக்கப்பட்டதா? அல்லது அலைவரிசைக்காக லஞ்சமாக கொடுக்கப்பட்டதா? என்பது பற்றி விசாரணை நடத்தப்பட்டதாக வேணுகோபால் சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்தார். கலைஞர் டி.விக்கு ரூ 214 கோடி கைமாறிய விவகாரம் அம்பலத்துக்கு வந்தவுடனேயே அவர்கள் சாக்குப்போக்கு சொன்னார்கள். அதாவது, இந்த தொகை கடனாக பெறப்பட்டதாகவும், பின்னர் திருப்பிக் கொடுக்கப்பட்டதாகவும் அவர்கள் சொல்கிறார்கள். ஆனால் மிக தாமதமாகத்தான் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்று வேணுகோபால் சுட்டிக் காட்டினார். 

ஸ்பெக்ட்ரம் ஊழலில் இந்த நாட்டுக்கு ரூ. 1.76 லட்சம் கோடி இழப்பை ஏற்படுத்திய ராசா தற்போது திஹார் சிறையில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார். கடந்த 2 ம் தேதி அவர் மீதும் மற்றும் 8 பேர் மீதும் சி.பி.ஐ. தனது முதல் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்தது. கிட்டத்தட்ட 80 ஆயிரம் பக்கங்களை கொண்ட குற்றப்பத்திரிக்கையை சி.பி.ஐ. அன்றைக்கு தாக்கல் செய்தது. இந்த நிலையில் இந்த வழக்கில் கூடுதல் குற்றப்பத்திரிக்கையும் தாக்கல் செய்யப்படுகிறது. அநேகமாக இந்த கூடுதல் குற்றப்பத்திரிக்கை வரும் 25 ம் தேதிக்குள் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது தமிழக சட்டசபை தேர்தல் முடிந்து 2 வாரங்களுக்கு பிறகு இந்த கூடுதல் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும். அந்த குற்றப்பத்திரிக்கையில் கனிமொழியின் பெயரும், கலைஞர் டி.வியின் நிர்வாக இயக்குனர் சரத்குமார் ரெட்டியின் பெயரும் சேர்க்கப்படும் எனத் தெரிகிறது. 

கனிமொழிக்கு நெருக்கமானவர்கள் மீதும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் என்று தெரிகிறது.  இருந்தாலும் கருணாநிதியின் துணைவியார் தயாளு அம்மாளின் பெயர் இந்த குற்றப்பத்திரிக்கையில் இடம் பெறாது என்றே தெரிகிறது. மத்திய புலனாய்வு துறை அதை தவிர்த்து விடும் என்றே டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. காரணம், கலைஞர் தொலைக்காட்சியின் அன்றாட விவகாரங்களில் தயாளு அம்மாளுக்கு தீவிர பங்கு இல்லை என்று புலனாய்வு துறை கருதுவதால் அவரது பெயரை குற்றப்பத்திரிக்கையில் சி.பி.ஐ. சேர்க்காது என்றே அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. கலைஞர் தொலைக்காட்சிக்கு ரூ 214 கோடி கைமாறிய விவகாரத்தில் கனிமொழியும், சரத்குமாரும்தான் முக்கிய குற்றவாளிகளாக கருதப்படுகிறார்கள். இவர்கள் இருவருக்கும் அந்த தொலைக்காட்சியில் 20 சதவீத பங்குகள் இருப்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதே நேரம் தயாளு அம்மாளுக்கு 60 சதவீத பங்குகள் உள்ளதாம். ஆனாலும் அவரது பெயர் குற்றப்பத்திரிக்கையில் இடம் பெறாது என்றே தெரிகிறது. கனிமொழி மீது குற்றப்பத்திரிக்கை வெகு விரைவில் தாக்கல் செய்யப்படவிருப்பதால் கருணாநிதியின் குடும்பம் தற்போது கலக்கத்தில் இருப்பதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தற்போது நடந்து வரும் தேர்தல் பிரச்சாரத்தில் எதிர்க்கட்சிகளின் பிரச்சாரமே இந்த ஸ்பெக்ட்ரம் ஊழல்தான். மேடைகளில் பேசும் அனைத்து தலைவர்களுமே ஸ்பெக்ட்ரம் ஊழல், மின்வெட்டு, விலைவாசி உயர்வு போன்றவை பற்றித்தான் மூலைக்கு மூலை பேசி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!